குளுகுளு கொடை ஆரஞ்சு

கொடை ஆரஞ்சு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் மிகவும் விரும்பப்படும் பழம் ஆகும். இதனுடைய இனிப்பு சுவையுடன் கூடிய சாறும், அடர்ந்த ஆரஞ்சு நிறமுமே இதற்கு காரணமாகும்.

இப்பழத்தின் தோலானது ஏனைய ஆரஞ்சுப் பழங்களைவிட குமிழிகள் நிறைந்து மிருதுவாகவும், உரிப்பதற்கு எளிதாகவும், தடிமன் குறைந்ததாகவும் இருக்கிறது.

இப்பழத்தின் தோலில் உள்ள எடுக்கப்படும் எண்ணெயானது வாசனை திரவியங்கள் தயாரிப்பிலும், சருமபாதுகாப்பு பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது.

இது பெரும்பாலும் குளிர்காலத்தின் முடிவு மற்றும் வசந்த காலத்தின் தொடக்கத்தில் அதிகளவு கிடைக்கிறது. இது வெப்ப மற்றும் மிதவெப்ப மண்டலத்தில் வளரும் இயல்பினைக் கொண்டுள்ளதால் இது வெப்ப காலநிலைக்கான பழம் என்று அழைக்கப்படுகிறது.

இது மற்ற ஆரஞ்சு பழத்தினைவிட அளவில் சிறியதாக இருக்கிறது.
கொடை ஆரஞ்சானது ருடாசியேயி என்ற தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. இதனுடைய அறிவியல் பெயர் சிட்ரஸ் ரெக்கியூலட்டா என்பதாகும்.

கொடை ஆரஞ்சின் அமைப்பு மற்றும் வளரியல்பு

கொடை ஆரஞ்சானது அடர்ந்த குறுமரவகை தாவரத்திலிருந்து பெறப்படுகிறது. இம்மரமானது வறட்சியைத் தாங்கி வளரும். ஆனால் குளிரானது இம்மரத்திலிருந்து கிடைக்கப்பெறும் பழத்தினை பாதிப்படையச் செய்கிறது.

இம்மரமானது 3-5 மீ உயரத்தில் முட்களோடு கூடிய கிளைகளைக் கொண்டுள்ளது. இதனுடைய இலைகள் 6 முதல் 8 செமீ நீளத்தில் நீள்வட்ட வடிவில் காணப்படுகிறது.

 

கொடை ஆரஞ்சு மரம்
கொடை ஆரஞ்சு மரம்

 

கொடை ஆரஞ்சு மரம்
கொடை ஆரஞ்சு மரம்

 

இதில் வெள்ளை நிறத்தில் 3-5 இதழ்களுடன் கூடிய பூக்கள் பூக்கின்றன.

 

கொடை ஆரஞ்சு பூ
கொடை ஆரஞ்சு பூ

 

இப்பூக்களிலிருந்து 5 முதல் 9 செமீ அளவுடைய உருண்டையான அல்லது நீள்வட்ட பழங்கள் தோன்றுகின்றன.

 

கொடை ஆரஞ்சு காய்
கொடை ஆரஞ்சு காய்

 

கொடை ஆரஞ்சின் வெளித்தோலானது அடர் மஞ்சள், பச்சை கலந்த மஞ்சள், அடர் ஆரஞ்சு, பச்சை கலந்த ஆரஞ்சு வண்ணத்தில் இருக்கிறது. கொடை ஆரஞ்சு பழமானது 6-8 ஆரஞ்சுநிற இனிப்பான சாறு நிறைந்த சுளைகளைக் கொண்டுள்ளது.

 

கொடை ஆரஞ்சு
கொடை ஆரஞ்சு

 

கொடை ஆரஞ்சின் வரலாறு

கொடை ஆரஞ்சின் தாயகம் வடகிழக்கு இந்தியா மற்றும் தெற்கு சீனாப் பகுதிகளாகும். இது வடகிழக்கு இந்தியாவில் 3000 ஆண்டுகளுக்கு முன்பே காணப்பட்டிருக்கிறது.

முதலில் இப்பழமானது இந்தியாவிலிருந்து சீனாவிற்கும், சீனாவிலிருந்து ஐரோப்பா, வடஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய இடங்களுக்குப் பரவியது.

1805-ல் இப்பழமானது சீனாவிலிருந்து இங்கிலாந்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. பின் அங்கிருந்து இத்தாலி, மத்தியதரைகடல் நாடுகளுக்கும் பரவியது.

1820-ல் இப்பழமானது ஆஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. 1840-ல் இத்தாலியால் ஐக்கிய அமெரிக்காவிற்கு இப்பழம் அறிமுகப்படுத்தப்பட்டது.

19-ம் நூற்றாண்டில் இப்பழம் மொராக்கோவிலிருந்து வடக்கு ஆப்பிரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்பட்டது. தற்போது கொடை ஆரஞ்சு உற்பத்தியில் சீனா முதலிடம் வகிக்கிறது.

கொடை ஆரஞ்சில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

கொடை ஆரஞ்சில் விட்டமின் ஏ,சி, பி1(தயாமின்), பி2(ரிபோஃப்ளோவின்), பி3(நியாசின்), பி5(பான்டோதெனிக் அமிலம்), பி6(பைரிடாக்ஸின்), ஃபோலேட்டுகள் ஆகியவை காணப்படுகின்றன.

இதில் தாதுஉப்புக்களான பொட்டாசியம், கால்சியம், செம்புச்சத்து, இரும்புச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகம், மாங்கனீசு, செலீனியம், சிறிதளவு சோடியம் ஆகியவை உள்ளன.

மேலும் இப்பழத்தில் கார்போஹைட்ரேட், புரதம், நார்ச்சத்து, நீர்ச்சத்து, ஆல்பா, பீட்டா கரோடீன்கள், கிரிப்டோ சாந்தின், லுடீன் ஸீஸாக்தைன் ஆகியவையும் இருக்கின்றன.

கொடை ஆரஞ்சின் மருத்துவப் பண்புகள்

புற்றுநோயைத் தடுக்க

கொடை ஆரஞ்சில் உள்ள கரோடீனாய்டுகள் மற்றும் விட்டமின் ஏ கல்லீரல் புற்றுநோயைத் தடைசெய்கின்றன.

மஞ்சள் காமாலை நோயால் பாதிப்படைந்தவர்கள் இப்பழச்சாறினை அடிக்கடி உண்ணும்போது அதில் உள்ள கிரிப்டோ சாந்தின் கல்லீரல் பாதிப்பிலிருந்து பாதுகாப்பதோடு கல்லீரல் புற்றுநோயையும் தடைசெய்கிறது.

இப்பழத்தில் காணப்படும் லிமோனின் பொருளானது புற்றுச்செல்களின் வளர்ச்சியை தடுக்கும் பண்பினைப் பெற்றுள்ளது.

இப்பழத்தின் தோலானது தோல் புற்றுநோயினை தடை செய்வதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே இப்பழத்தினை உண்டு புற்றுநோயினைத் தடுக்கலாம்.

கொலஸ்ட்ராலின் அளவினைக் குறைக்க

கொடை ஆரஞ்சு சைன்ஸ்பைன் உடலில் கொழுப்பு உற்பத்தியைத் தடுக்கும் பொருளினை உற்பத்தி செய்கிறது. இப்பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிஜென்டுகள் கெட்ட கொழுப்பின் அளவினைக் குறைத்து நல்ல கொழுப்பின் அளவினைக் கூட்டுகிறது.

மேலும் உடலின் வளர்ச்சிதை மாற்றத்தால் உண்டாகும் ப்ரீரேடிக்கல்களின் செயல்பாட்டால் இரத்த நாளங்களில் கொழுப்பு சேருவதை இப்பழம் தடைசெய்கிறது.

மேலும் இப்பழத்தில் காணப்படும் கரையக்கூடிய நார்ச்சத்தான கெமிசெல்லுலோஸ் மற்றும் கரையாத நார்ச்சத்தான பெக்டின் போன்றவை குடலில் கொழுப்பு உறிஞ்சுதலைத் தடைசெய்கின்றன. எனவே இப்பழத்தினை உண்டு கொலஸ்ட்ராலின் அளவினைக் குறைக்கலாம்.

உயர்இரத்த அழுத்தத்திற்கு

இப்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுஉப்பான பொட்டாசியம் போன்றவை உயர்இரத்த அழுத்தத்தைக் குறைக்கின்றன.

இவை உடலில் கொலஸ்ட்ராலின் அளவினைக் குறைப்பதோடு சீரான இரத்த ஓட்டத்தை உண்டாக்கி இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது.

நோய்எதிர்ப்பு ஆற்றலைப் பெற

இப்பழத்தில் உள்ள விட்டமின் சி-யானது உடலுக்கு நோய்எதிர்ப்பு சக்தியை வழங்கி சளி உள்ளிட்ட தொற்றுநோயிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது.

இப்பழத்தில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பு பண்பானது உடலில் காயம் ஏற்படும்போது வைரஸ், பாகடீரியா, பூஞ்சை தொற்றுதலிருந்து பாதுகாத்து காயங்களை விரைந்து ஆற்றுகிறது.

கொடை ஆரஞ்சு செரிமானம் மற்றும் நரம்பு மண்டலங்களை தொற்றுகிருமிகளிடமிருந்து பாதுகாத்து பிடிப்புகள் மற்றும் வாந்தி ஆகியவற்றை தடுக்கிறது. மேலும் இப்பழம் உடலில் உள்ள நச்சுக்கிருமிகளை வெளியேற்றி இரத்தத்தினை சுத்தம் செய்கிறது.

உடல் எடை குறைப்பிற்கு

கொடை ஆரஞ்சில் உள்ள நார்ச்சத்தானது வயிற்றினை நிறைய நேரம் நிரம்பச் செய்து பசியினை தள்ளிப் போடுகிறது.

வயிறானது நீண்ட நேரம் நிரம்பி இருப்பதால் உட்கொள்ளும் நொறுக்கு தீனியின் அளவு குறையும். இதனால் உடல் எடை குறையும்.

மேலும் இப்பழம் இன்சுலின் அளவினைக் குறைத்து உடலில் உள்ள சர்க்கரையானது கொழுப்பாக மாற்றப்படாமல் எரிபொருளாக பயன்படுத்த ஊக்குவிக்கிறது. இதனாலும் உடல் எடை குறைகிறது.

சருமப்பாதுகாப்பிற்கு

இப்பழத்தில் உள்ள விட்டமின் சி-யின் காரணமாக இப்பழத்தினை உட்கொள்வதாலும், சருமத்தில் தடவிக் கொள்வதாலும் சருமத்திற்கு பாதுகாப்பினை வழங்குகிறது.

இப்பழத்தினை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளும்போது சருமத்தினை பளபளக்கச் செய்வதோடு சருமத்தினை வளவளபாக்கி மேம்படுத்துகிறது.

இப்பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிஜென்டுகள் சருமத்தினை புறஊதாக்கதிர்கள், சூரிய ஒளி, வளர்ச்சிதை மாற்றத்தால் உண்டாகும் ப்ரீரேடில்களின் சேயல்பாடுகள் ஆகியவற்றிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது.

மேலும் இது சருமச்சுருக்கங்கள், பரு, சருமம் உலர்ந்து போதல் ஆகிய பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குகிறது.

எலும்புகளின் பலத்திற்கு

நம்முடைய பற்கள் மற்றும் எலும்புகள் ஆகியவை கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவற்றின் கலவையான ஹைட்ரோக்சிபைடிட் என்பதன் மூலம் உருவாகின்றன.

மெக்னீசியமானது ஹைட்ரோக்சிபைடிட் உருவாக்கத்திற்கு தேவையான நொதிகளை சுரக்கச் செய்வதோடு அவை சரியான அளவில் செயல்படவும் தூண்டுகிறது.

இதனால் இந்த தாதுஉப்புகள் அடங்கிய உணவினை உணவில் எடுத்துக் கொள்வதால் ஆஸ்டியோபோரோசிஸ் உள்ளிட்ட எலும்பு நோய்களைத் தவிர்க்கலாம்.

கால்சியம், மெக்னீயம், பாஸ்பரஸ் உள்ள கொடை ஆரஞ்சினை உணவில் சேர்த்து பலமான எலும்புகளைப் பெறலாம்.

நல்ல செரிமானத்திற்கு

கொடை ஆரஞ்சானது கரையும், கரையாத நார்ச்சத்துகளைக் கொண்டுள்ளது. இவை உணவினை நன்கு செரிக்கச் செய்வதோடு உடலில் உள்ள நச்சுக்களை கழிவாக வெளியேற்றுகிறது.

மேலும் இந்த நார்ச்சத்துகள் உணவில் உள்ள ஊட்டச்சத்துகளை உறிஞ்சவும் துணை புரிகிறது. இதனால் வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் உள்ளிட்ட செரிமானப் பிரச்சினைகள் நீங்குகின்றன.

எனவே இப்பழத்தினை அடிக்கடி உணவில் சேர்த்து நல்ல செரிமானத்தைப் பெறலாம்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு

கொடை ஆரஞ்சானது கர்ப்பிணிப் பெண்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஃபோலேட்டுகளைக் கொண்டுள்ளது.

ஃபோலேட்டுக்களின் குறைபாட்டால் குழந்தைகள் எடைகுறைந்து பிறந்தல், பிறப்பு குறைபாடு ஆகியவற்றுடன் பிறக்க நேரிடும்.

எனவே கொடை ஆரஞ்சினை உண்டு கர்ப்பிணிப்பெண்கள் தங்கள் நலத்தினையும், குழந்தையின் நலத்தினையும் பாதுகாக்கலாம்.

கொடை ஆரஞ்சினை வாங்கிப் பயன்படுத்தும் முறை

கொடை ஆரஞ்சினை வாங்கும்போது புதிதாகவும், கனமானதாகவும், பளபளப்பாகவும், மேற்தோலில் காயங்கள் இல்லாமல் இருப்பவற்றை வாங்க வேண்டும்.

மேல்தோல் சுருங்கிய, வெட்டுக்காயங்கள் உள்ள லேசானவற்றை தவிர்க்கவும். இப்பழத்தினை அறையின் வெப்பநிலையில் ஒரு வாரம் வைத்திருந்து பயன்படுத்தலாம்.

குளிர்பதனப்பெட்டியில் இருவாரங்கள் வைத்திருந்து பயன்படுத்தலாம். கொடை ஆரஞ்சினை உண்ணும்போது மேல்தோலினை உரித்துவிட்டு உள்ளிருக்கும் சுளைகளில் உள்ள விதைகளை நீக்கிவிட்டு மெல்லியதோலுடன் உண்ண வேண்டும்.

கொடை ஆரஞ்சு அப்படியேவும், பதப்படுத்தப்பட்டும் உண்ணப்படுகிறது.

 

பதப்படுத்தப்பட்ட கொடை ஆரஞ்சு
பதப்படுத்தப்பட்ட கொடை ஆரஞ்சு

 

பழச்சாறு, சாலட், கேக்குகள், இனிப்புகள் தயார் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது.

இயற்கையின் அற்புதமான குளுகுளு கொடை ஆரஞ்சினை கிடைக்கும் காலங்களில் உணவில் சேர்த்து வளமான வாழ்வு வாழ்வோம்.

– வ.முனீஸ்வரன்

 

One Reply to “குளுகுளு கொடை ஆரஞ்சு”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.