குழந்தைகளைக் கொண்டாடுவோம் – பகுதி 6

குழந்தைகளைக் கொண்டாடுவோம் பகுதி 6

குழந்தைகள் தாயின் கருவில் இருந்து எப்படியெல்லாம் அவர்கள் வளர்க்கப்படுகிறார்கள் மற்றும் குழந்தைகள் எதிர்கொள்கின்ற பிரச்சனைகள் என்பதை கடந்த காலங்களில் பார்த்தோம்.

எதிர்கால ஆளுமைகளான இன்றைய குழந்தைகள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்கான தீர்வுகளை இப்போது பார்ப்போம்

குழந்தைகளை நல்லவர்களாக வளர்க்க வேண்டிய கடமை ஒவ்வொரு பெற்றோருக்கும் உண்டு.

குழந்தையை நாம் திட்டும் போதும் பாராட்டும் போதும் அதன் சுக துக்கங்களில் நமக்கும் பொறுப்புண்டு என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

உங்கள் குழந்தைகள் உங்களிலிருந்து வந்தவர்கள். அவர்கள்தான் உங்கள் வரலாறுகளை தீர்மானிப்பவர்கள்.
உங்கள் நிகழ்கால செயல்பாடுகள் நாளைய வரலாறுகளாக மாற உங்கள் குழந்தைகளை சிறந்தவர்களாக மாற்றுங்கள்.

சிறுபிராயத்தில் அவர்களிடம் மனம் விட்டு பேசாததால் பெரியவர்கள் ஆனவுடன் அவர்கள் நம்மிடம் மனம் விட்டு பேசுவதில்லை

குழந்தை பருவத்தில் அவர்களை நாம் தள்ளி வைத்தால், வயோதிக பருவத்தில் அவர்கள் நம்மை தள்ளி வைக்கிறார்கள்

‘நான் எவ்ளோ கஷ்டப்பட்டு சம்பாதிச்சு அவன படிக்க வைத்தால், எவ்ளோ திமிரா இருக்கான் பார்த்தியா?’ என்ற உங்கள் கோபம் அவன் செயல் சார்ந்து அல்ல; அவன் உணர்வு சார்ந்தது. அவன் ஏன் அப்படி பேசுகிறான்?’ என்று யோசிக்க பழகுங்கள்.

“அவர் அந்தக் காலத்து ஆளு! சொன்னதையே திரும்ப திரும்ப சொல்வார். நம்முடைய நிலைமையை கொஞ்சம் கூட புரிய மாட்டேங்கிறார்” என்று சொல்லும் மாணவர்களின் தடித்த வார்த்தைகள் தவிர்க்கப்பட வேண்டும்.

குழந்தைகள் என்பவர்கள் உங்களுடைய சொத்து; உங்கள் உருவத்தின், குணத்தின் நகல்.

‘பெற்றோர்களாகிய நாங்கள் குழந்தைகளாகிய உங்கள் மீது பாசம் வைத்திருக்கிறோம்’ என்பதை அவ்வப்போது குழந்தைகளுக்கு எதார்த்தமாக நடைமுறையில் சொல்லிப் பழகுங்கள்.

குழந்தைகளுக்கு பிடித்த உணவுப் பொருளை வாங்கி கொடுப்பதற்கு முன் அவர்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

குழந்தைகளுக்கு பிடித்ததை செய்யுங்கள்.

குழந்தைகளோடு மனம் விட்டு பேசுங்கள்.

குழந்தைகளோடு விளையாட்டாய் சண்டை போடுங்கள்.

குழந்தைகளின் மனக் கஷ்டத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்.

உங்கள் குழந்தைகளின் நண்பர்கள் யார்?

யாரோடு பழகுகிறார்கள்?

என்ன பேசுகிறார்கள்?‘ என்பதையெல்லாம் அவர்களுக்கு தெரியாமல் தெரிந்து கொள்ளுங்கள்.

இவைகளை செய்து விட்டு, பெற்றோர்கள் மீதான குழந்தைகளின் பார்வை என்ன என்பதையும் அறிய வேண்டும்.

உங்கள் குழந்தையின் நண்பர்கள் சகவாசத்தில் வெளிப்படும் வார்த்தைகள் அல்லது அவர்களோடு போனில் பேசிக் கொண்டிருக்கும்போது, நமது பேச்சு வரும்போது அவர்களுடைய வார்த்தைகளை வைத்து, நம் குழந்தைகள் நம்மை எந்த அளவிற்கு புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதை ஓரளவுக்கு புரிந்து கொள்ள முடியும்.

உங்கள் குழந்தையை நீங்கள் அரவணைத்தால் அது அன்புக்கு ஏங்காது.

உங்கள் குழந்தையிடம் நீங்கள் மனம் விட்டு பேசினால் வேறு யாரிடமும் அது மனம் விட்டு பேசத் தேடாது.

உங்கள் குழந்தைகயிடம் நீங்கள் நிபந்தனையற்ற அன்பு செலுத்தினால், வேறு ஒருவனையோ / ஒருத்தியையோ உங்கள் குழந்தை காதலிக்க தேர்ந்தெடுக்காது.

மொத்தத்தில் உங்கள் குழந்தைகளுக்கான முன்மாதிரிகளாக நீங்கள் இருக்க வேண்டும் என்பதில் உறுதியோடு இருங்கள்.

என் தாயைப் போல், என் தந்தை போல் நான் இருப்பேன் என்ற வைராக்கியத்தை உங்கள் குழந்தைகளுக்குள் பதிய வையுங்கள்.

அன்புக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் போது, யாரோ ஒருவன் “தம்பி! நீ சாப்டியாப்பா? என்று ஆறுதலோடு கேட்கும் போது, முதலில் ஏற்க மறுப்பான்.

தொடர்ந்து ஆதரவான ஆறுதலான வார்த்தைகளை அவன் மீது பரவ செய்யும் போது, தாய், தந்தை, உறவுகளிடம் எதிர்பார்த்த அன்பு, அவன் வார்த்தைக்குள் இருக்கிறது என்று நினைத்து அவனோடு சேர்ந்து பழக ஆரம்பித்து விடுவான்.

அன்பை மட்டுமே எதிர்பார்த்து ஒருவனிடம் / ஒருவளிடம் சேரும் போது, அங்கு ஆண், பெண், ஜாதி, மதம், இனம், நிறம், நல்லது, கெட்டது என எதுவும் தெரியாது.

‘பல நாட்களுக்கு பின்னால் என் பையன் அப்படி செஞ்சிட்டான்; அங்கே சேர்ந்து விட்டான்; ரவுடியாக மாறிவிட்டான் என்று புலம்பிப் பயன் இல்லை.

தவறான வயதில் தவறான நபரை வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுத்து விட்டான் / விட்டாள் என்று புலம்பிப் பயன் இல்லை.

அதன் பின், அன்பை கொடுக்கத் தவறிய பெற்றோர்கள் நாம் என்ற குற்ற உணர்வோடு வாழும் சூழல் ஏற்பட்டு விடும் என்பதை மறந்து விடாதீர்கள்.

வருடம் தவறாமல் குழந்தைகள் தினம் கொண்டாடுபவர்களே!

இனிமேல்

தினங்களை விட்டுவிட்டுக்

குழந்தைகளை எப்போது

கொண்டாடப் போகிறீர்கள்?

என்ற கவிக்கோ அப்துல் ரகுமானின் வரிகளை வைத்தே எனது கட்டுரையை நிறைவு செய்கிறேன்.

முனைவர் மு. பக்கீர் இஸ்மாயில்
இணை பேராசிரியர், பொருளாதார துறை
புதுக்கல்லூரி, சென்னை – 600 014
கைபேசி: +91 9600094408

Comments

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.