முதலாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு படிக்கும் போது குழந்தைகளை பாராட்டுவதற்காக அல்லது ஊக்கப்படுத்துவதற்காக அவர்களின் ஆசிரியர்கள் வகுப்புகளில் ‘ஸ்டார் மார்க்’ அல்லது ‘குட்’ என்றோ அல்லது சாக்லேட் கொடுத்தோ அவர்களை பாராட்டுவார்கள்.
அந்தப் பாராட்டை உள்வாங்கிக் கொண்டு நேரடியாக வீட்டிற்கு வரும் குழந்தைகள் காலில் மாட்டி இருக்கும் ஷூ, ஷாக்ஸை உதறி விட்டு, பையை தூக்கி எறிந்து விட்டு ஓடோடி வந்து தனது தாயின் காலை இருக்க பற்றி கொண்டு, “அம்மா! அம்மா! மிஸ் எனக்கு குட் போட்டாங்கம்மா! சாக்லேட் கொடுத்தாங்கம்மா!” என்ற ஆனந்த புலங்காகிதத்தோடு தனது தாயிடம் சொல்லுவார்கள்.
இன்னும் சில நேரங்களில் “அம்மா! நம்ம வீட்டுக்கு பக்கத்துல இருக்காங்கல்ல, அந்த அக்கா தான் இன்னக்கி பிரேயர் படிச்சாங்க. பிரேயர் படிக்கும்போது திக்கிட்டாங்கம்மா.
எல்லாம் சிரிச்சாங்களா, மிஸ் வந்து எடுத்து கொடுத்தாங்கம்மா.
இன்னக்கி என்னிடம் மிஸ் வந்து உனக்கு என்ன கலர் பிடிக்கும்னு கேட்டாங்களா. நான் ஃப்ளு கலர் பிடிக்கும்னு சொன்னேம்மா.
அம்மா! இந்த மிஸ் எங்களுக்கு வந்தாங்க” என்று காலை பிரேயரில் நடந்தது முதல் மாலை வீடு திரும்பும் வரை என்னென்ன நிகழ்வுகள் எல்லாம் நடந்ததோ, தன் நினைவில் இருக்கும் அனைத்தையும், உலகமே தாய் தான் என்று நினைத்துக் கொண்டிருக்கும் தாயிடம் வந்து ஆனந்த பெருக்கோடு அந்த குழந்தை சொல்லும்.
குழந்தைகளின் உணர்வுகளை முழுவதுமாக புரிந்து கொள்ளும் தாய், தனது குழந்தையை ஆரத்தழுவி, உச்சி முகர்ந்து “என் செல்லமே!” என்று அரவணைக்கும் போது, தாய் தான் உலகம் என்று நம்பி வளருகின்ற அந்த குழந்தை, தாயின் அன்பிற்குள் முழுவதுமாக புதைந்து விடும்.
மாறாக,
“சரி! சரி! அடுத்த வேலைய பாரு, எனக்கு எவ்ளோ வேல இருக்கு. இதெல்லாம் என்ன? போ.. போ.. என்றோ
அல்லது
உனக்கா மிஸ் இத கொடுத்தாங்க என்றோ
அல்லது
செல்போன் அல்லது தொலைக்காட்சியில் புதைந்து அந்த குழந்தையின் உணர்வுகளை முழுவதுமாக ஏற்றுக் கொள்ள முடியாத நிலை தாயிடமிருந்து வெளிப்பட்டு, அதை குழந்தை உணரும் போது ஏமாற்றத்தை எதிர்கொள்ள நேரிடுகிறது.
இங்கு குழந்தை சொல்வது அன்றைய நாளின் நிகழ்வுகள் மட்டுமல்ல.
தான் புரிந்து கொண்டதை உணர்வுகளின் வழியாக வெளிப்படுத்துதலும் ஆகும். குழந்தையின் ஒட்டுமொத்த உணர்வுகளின் சங்கமம் இது.
அதுவே வார்த்தைகளாக வெளிப்படுகிறது.
குழந்தைகளின் வாயிலிருந்து வெளிவருபவை வெறும் வார்த்தைகள் அல்ல; உணர்வுகள் என்பதை நாம் உணர்வதில்லை.
பள்ளியில் மீண்டும் அப்படி ஒரு நிகழ்வு நிகழும். அந்த குழந்தை தாயிடம் வரும்.
“அந்த அக்கா தான் இன்னக்கி பிரேயர் படிச்சாங்க. பிரேயர் படிக்கும்போது திக்கிட்டாங்கம்மா! எல்லாம் சிரிச்சாங்களா, மிஸ் வந்து எடுத்து கொடுத்தாங்கம்மா!” என மீண்டும் மன பூரிப்பை அந்த குழந்தை வெளிப்படுத்தும்.
மீண்டும் தனது தாயால் ஏமாற்றப்படும் சூழல் ஏற்பட்டால் அந்த அன்பை வாங்க மறுக்கின்ற தாய் மூலமாக இரண்டாவது முறையாகவும் அந்த குழந்தையை ஏமாற்றப்படுகிறது.
தனது அன்பை வெளிப்படுத்துவதற்கும் சொல்வதற்கும் தாய் இல்லாத இன்னொருவரை அந்தக் குழந்தை தேர்ந்தெடுக்கும். அந்த தேர்ந்தெடுப்பு தான் தந்தை.
சென்னை போன்ற பெரும் நகரங்களில் தந்தைக்கும் குழந்தைக்குமான தொடர்பு என்பது முற்றிலும் அறுந்து போய் இருக்கிறது.
பெரும்பாலான ஆண்கள் வேலை முடிந்து இரவு 10 மணிக்கு வீட்டிற்கு திரும்புகிறார்கள். தந்தை வீட்டிற்குள் வரும்போது அந்த குழந்தை தூங்கி விடும்.
காலையில் குழந்தை எழும்போது பெரும்பாலும் ஆண்கள் தூங்கிக் கொண்டிருப்பார்கள். பள்ளிக்குச் சென்றதற்கு பின்பாக 9 அல்லது 10 மணிக்கு எழுவார்கள்.
ஒரே படுக்கையில் தந்தையும் குழந்தையும் அருகருகே படுத்தாலும் நேரடியாக இருவரும் பார்த்துக் கொள்ள முடியாத சூழல்தான் பெரும்பாலும் நிகழ்கிறது.
வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை இருவருக்கும் விடுமுறை. தனது தந்தையிடம் ஏதாவது பேசலாம் என்று குழந்தை ஆசை ஆசையாய் வரும் போது, தந்தை தன் வேலைக்காக வெளியே சென்று விடுவார் அல்லது வீட்டில் எப்போதும் செல்போனில் புதைந்திருப்பார்.
திருமண நிகழ்வுகளுக்கு செல்கின்ற பொழுது, தன் வயதுடைய வேறொரு குழந்தையை அரவணைத்து தூக்கி கொஞ்சும் போதும், முத்தம் கொடுக்கும் போதும் அந்த கொஞ்சலையும் அன்பையும் ஏன் எனது தாயும் தந்தையும் தன்னிடம் காட்டுவதில்லை என்ற எதிர்பார்ப்பு குழந்தைகளுக்குள் ஏற்படுகிறது.
அந்த எதிர்பார்ப்பு ஏமாற்றங்களாய் மாறுகிறது. அந்த ஏமாற்றம் ஏக்கங்களை இன்னும் அதிகரிக்க செய்து விடுகிறது.
பொதுவாக குழந்தைகளுக்கு சொல் வடிவில் சொல்லிக் கொடுப்பதை விட, செயல் வடிவில் செயல்படுவது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த தாக்கதோடு பள்ளிக்குச் செல்வார்கள்.
(வளரும்)
முனைவர் மு. பக்கீர் இஸ்மாயில்
இணை பேராசிரியர், பொருளாதார துறை
புதுக்கல்லூரி, சென்னை – 600 014
கைபேசி: +91 9600094408