குழந்தைகளைக் கொண்டாடுவோம் – பகுதி 1

தினத்தைக் கிழித்து விட்டு குழந்தைகளை கொண்டாடுவோம் - I

“புத்தகங்களே
சமர்த்தாயிருங்கள்!

குழந்தைகளைக்
கிழித்து விடாதீர்கள்!

வருடம் தவறாமல்
குழந்தைகள் தினம்
கொண்டாடுபவர்களே!

இனிமேல்
தினங்களை விட்டுவிட்டுக்
குழந்தைகளை
எப்போது
கொண்டாடப் போகிறீர்கள்?”

என்ற கவிக்கோ அப்துல் ரகுமானின் வரிகள் இந்த ஆண்டு குழந்தைகள் தின கொண்டாட்டத்தில் சமூக வலைத்தளங்களில் வலம் வந்தவை.

நமது சுதந்திர இந்திய தேசத்தின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த தினத்தை குழந்தைகள் தினம் என நவம்பர் 14 ஆம் நாள் கொண்டாடி வருகிறோம்.

இன்றைய குழந்தைகள் பெற்றோர்களின் மறு வடிவமாய் உதித்தெழுந்தவர்கள்.

நாளைய இந்தியாவின் வரலாறை தீர்மானிக்க போகிறவர்கள் குழந்தைகள்தான்.

“ஒரு சமூகம் தன் குழந்தைகளை நடத்தும் விதத்தை வைத்துத்தான் அந்த சமூகத்தின் ஆன்மாவை அறிய முடியும்.

குழந்தைகளுக்கு எதிராக எந்த வடிவத்தில் குற்றங்கள் நடந்தாலும், அது சமுதாயத்தின் சோகமான நிலையைப் பிரதிபலிக்கிறது” என்று தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா கூறினார்.

நவம்பர் 14ஆம் நாள் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் Happy Children’s Day எனும் வாழ்த்தை சொல்லிவிட்டு எனது மகன்/மகள் நன்றாகத்தான் இருக்கிறார்கள்.

நாம் அவர்களை நன்றாகத்தான் வளர்க்கிறோம் என்ற உணர்வோடு நாமும் கடந்து சென்று விடுகிறோம்.

பெற்றோர்கள் மீதான குழந்தைகளின் பார்வை என்னவென்று நாம் யோசிக்க பல நேரங்களில் தவற விடுகிறோம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

நமது குழந்தைகள் யாரோடு நண்பர்களாக பழகுகிறார்களோ, அவர்களின் சகவாசத்தில் வெளிப்படும் வார்த்தைகள் அல்லது அவர்களோடு போனில் பேசிக்கொண்டிருக்கும்போது, நமது பேச்சு வரும்போது அவர்களுடைய வார்த்தைகளை வைத்து, நம் குழந்தைகள் நம்மை எந்த அளவிற்கு புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதை நம்மால் ஓரளவுக்கு அறிய முடியும்.

பொதுவாக எல்லா பெற்றோர்களும் என் குழந்தைகள் நல்லவர்கள் தான் என்று யோசிப்பார்கள்; அப்படித்தான் யோசிக்கவும் வேண்டும்.

வருடங்கள் நகர நகர, அவர்களின் குணம் நல்லதை நோக்கி நகர்கிறதா அல்லது ஒழுக்கம், மரியாதை, கண்ணியம் போன்ற உயர் குணங்களில் தேய்மானம் ஏற்படுகிறதா என்பதை நாம் யோசிக்க வேண்டும்.

பேருந்துகளில் ரயில்களில் நடைபெறுகின்ற கொண்டாட்டங்களில், பயணிகளுக்கு இடையூறாக செய்யப்படுகின்ற செயல்கள்!

நான்தான் படிக்கல; என் புள்ளய ஒழுங்கா படிக்க வைக்கலாம்னா, அப்பா! எவ்வளவு சேட்டை பண்றான், எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் என் புள்ள கேட்க மாட்டேங்குது!

என்று மாணவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் சமீப காலங்களில் பேசப்படாத வீடுகள் இல்லை எனும் அளவிற்கு குழந்தைகள் மீதான குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகின்றன.

மேலும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களும் அதிகரித்து வருகின்றன.

2014 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 80% அதிகரித்துள்ளது என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NATIONAL CRIME RECORDS BUREAU – NCRB) ன் அறிக்கைகள் காட்டுகின்றன.

மேலும், 25 மாநிலங்களில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. இந்த அதிகரிப்பு நகர்ப்புறங்களுக்கு மட்டும் அல்ல.

டேட்டாஃபுல் தொகுத்துள்ள NATIONAL CRIME RECORDS BUREAU (NCRB) தரவுகளின் பகுப்பாய்வு, 2014 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கையில் நிலையான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது.

இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் ஆண்டு வாரியான எண்ணிக்கை

Source: Dataful: Year- and State-wise Number and Rate of Crimes Committed against Children

2014 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை, கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட 2020 ஆம் ஆண்டைத் தவிர, ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தரவு காட்டுகிறது.

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை, 2014ல் 89,423 ஆக இருந்தது, 2022ல் 1,62,449 ஆக உயர்ந்துள்ளது, இது ஒன்பது ஆண்டுகளில் 81% அதிகரித்துள்ளது.

NATIONAL CRIME RECORDS BUREAUயைத் தவிர, குழந்தைகளின் நலனை உறுதி செய்வதற்காக அமைக்கப்பட்ட அர்ப்பணிப்பு அமைப்பான தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் National Commission for Protection of Child Rights) (NCPCR) கூட, அதன் சமீபத்திய அறிக்கையில், “குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் / குழந்தை உரிமை மீறல் வழக்குகள் அதிகரித்து வருகின்றன.

இது பயங்கரமானது மற்றும் நமது நாட்டின் எதிர்காலத்திற்கு அச்சுறுத்தலானது.

மேலும், இந்திய உச்ச நீதிமன்றம் குறிப்பாக தானாக முன்வந்து தாக்கல் செய்த மனுவில் குழந்தைகளுக்கு எதிரான கற்பழிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் குறிப்பிட்டது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்த அமைப்புகள் அனைத்தும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதை கவனத்தில் எடுத்துள்ளன.

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) தரவுகளின் அடிப்படையில், ‘மாணவர்களின் தற்கொலைகள்: இந்தியாவில் பரவும் ஒரு தொற்றுநோய் ‘ அறிக்கை புதன்கிழமை (ஆகஸ்ட் 28, 2024) THE ANNUAL INTERNATIONAL CAREER AND COLLEGE COUNSELLING (IC3) CONFERENCE AND EXPO 2024 இல் வெளியிடப்பட்டது.

“கடந்த இருபது வருடங்களில், மாணவர்களின் தற்கொலை தேசிய சராசரியை விட இருமடங்காக 4% என்ற ஆபத்தான வருடாந்திர விகிதத்தில் வளர்ந்துள்ளன.

2022 ஆம் ஆண்டில், மொத்த மாணவர் தற்கொலைகளில் 53% ஆண் மாணவர்கள்.

2021 மற்றும் 2022 க்கு இடையில், ஆண் மாணவர்களின் தற்கொலை 6% குறைந்துள்ளது,

அதே சமயம் பெண் மாணவர்களின் தற்கொலை 7% அதிகரித்துள்ளது” என்று IC3 நிறுவனம் தொகுத்த அறிக்கை குறிப்பிட்டது.

மாணவர்களின் தற்கொலை நிகழ்வுகள், மக்கள்தொகை வளர்ச்சி விகிதங்கள் மற்றும் ஒட்டுமொத்த தற்கொலைப் போக்குகள் இரண்டையும் விஞ்சுகின்றன.

கடந்த பத்து ஆண்டுகளில், 0-24 வயதுடையவர்களின் மக்கள்தொகை 582 மில்லியனில் இருந்து 581 மில்லியனாக குறைந்தாலும், மாணவர்களின் தற்கொலை எண்ணிக்கை 6,654ல் இருந்து 13,044 ஆக அதிகரித்துள்ளது” என்று அது மேலும் கூறியுள்ளது.

தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுகின்ற இளைஞர்களை பள்ளி, கல்லூரிகளில் இருந்து சஸ்பெண்ட் செய்து விடுகிறோம்.

தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தவறு என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை. ஆனால் அந்த தவறுகளுக்கு அவர்கள் மட்டுமே காரணமாகுமா?

அல்லது திட்டினால் தண்டனை கொடுத்தால் அவர்கள் அந்த தவறுகளில் இருந்து மீண்டு விடுவார்களா? என்ற கேள்விக்கான பதிலை கொஞ்சம் ஆழமாக யோசிக்க வேண்டிய சூழலில் நாம் நிறுத்தப்பட்டிருக்கிறோம்.

முனைவர் மு. பக்கீர் இஸ்மாயில்
இணை பேராசிரியர், பொருளாதார துறை
புதுக்கல்லூரி, சென்னை – 600 014
கைபேசி: +91 9600094408

குழந்தைகளைக் கொண்டாடுவோம் – பகுதி 2