எந்த ஒரு விஷயத்தையும் எந்த ஒரு மனிதரையும் அதன் இயற்கை தன்மையோடு புரிந்து கொள்ள வேண்டும்.
ஆனால் அங்கொன்றும் இங்கொன்றுமாய் நடக்கின்ற ஒரு சில சம்பவங்கள்/ செயல்களின் அடிப்படையில் நாம் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விஷயத்தையும் புரிந்து கொள்வதின் விளைவு பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் நீண்டு கொண்டே செல்கின்றன.
பிரச்சனைகளை தீர்ப்பதற்கு அந்த பிரச்சனைக்கான அடிப்படை என்ன என்பதை புரியாமல் அல்லது தெரியாமல் எப்படி பிரச்சனைகளுக்கு தீர்வை வழங்க முடியும்?
இங்கு குழந்தைகள் / மாணவர்களுக்கான பிரச்சனைகள் என்பது ஒரு குடும்பம் சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல.
ஒருதேசத்தினுடைய நலன் சார்ந்த பிரச்சனை என்பதை புரிந்து கொண்டு, குழந்தைகளை அவர்களின் இயற்கை குணத்தோடும் தன்மையோடும் அணுக பழகினால் பல தவறுகளில் இருந்து அவர்களை தடுக்க முடியும்.
கர்ப்பக் காலத்தில் குழந்தையின் உணர்வுகள்
ஒரு குழந்தை பிறக்கும் போதே தாயின் உணர்வுகளை உள் வாங்கிதான் வெளி வருகிறது.
தாயின் உணர்வுகளுக்கு ஏற்ப குழந்தையின் உணர்வுகளும் மாறுபடுகின்றன என்பது தற்போது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
தாய் மகிழ்ச்சியுடன் இருந்தால் கருவில் உள்ள குழந்தையும் சிரிக்கிறது. ‘ஸ்மைலி’ என்று ஒரு உருவம் இருக்கிறதல்லவா? அதைப்போலவே சிசுவின் உதடுகள் லேசான மாறுதலைக் காட்டும்.
தாய் மன உளைச்சல் கொண்டாலோ, கோபித்தாலோ கருவிலுள்ள குழந்தையின் புருவமும் நெரிகிறது. இவையெல்லாம் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனில் படமாகப் பார்க்கலாம்.
அம்மாவுக்கு மன அழுத்தம் (STRESS) ஏற்பட்டால் அட்ரினல் சுரப்பிகள் அதிகமாக செயல்படுகின்றன. அட்ரினலின் கார்ட்டிசால் (Adrenalin Cortisol) போன்ற ஹார்மோன்கள் அதிகமாக சுரக்கின்றன.
அம்மாவின் ரத்த அழுத்தம் (B.P.) அதிகமாகி இதயத் துடிப்பு அதிகமாகிறது. மூச்சு வேகமாக வருகிறது.
தொப்புள் கொடி மூலம் இந்த ஹார்மோன்கள் அனைத்தும் கருவில் உள்ள சிசுவையும் பாதிக்கின்றன.
அம்மாவுக்கு ஏற்படும் மாற்றங்கள் எல்லாம் குழந்தைக்கும் ஏற்படுகின்றது. இப்படி அடிக்கடி நடந்தால் குழந்தையின் எடை சரியான அளவு இருக்காது.
குறைப்பிரசவம், எடை குறைவாய் குழந்தைப் பிறப்பது போன்றவை ஏற்பட வாய்ப்பு உண்டு. இப்படி பிறந்தால் குழந்தையின் அழுகையும் அதிகமாக இருக்கும்.
சாதாரணமாகக் குழந்தை அழுதால் ‘பாலைக் கொடு’ என்பார்கள் அல்லவா? ஆனால் இந்தக் குழந்தையை என்ன கொடுத்தாலும் சமாதானப்படுத்த முடியாது.
கர்ப்பமாக இருக்கும்போது கணவன் மனைவி சண்டை, குடும்பத்தில் பிரச்னைகள், வேலைப்பளு, பிரிவு, இறப்பு போன்றவை தாயின் மனநிலையைப் பாதிக்கும்போது அது குழந்தையையும் பாதிக்கிறது; இப்படிப் பிறக்கும் குழந்தைகளை சமாதானப்படுத்துவது கடினம்.
குழந்தையை எப்படித் தூக்குவது என்றுகூடத் தெரியாமல், புரியாமல் ஏற்கனவே திணறிக் கொண்டிருக்கும் ஒரு இளம் தாய்க்கு இது மேலும் எரிச்சலைத் தூண்டுகிறது.
இந்த எரிச்சலும் மன உளைச்சலும் தாய் சேய் பாசப்பிணைப்பையும் பாதிக்கிறது.
இப்படி குழந்தை எந்நேரமும் அழுது கொண்டே இருந்தால் மனதளவில் தாய்க்கு பின்னடைவு ஏற்படுகிறது.
இதனால் குழந்தையின் பிற்கால மனவளர்ச்சிக்கு அடித்தளமாகவும், குழந்தையின் உணர்வுகளுக்கு உணவாகவும் இருக்கும் தாய் சேய் பாசப் பிணைப்பு மேன்மேலும் பாதிக்கப்படும்.
இதற்கு நேர்மாறாக தாய் மகிழ்ச்சியாக இருந்தால் இந்த ஹார்மோன்கள் தேவைக்கு ஏற்ப, மிகச் சரியான அளவில் சுரக்கும். குழந்தையும் சரியான உடல் / மன வளர்ச்சியுடன் பிறக்கும்.
கருவுற்ற தாய்க்கு உடல் ஓய்வுடன் மன அமைதியும் தேவை என்பதற்காகத்தான் மகப்பேறுக்கு 3-4 மாதம் முன்பே தாய் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார்கள்.
ஆனால் பிறந்த வீட்டுக்குப் போய் ‘ஓய்வு’ என்ற போர்வையில் தினம் தினம் சினிமா, டிவி என்று பார்த்துக் கொண்டிருந்தால் விளைவு வேறுவிதமாகத்தான் இருக்கும்.
ஆம்! டிவியில் கம்ப்யூட்டரில் சண்டைக் காட்சிகள், திகில் காட்சிகள் வன்முறை ஆகியவற்றைப் பார்த்த்தால் தாய்க்கு ஹார்மோன் பாதிப்புகள் ஏற்பட்டு அது கருவிலுள்ள குழந்தையையும் பாதிக்கும்.
தற்போதுள்ள இயந்திரமயமான வாழ்க்கைச் சூழலில் அதிக வேலைப்பளுவால் வேலைக்குச் செல்லும் பெண்கள் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள்.
இதனால் STRESS ஹார்மோன்கள் அதிகமாகச் சுரந்து குழந்தைப்பேற்றில் பாதிப்புகள் ஏற்படுகின்றன. குறிப்பாக பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்களுக்கு இந்தப் பிரச்னை அதிகமாக இருக்கிறது.
இப்படி மனஅழுத்தம் அதிகம் உள்ள வேலைகளில் செய்யும் பெண்களிடம் PARENTING SKILLS எனப்படும் வளர்ப்புத் திறனும், குழந்தையின் மீதான பாசப்பிணைப்பும் குறைவாகத்தான் காணப்படுகிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
கர்ப்பக் காலத்தில் மனதுக்கு அமைதி தரும் பாடல்களைப் பாடுவது / கேட்பது, அமைதியான பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளைப் பார்ப்பது, மனதுக்கு பிடித்த இனிய விஷயங்களைப் பேசுவது போன்றவை தாய்க்கும் சேய்க்கும் நல்லது.
தாய் அதிக ஒலி மற்றும் அதிர்வுகளுடன் கூடிய ‘ட்ரம்’ வகை வாத்தியங்களின் இசை கேட்டால் கருவில் உள்ள குழந்தையின் நாடித்துடிப்பும் இதயத் துடிப்பும் அதிகமாகிறது. ரத்த அழுத்தம் அதிகமாகிறது. புல்லாங்குழல், வீணை போன்ற இசைக் கருவிகளின் இசை நாடித்துடிப்பை சீராக்குகிறது! இதை ஆராய்ந்து நிரூபித்திருக்கிறார்கள்!
கூட்டம் பிதுங்கும் பேருந்துகளில் பேரிரைச்சலுடன் கூடிய வன்முறைக் காட்சிகள் கொண்ட சினிமாவை பார்த்துக் கொண்டு பயணம் செய்யும் கர்ப்பிணித் தாயின் கருவில் இருக்கும் சிசு என்ன பாடுபடும்!
கர்ப்பக் காலத்தில் தாய் சாப்பிடும் உணவு மிக மிக முக்கியம். காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள் போன்ற உணவுக்கும், மசாலா, காரம் நிறைந்த உணவுக்கும்கூட குழந்தையின் உணர்வுகள் மாறுபடும்!
சாதாரணமாக, பிறந்த முதல் ஓரிரு மாதங்கள் குழந்தை பகல் முழுவதும் தூங்கி இரவில் விழித்துக் கொண்டு அழும். இதை வயிற்றுக்குப் பால் போதவில்லை என்று பல தாய்மார்கள் நினைக்கிறார்கள்; உண்மை அதுவல்ல.
கருவுற்ற தாய் பகலில் நடமாடிக் கொண்டு குனிந்து நிமிர்ந்து வேலைகள் செய்கிறார். கருவில் இருக்கும் குழந்தைக்கு தாயின் இந்த நடமாட்டம் தொட்டிலில் இட்டு ஆட்டுவதைப்போல இருப்பதால் குழந்தை அமைதியாகத் தூங்கி விடுகிறது.
இரவில் தாய் படுத்தவுடன் கருவில் குழந்தை விழிக்கிறது. சுமார் ஒன்பது மாதங்கள் இதேபோல பழகிவிட்ட குழந்தை, பிறந்த பின்பும் இதே வழக்கத்தைத் தொடர்கிறது.
கருவில் இருக்கும் குழந்தை இப்படி பகலில் தூங்கி இரவில் விழிப்பதை ஸ்கேன் மூலம் நிரூபித்துள்ளார்கள். [ஆதாரம் : டாக்டர். என். கங்கா]
கருவறையில் இருக்கும் போது ஒரு குழந்தைக்கான வளர்ச்சி நிலை உருவாகத் தொடங்கி விடுகிறது.
( வளரும்)
முனைவர் மு. பக்கீர் இஸ்மாயில்
இணை பேராசிரியர், பொருளாதார துறை
புதுக்கல்லூரி, சென்னை – 600 014
கைபேசி: +91 9600094408