குழந்தையும் தெய்வமும்!

1997ஆம் ஆண்டு ஒரு நாள் ஒரு வெள்ளிக்கிழமையன்று உலகிலேயே பணக்கார நாடுகளில் ஒன்றான குவைத் மாநகரில் இருந்து பஸ்ஸில் காலை 10 மணி அளவில், அபு கலீபா என்னும் இடத்திற்கு அலுவல் வேலையாக பயணப்பட்டான் விஜய்.

வெள்ளிக்கிழமை வார விடுமுறை என்பதால் குவைத் நகரம் இன்னும் உறங்கிக்கொண்டிருந்தது. விஜய்யும் இன்னும் உறங்கிக்கொண்டு இருந்திருக்கலாம்.

ஆனால் 10 நாட்களுக்கு முன்பு சென்னையில் பிறந்த அவன் முதல் குழந்தை அவனை தூங்க விடாது அபு கலீபாவிற்கு விரட்டியது!

அலுவலக சட்டப்படி இன்னும் இரண்டு ஆண்டுகட்கு அவன் இந்தியா திரும்ப முடியாது. புதிதாகப்பிறந்த அவன் மகன் ‘ஆரூரானை’ முதன் முறையாக பார்க்கும்போது அவனுக்கு இரண்டு வயது ஆகியிருக்கும்!

அண்மையில்தான் கம்பெனியில் சேர்ந்ததால் விஜய் விடுமுறையும் எடுக்க முடியாது. ‘அப்பா சீரியஸ், அம்மா கோமா’ என்று பொய்யோ உண்மையோ சொல்லி அவசர லீவ் கேட்டால் நிர்வாகம் அவன் விசாவை ஒரேயடியாக கான்சல் செய்து அவனை தாய்நாட்டுக்கு திரும்ப அனுப்பி விடும்.

அவன் இந்த வேலை கிடைக்க செலவழித்த ஒரு லட்சமும், வெளிநாட்டு வேலை என்ற கனவும் சாம்பல். இத்தனைக்கும் அவன் வேலை லேசுப்பட்டதல்ல.

அனைத்துலக பொருட்களிலும் விற்பனை செய்வதற்கு மிகவும் கடினமான ‘பிரிட்டானிகா என்சைக்ளோபீடியா’ என்னும் ஆயிரக்கணக்கான பக்கங்களைக் கொண்ட இருபத்து மூன்று தடிமனான புத்தகங்களாலான ‘தகவல் பெட்டக’த்தை விற்க வேண்டும்.

விஜய் என்சைக்ளோபீடியா விற்பனை பிரதிநிதி! அதுவும் முன்பின் பார்த்திராத நாட்டில், முன்பின் தெரியாத ஊரில், முன்பின் அறியாத மனிதர்களிடையே.

அதுவும் இந்தியர்கள், அரேபியர்கள், பாலஸ்தீனியர்கள், பாகிஸ்தானியர்கள், எகிப்தியர்கள், சிங்களர், ஐரோப்பியர்கள் என்று பல தேசத்தவர் வாழும் குவைத் என்னும் வளைகுடா நாட்டில் தங்குவதற்கு உறைவிடம், உணவு, பஸ் அல்லவன்ஸ் போன்றவையே மாத சம்பளமாக தரப்படும்.

ஆனால் அவனுடைய முதல் விற்பனையிலிருந்தே நல்ல கமிஷன். மாதத்தில் ஐந்தாறு செட் விற்பனை செய்தால் கை செலவு போக இந்தியாவிற்கு ரூ 5௦,௦௦௦/- அனுப்பலாம் (1997ல்).

ஆனால் மிகச்சிறந்த சேல்ஸ்மேனும் 6 மாதம், ஒரு வருடம் கஷ்டப்பட்டுவிட்டு “போதுமடா சாமி!” என்று சொந்த நாடு திரும்பிவிடுவார்.

விஜய் குவைத்திற்கு வந்து 4 மாதங்களே ஆகிறன்றன. சில தினங்கள் முன்பு அவன் ஒரு குழந்தைக்கு தகப்பன் என்ற டெலிபோன் அழைப்பு அவனை மகிழ்ச்சி வெள்ளத்தில் புரட்டிப் போட்டு விட்டது.

‘நாட்டுக்கு எப்படி உடனே திரும்புவது? எப்படி தன் மகனை சீக்கிரமாக பார்ப்பது? எப்பொழுது அந்த புத்தம்புது பொக்கிஷத்தை, வம்ச விருட்சத்தை, கைகளில் ஏந்தி கொஞ்சுவது?” போன்ற உணர்வுகள் அவனை உறங்க விடாது அலைக்கழித்தன.

அப்போதுதான் அவன் தலைமையகமான லண்டனிலிருந்து ஒரு அறிவிப்பு வந்தது. இந்த ஒரு மாதத்தில் ‘யார் அதிகம் பிரிட்டானிகா செட் விற்பனை செய்து சாதிக்கின்றார்களோ அவருக்கு இந்தியா சென்று வர இலவசமாக விமான டிக்கட் மற்றும் ஸ்பெஷல் கமிஷன் வழங்கப்படும்’ என்ற தூக்கத்தை தொலைக்க வைத்த அறிவிப்பு.

தாய்நாடு செல்லும் போட்டி‘ ( ஜர்னி ஹோம் கன்டெஸ்ட் ) என்ற அந்த விற்பனை பந்தயம் அனைத்து வளைகுடா நாடுகளின் அனைத்து விற்பனை பிரதிநிதிகளையும் இமாலய முயற்சியுடன் இடைவிடாது போட்டி போட வைத்தது.

போட்டியின் கடைசி நாள் இன்று. விஜய்க்கு இன்னும் இரண்டே இரண்டு செட் தான் வேண்டும். இன்று வெள்ளிக்கிழமை வார விடுமுறை வேறு.

ஆனால் அவன் கையில் ஒரே ஒரு ‘குடும்ப சந்திப்பு’ மீட்டிங். அதாவது கஸ்டமர் வீட்டிற்கு சென்று கஸ்டமர், மனைவி, குழந்தைகள் முன்பு விஜய், பிரிட்டானிகாவின் அருமை பெருமைகளையெல்லாம் எடுத்துரைத்து அவர்களுக்கு விற்பனை செய்யவேண்டும்.

அதை வாங்குவதற்கு இந்திய ரூபாயில் 70,000/- (1997ல்) என்பதால், பலரும் ‘வேண்டாம்!’ என்று கதவை சாத்திவிடுவர்.

ஒவ்வொரு நாளும் ஏறத்தாழ நூறு பெற்றோர்களை அலுவலகங்களிலும், வீடுகளிலும், ஷாப்பிங் மால்லிலும் சந்தித்து, அதில் பத்தே பத்து பேர் கொஞ்சம் அக்கறை காட்டி, அவர்களை அவர்கள் வீடுகளில் அவர்தம் குழந்தைகளுடன் பார்த்து, ஏறத்தாழ ஒரு மணி நேரம் உரையாடி, வெகு அபூர்வமாக ஒரே ஒரு குடும்பம் அதுவும் இன்ஸ்டால்மென்டில் ஒரு செட் வாங்கும்.

ஏமாற்றம், விரக்தி, என்று எதையும் தாங்கும் இதயம் இருந்தால்தான் இந்த வேலையில் நீடிக்கலாம்!

போதாக்குறைக்கு வெள்ளி மற்றும் விடுமுறை நாட்களில் இந்தக்கால உணவு டெலிவரி செய்யும் மோட்டார் சைக்கிள் மனிதர்களைப்போல் அரக்க பரக்க உழைக்க வேண்டும்.

அதனால்தான் நூறு விற்பனை பிரதிநிதிகளில் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார். மற்ற 99 பேரும் இந்தியா திரும்பி கம்பெனியையும் கிளைமேட்டையும் உணவு பழக்கத்தையும் இன்னும் என்னெல்லாமோ குறைகளையும் கூறி “அதனால்தான் ஊர் திரும்பி விட்டேன்” என்று தம் குடும்பங்களிடம் தம் தோல்வியை மறைத்து அங்கலாய்த்துக் கொள்வர்.

விஜய் இவர்களிலிருந்து வேறுபட்டவன். ஆனால் அவனுக்கே போட்டியின் கடைசி நாளான இன்று ஒரே ஒரு “வீட்டு சந்திப்பு”தான்.(ஹோம் அப்பாயிண்ட்மெண்ட்).

என்னதான் முயன்றாலும் இன்று அவன் ஒரு செட் தான் விற்கமுடியும். வெற்றி பெற மேலும் ஒரு செட் தேவை என்பதால் ‘நான் இந்தியா போக முடியாது!’ என்ற மனநிலையுடன் பஸ்ஸிலிருந்து அபு கலீபாவில் இறங்கி கஸ்டமர் வீட்டை நோக்கி நடந்தான்.

அவன் செய்யும் வேலைக்கு கோட், சூட், டை என்று ‘ஜம்’மென்று இருந்தான். உணர்வுகளை அதிகம் வெளியே காட்டாத முகமும், சரளமான ஆங்கிலப் பேச்சும், வசீகரமான பெர்சனாலிட்டியும் அமைந்தவன் அவன்.

கஸ்டமர் ராபர்ட் வீட்டை அடைந்து, முக மலர்ச்சியுடன் “குட் மார்னிங்!” சொல்லி, ‘ஸ்மால் டாக்’ எனப்படும் குடும்ப அறிமுக உரையாடலில் அவர் குழந்தைகளின் பெயர், பள்ளி, வகுப்பு விபரங்களை அறிந்து,

வசதியான நாற்காலியில் அமர்ந்து கண்ணைக் கவரும் வண்ணங்களில் அனைத்து புத்தகங்களும் அடங்கிய, விலையுயர்ந்த பட்டுப் புடவை போன்ற பிரிட்டானிகா போஸ்ட்டரை டைனிங் டேபிள் மீது விரித்து பிரிட்டானிக்கா அறிவு பொக்கிஷத்தைப் பற்றி அற்புதமாக அவர்களுடன் விவரித்துக் கொண்டிருந்தான் விஜய்.

திடீரென்று காலிங் பெல் சப்தம் கேட்டு ராபர்ட் கதவைத்திறந்தபோது பக்கத்து வீட்டுக்காரரான வில்லியம்ஸ் உள்ளே நுழைந்தார்.

இது போன்ற தருணங்களில் வந்தவர் சும்மா இருக்காமல், “இதையெல்லாம் படிக்க குழந்தைகட்கு நேரம் எங்கே? ரொம்ப விலை ஜாஸ்தி, வீட்டில் எங்கு வைப்பது? நாட்டிற்கு திரும்பி போனால் இதை எப்படி மூட்டை கட்டி எடுத்துச்செல்வது?” என்றெல்லாம் தன் மேதாவிலாசப் பேச்சுக்களால் அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தி விட்டு, அந்த குடும்பம் வாங்கும் யோசனையை தடாலடியாக பின்வாங்கச்செய்து விட்டு, வந்த வேலை முடிந்தது போல கிளம்பி சென்று விடுவார்கள். டோட்டல் டாமேஜ்!

அப்படி உள்ளே நுழைந்த வில்லியம்ஸ் எதையாவது பேசி ராபர்ட் குடும்பத்தை பிரிட்டானிகா வாங்காமல் தடுத்தாலும் தடுத்து விடுவார் என்று தெரிந்தும் ‘தலைக்கு மேலே வெள்ளம் போய் விட்டது; வந்தது வரட்டும்’ என்று விஜய் தன் முழு விற்பனைத் திறனையும் பிரிட்டானிக்கா தகவல் களஞ்சியத்தின் முழு பயன்களையும் உயிர்ப்போடு உற்சாகத்தோடு ராபர்ட் குடும்பத்திற்கு எடுத்துரைக்க,

அவர்களும் பலவித சந்தேக நிவர்த்திக்குப் பிறகு “ஓ.கே” சொல்லியவுடன் மகிழ்ச்சி வெள்ளத்தில் அவசரம் அவசரமாக விஜய், அப்ளிகேஷன் பாரம், மற்றும் இன்ஸ்டால்மென்ட்கள் பாரம் எல்லாம் பூர்த்தி செய்து, அட்வான்ஸ் வாங்கி, கையெழுத்து பெற்று, “நாளை காலை டெலிவரி! கங்கிராஜுலேஷன்ஸ்!” என்று சொல்லி விட்டு புறப்படத் தயாரானான்.

அதுவரை அமைதியாக அனைத்தையும் அவதானித்துக் கொண்டிருந்த பக்கத்து வீட்டுக்காரர் வில்லியம்ஸ், விஜய்யிடம் ” எனக்கும் ஒரு செட் அனுப்பிவிடுங்கள் நாளை!” என்று அட்வான்ஸ் கொடுக்க, சற்றும் எதிர்பாராத இன்ப அதிர்ச்சியால் சற்று நிலைகுலைந்த விஜய்,

சமாளித்து துரிதகதியில் வில்லியம்ஸின் விபரங்களை அனைத்து படிவங்களில் எழுதி, கையெழுத்து வாங்கி, கைகுலுக்கி, அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு, மகிழ்ச்சி வெள்ளம் சுனாமியாக கரைபுரண்டு ஓட, இப்போது கிடைத்த இரண்டு செட்களால், தான் ‘ஜர்னி ஹோம் கன்டெஸ்ட்டில்’ வெற்றி பெற்றதை உணர்ந்து, கால்கள் வானத்தில் தவழ, பஸ் ஸ்டாப் விரைந்து குவைத் மாநகர் திரும்ப பஸ் ஏறினான் விஜய்.

பஸ் பயணம் முழுக்க புதிதாக பிறந்த புதல்வனை எப்படியெல்லாம் கொஞ்சி மகிழவேண்டும் என்ற கற்பனையில் ஆழ்ந்தான்.

ஆபீஸ் வந்து வெற்றிச் செய்தியை மானேஜரிடம் சொல்ல, அவரும் சொன்ன சொல்லை காப்பாற்ற, விஜய் சென்னை செல்ல விமான டிக்கட்களை புக் செய்யும்படி அவர் செக்ரட்டரிக்கு பணிந்தார்.

‘கொடுக்கிற தெய்வம் கூரையை மட்டுமல்ல, பக்கத்து வீட்டையும் பிய்த்துக் கொண்டு கொடுக்கும்’ என்று தெளிந்தான் விஜய் அன்று!

ஜெ.ஜெயகுமார்
சென்னை
கைபேசி: 9884251887