சாதமும் சாம்பாரும் சமைத்துவிட்டேன். கூட, ‘முட்டை வறுவல்’ செய்யலாம் என்று தோன்றியது.
உடனே இரண்டு முட்டைகளை எடுத்து கடாயில் இட்டு தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தினேன்.
சில நிமிடங்களில் முட்டை ஓட்டில் விரிசல்களை காண முடிந்தது. முட்டைகள் வெந்து விட்டன.
அடுப்பை அணைத்துவிட்டு, கடாயில் இருந்த அவிந்த முட்டைகளை எடுக்க முயன்றேன். அதிக வெப்பத்தை உணர்ந்தேன்.
பின்னர், கடாயில் இருந்த சூடான நீரை வெளியே எடுத்துவிட்டு, குழாய் நீரை அதில் ஊற்றினேன். சில நிமிடங்கள் அங்கேயே நின்று கொண்டிருந்தேன்.
“என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க?”
கடாயில் இருந்த நீர் ததும்பிக் கொண்டிருந்தது.
“நீர் தானே?”
“ஆமாங்க. நான் தான். என்ன பண்றீங்க?”
“முட்டைய குளிர்விக்கிறேன்.”
“என்ன?”
“அதாவது, முட்டையில இருக்கும் சூட்ட வெளிய எடுக்குறேன்.”
“எப்படி?”
“அடடா… தண்ணீருல முட்டைகளை போட்டு நல்ல கொதிக்க விட்டேன். அந்த வெப்பத்துல முட்டை அவிஞ்சிப் போச்சு. சூட்டோட முட்டை ஓட நீக்க முடியாதே. அதான், சூடான முட்டைகளை நீருல போட்டிருக்கேன். முட்டையில இருக்கும் சூடு நீருல போயிடும். அதனால முட்டை குளிர்ந்திடும். இப்ப புரிஞ்சுதா?”
“ஓ…ஓ… முட்டைய சூடாக்கி அவிக்கிறதுக்கும் நான் தான் வேணும். சூடான முட்டைய குளிர்விக்கிறதுக்கும் நான் தான் வேணுமா? ஆக, எல்லாத்துக்கும் நான் தான் முக்கியம். சரி தானே?”
“ஆமாம்.. ஆமாம்…. நீ சொன்னா தப்பா இருக்குமா?”
“என்ன சார்?”
“நான் ஒன்னும் குறை சொல்லலையே”
“இருக்கட்டும் விடுங்க. எனக்கு ஒரு சந்தேகம். சூடா இருக்கும் பொருட்களை எப்படி என்னால குளிர்விக்க முடியுது?”
“நல்ல கேள்வி”
“உண்மையாத்தான் சொல்றீங்களா?”
“ஆமாம். உனக்கு குளிர்விக்கும் பண்பு இருக்கு. அதுக்கு முன்னாடி, குளிர்விப்பான் அப்படின்னா என்னன்னு நீ தெரிஞ்சுக்கணும்.”
“சொல்லுங்க”
குளிர்விப்பான் என்றால் என்ன?
“குளிர்விப்பான் என்பது ஒரு பொருளோட வெப்பநிலையைக் குறைக்க அல்லது கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் வேதிப்பொருளாகும். இது பொதுவாக திரவ அல்லது வாயு நிலையில் இருக்கலாம்.
அத்தோட, ஒரு வேதிப்பொருள் சிறந்த குளிர்விப்பானா இருக்கணும்னா அதற்கு அதிக வெப்ப ஏற்புத்திறனும், குறைந்த பாகுத்தன்மையும் இருக்கணும். மேலும், குளிர்விப்பான், நச்சுத்தன்மையற்றதாகவும், இரசாயன ரீதியாக செயலற்றதாகவும் இருக்கணும். குளிர்விப்பான் விலை மலிவானதாக இருக்கறது ரொம்ப முக்கியம்.”
“சரி சார். நான் எப்படி குளிர்விப்பானா செயல்படுறேன்?”
“சொல்றேன்… இப்ப சொன்னா மாதிரி, ஒரு சிறந்த குளிர்விப்பானோட வெப்ப ஏற்புத்திறன் அதிகமா இருக்கணும்.
வெப்ப ஏற்புத்திறன் என்பது, ஒரு கிராம் பொருளின் வெப்பநிலையை ஒரு டிகிரி செல்சியஸ் அளவுக்கு உயர்த்த தேவையான வெப்ப ஆற்றலைக் குறிக்கிறது.
நீரோட வெப்ப ஏற்புத்திறன் 4.186 J/g °C ஆகும். இது ஒப்பீடளவுல அதிகம் தான். அதனால சூடான பொருள்ல இருக்கும் வெப்பத்தை நீரால உறிஞ்சிக்க முடியும். அப்போ, அந்தப் பொருளேட வெப்பநிலை குறையும். இப்படித்தான் நீ குளிர்விப்பானாக செயல்படுற.”
“சரி சார். ரொம்ப சூடு பண்ணீங்கன்னா, நான் திரவநிலையில இருந்து ஆவியா மாறிடுவேனே.”
“ஆமாம், இதை ‘ஆவியாதல் வெப்பம்’ அப்படீன்னு சொல்லுவாங்க. அதாவது, ஒரு கிராம் திரவப் பொருள் ஆவியாக மாறுவதற்கு உறிஞ்சப்படும் வெப்பத்தை தான், ஆவியாதல் வெப்பம்னு வரையறை செஞ்சிருக்காங்க.”
அப்பொழுது எனக்கு வியர்க்க தொடங்கியது.
“ரொம்ப வியர்க்குதா?” என நீர் கேட்டது.
நெற்றியின் ஓரத்தில் வடிந்த வியர்வை துளிகளை துடைத்துக் கொண்டேன். உடனே, ‘வியர்வை என்பது உடலை குளிர்விக்கும் ஒரு அடிப்படை வழிமுறை’ என்பது என் நினைவிற்கு வந்தது.
“என்ன யோசிக்கிறீங்க?”
“இப்ப எனக்கு வேர்க்குதே. இதுவும் நீ குளிர்விப்பானாக செயல்படுவதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு தான்.”
“அப்படியா?”
“ஆமாம். நீர் ஆவியாவதற்கு வெப்ப வேணும்ல”
“ஆமாம்.”
“வியர்வை உடலில் இருந்து உறிஞ்சிக்கிட்டு ஆவியாகுது. இதனால….”
“சட்டென, உடலோட வெப்பம் தணியுது. சரி தானே?” என்றது நீர்.
“சிறப்பு…. சரியா சொன்ன” என்று கூறினேன்.
“வேற எங்க நான் குளிர்விப்பானாக பயன்படுறேன்?”
“தூய்மையான நீர், உயர்-சக்தி டிரான்ஸ்மிட்டர்கள் ‘high-power transmitters’ மற்றும் உயர்-சக்தி வெற்றிட குழாய்கள் ‘high-power vacuum tubes’ போன்ற மின்சாதனங்களை குளிர்விக்கப் பயன்படுது. மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் அணு உலைகளிலும் கன நீர குளிர்விப்பானாக பயன்படுத்தியிருக்காங்க.”
“நல்லது சார். நேரம் ஆயிடுச்சு. அப்ப நான் கிளம்புறேன்” என்று சொல்லி சென்றது நீர்.
“சரி அப்புறம் பேசலாம்” என்று கூறி, முட்டை வறுவல் செய்வதற்கு தயாரானேன்.
(உரையாடல் தொடரும்)

கனிமவாசன்
சென்னை
கைபேசி: 9941091461
மின்னஞ்சல்: drsureshwritings@gmail.com
நீர் வாழிடம் – நீருடன் ஓர் உரையாடல் – 29
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!