குழந்தைகளைக் கொண்டாடுவோம் – பகுதி 3

குழந்தைகளைக் கொண்டாடுவோம் - III

குழந்தை பிறந்தவுடன் குடும்ப உறுப்பினர்கள், சொந்த பந்தங்கள் அனைவரும் அந்த குழந்தையை பார்க்க செல்வார்கள்.

எந்த வித எதிர்பார்ப்புமின்றி, கோபம், போட்டி, பொறாமை இல்லாமல் விசால மனதோடு அந்த குழந்தையை தூக்கி முத்தம் கொடுக்கும் போது அல்லது கொஞ்சும் போது நமது அன்பின் ஸ்பரிசம் அந்த குழந்தையை சூழ்ந்து கொள்ளும்.

நான் இந்த குழந்தை மீது கொண்டிருக்கும் அன்பின் வெளிப்பாடு என்பதை சொல்லால் மட்டும் அல்ல. செயலாலும் உணர்த்தி வருகிறோம்.

குழந்தை அழுதவுடன் அதற்கான உணவு கிடைக்கிறது. குழந்தைக்கு பக்கபலமாக தாயும் தந்தையும் உறவினர்களும் இருக்கிறார்கள்.

நாட்கள் நகர நகர உறவினர்களுடைய வருகையும் குறைந்து விடும். இறுதியாக குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே குழந்தையை கொண்டாடுவார்கள்; கொஞ்சுவார்கள்; அன்பு பாராட்டுவார்கள்.

நாளடைவில் அண்ணன், அக்கா நேரம் கிடைக்கும் போது தூக்கி மகிழ்வார்கள். தந்தை நேரம் கிடைக்கும் போது கொஞ்சுவார். தாயின் அரவணைப்பிலேயே குழந்தை முழுவதுமாகவே இருக்கும்.

பிறந்த ஒன்று, இரண்டு, மூன்று ஆண்டுகள் முழுமையாக அந்த குழந்தைக்கு ஊட்டப்படுவதெல்லாம் அன்பு மட்டுமே.

இதை வேறு வழியாக சொல்வதானால், அனைவரிடம் இருந்து அன்பை மட்டுமே பெறப்படுகின்ற அந்த குழந்தைக்கு அன்பை தவிர வேறு எதுவும் தெரியாது.

அன்பு தான் அனைத்தும்; அந்த அனைத்தும் அம்மா தான். அன்பின் வழியாகத்தான் குழந்தை உருவாக்கப்படுகிறது. அப்படிதான் நீங்களும் நானும் உருவாக்கப்பட்டு இருக்கிறோம்.

தாய்மை என்பது வரம். ‘பிரசவத்திற்கு ஆட்டோக்கள் இலவசம்!’ என்ற பதாகையை நாம் அடிக்கடி பார்த்திருப்போம். அது தாய்க்கு கொடுக்கக் கூடிய மரியாதை மட்டுமல்ல; தாய்மைக்கு கொடுக்கின்ற மரியாதையும் கூட

பிறக்கும் போது, ​​குழந்தையின் சராசரி மூளையானது வயது வந்தோருடைய சராசரி மூளையின் கால் பகுதி அளவில் இருக்கும்.

நம்பமுடியாத அளவிற்கு, இது முதல் வருடத்தில் இரட்டிப்பாகும். இது 3 வயதிற்குள் வயது வந்தோரில் 80% ஆகவும், 5 வயதில் 90% ஆகவும் வளர்கிறது. 90% மூளை வளர்ச்சி மழலையர் பள்ளிக்கு முன்பே நிகழ்கிறது.

மூளை மனித உடலின் கட்டளை மையம். புதிதாகப் பிறந்த குழந்தையின் அனைத்து மூளை செல்கள் (நியூரான்கள்) அவை வாழ்நாள் முழுவதும் இருக்கும்.

ஆனால் இந்த உயிரணுக்களுக்கு இடையிலான தொடர்புகள் தான் மூளையை வேலை செய்ய வைக்கின்றன.

மூளை இணைப்புகள் நம்மை நகர்த்தவும், சிந்திக்கவும், தொடர்பு கொள்ளவும் மற்றும் எல்லாவற்றையும் செய்ய உதவுகின்றன. இந்த இணைப்புகளை உருவாக்குவதற்கு ஆரம்பகால குழந்தை பருவ ஆண்டுகள் முக்கியமானவை.

ஒவ்வொரு நொடியும் குறைந்தது ஒருமில்லியன் புதிய நரம்பியல் இணைப்புகள் (synaptic connections) செய்யப்படுகின்றன. இது வாழ்க்கையில் வேறு எந்த நேரத்திலும் இல்லை.

மூளையின் வெவ்வேறு பகுதிகள் இயக்கம், மொழி மற்றும் உணர்ச்சி போன்ற பல்வேறு திறன்களுக்கு பொறுப்பாகும். மேலும் வெவ்வேறு விகிதங்களில் உருவாகின்றன.

மூளை வளர்ச்சி தன்னைத்தானே உருவாக்குகிறது. ஏனெனில் இணைப்புகள் இறுதியில் மிகவும் சிக்கலான வழிகளில் ஒன்றோடொன்று இணைகின்றன. இது குழந்தையை மிகவும் சிக்கலான வழிகளில் நகர்த்தவும் பேசவும் சிந்திக்கவும் உதவுகிறது.

ஆரோக்கியமான, திறமையான, வெற்றிகரமான பெரியவர்களாக இருப்பதற்குத் தேவையான இணைப்புகளை வளர்த்துக் கொள்ள குழந்தையின் மூளைக்கு ஆரம்ப ஆண்டுகள் சிறந்த வாய்ப்பாகும்.

உந்துதல், சுயகட்டுப்பாடு, சிக்கலைத் தீர்ப்பது மற்றும் தகவல் தொடர்பு போன்ற பல முக்கியமான, உயர்நிலை திறன்களுக்குத் தேவையான இணைப்புகள் இந்த ஆரம்ப ஆண்டுகளில் உருவாகின்றன.

அப்படி உருவாக்கப்படவில்லை எனில் இந்த அத்தியாவசிய மூளை இணைப்புகள் பிற்காலத்தில் உருவாகுவது மிகவும் கடினம்.

அதனால்தான் வீட்டில் இருக்கும் சிறு குழந்தைகள் ‘துறுதுறு’வென்று இருப்பார்கள்.

ஏதேனும் நோட்டு புத்தகத்தில், வீட்டின் சுவற்றில் கிறுக்கிக் கொண்டு ஏதேனும் பேசிக்கொண்டு உலா வருவார்கள்.

குழந்தைகளை நோட்டு புத்தகத்தில், சுவற்றில் கிறுக்க விடாமல் வீட்டை சுத்தமாக வைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் குழந்தையினுடைய வளர்ச்சியை நாம் தடுத்து விடுகிறோம் என்பதே உண்மை.

தாய் மற்றும் தந்தை, இரத்த உறவுகள் அரவணைப்பில் குழந்தை வளரும்போது, சொந்த பந்தங்கள், பொருட்கள், செயல்கள், அதற்கான எதிர்வினைகள் என அனைத்தும் புரிந்துவிடும்.

ஒரு குழந்தை கற்க வேண்டிய முதல் கல்வி தாயிடமிருந்து தான் செல்ல வேண்டும்.

“அம்மா வந்து சொன்னால்தான் அப்பாவின் பெயர் தெரியுமடா; அவளும் சொல்லவில்லை என்றால் தப்பாகத் தான் போகுமடா!” என்ற சினிமாவின் வரிகளையும் நாம் கேள்விப்பட்டிருப்போம்.

அதனால்தான் நாம் குழந்தைகளை பள்ளிக்கூடங்களில் சேர்க்கும் பொழுது ஐந்தாம் அல்லது ஆறாம் வயதில் ஒன்றாம் வகுப்பில் சேர்ப்போம். அதுவரை ஒருகுழந்தை தாயிடம் இருந்து தான் அனைத்தையும் கற்று கொள்கிறது.

( வளரும்)

முனைவர் மு. பக்கீர் இஸ்மாயில்
இணை பேராசிரியர், பொருளாதார துறை
புதுக்கல்லூரி, சென்னை – 600 014
கைபேசி: +91 9600094408