கண்ணாடி
நம் பிம்பத்தை பிரதிபலிக்கும்
கண்ணாடி – இவ்வுலகில் சிருஷ்டிக்கப்
படவில்லையெனில் நாம் தன்னலமற்று
வாழ்ந்திருப்போமோ என்று ஒரு சிந்தனை
கார் மேகம்
கார் மேகம் சூழ்கிறது
குப்பத்துப் பிள்ளைகள் ஒன்று கூடி
கூரையின் ஓட்டையை அடைக்கிறார்கள் – எதிரே
அப்பார்ட்மெண்ட் பிள்ளைகள் சிப்ஸூடன்
அதைக்கண்டு பொழுது போக்குகிறார்கள்
பிரியாணிக்காகத்தான்
இலை தழை புல் போட்டு தன்னை
பாசமாக வளர்ப்பதே
பிரியாணிக்காகத்தான் என்று
கசாப்பு கடையில் பாய் தன் கழுத்தில்
கத்தி வைக்கும் வரை
தெரிவதில்லை ஆட்டிற்கு
ஃபாஸ்டாக்
ஃபாஸ்டாக் வந்து விட்டது
இனி சுங்கச் சாவடியை விரைவில்
கடந்து விடலாம் என்கிறார்கள்
என் மனம் அங்கே கொய்யா
வேர்க்கடலை விற்கும் அன்பர்கள்
நிலைமையை நினைக்கத் தூண்டுகிறது
கூகுள் பே
அந்த காலத்து மயிலாப்பூர்
காப்பித்தூள் விற்கும் தாத்தாவுக்கும்
பஸ் ஸ்டான்டில் வடை விற்கும்
பாட்டிக்கும்
கீரை கட்டு விற்கும் அக்காவுக்கும்
இன்றும் விளங்கியபாடு
இல்லை இந்த கூகுள் பே கருமத்தை
பெரியார் படம்
பெரியார் படம் பொறித்த பத்து
ரூபாய் நாணயம் பிள்ளையார்
கோவில் அர்ச்சகர் தட்டில் விழுந்தது
க.சஞ்ஜெய்
சென்னை
கைபேசி: 7904308768