கூடாரை வெல்லும்சீர் கோவிந்தா உன்தன்னை

கூடாரை வெல்லும்சீர் கோவிந்தா உன்தன்னைப் என்ற இப்பாடல், சூடிக்கொடுத்த சுடர்க்கொடி  என்று அழைக்கப்படும் ஆண்டாள் அருளிய, திருப்பாவையின் இருபத்து ஏழாவது பாசுரம் ஆகும்.

திருப்பாவை பாடல் 27

கூடாரை வெல்லும்சீர் கோவிந்தா உன்தன்னைப்

பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்

நாடு புகழும் பரிசினால் நன்றாகச்

சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே

பாடகமே என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்

ஆடையுடுப்போம் அதன்பின்னே பாற்சோறு

மூட நெய் பெய்து முழங்கை வழிவாரக்

கூடியிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்

விளக்கம்

ஏற்றமிகு கோவிந்தனே!

எத்தனை சந்தர்ப்பங்கள் தந்தும் உன்னோடு இணையாமல், எதிர்த்தே நிற்கும் பகைவர்களை நீ வென்று நிற்பவன்!

உன்னுடைய பெருமைகளைப் பாடியதனால், நாங்கள் பயனைப் (பறையை) பெற்று நாங்கள் உன்னிடம் பெறும் வெகுமதிகளால், நாட்டில் உள்ள மக்கள் எல்லோரும் எங்களைப் போற்றுவர்.

மார்கழி விரதம் நிறைவு பெற்று, நாங்கள் அணிய கை வளையல்கள், தோள் நகை, காதுத் தோடுகள், செவிப்பூக்கள், கால் சிலம்புகள், புத்தாடை ஆகியவற்றை எங்களுக்கு அருள்வாய்.

மார்கழி நோன்பினை நிறைவு செய்யும் வகையில், பாலில் வெந்த சோற்றில், அது மூடும் அளவிற்கு நெய்யிட்டு, கூட்டமாக உன்னுடன் அமர்ந்து, கைகளில் நெய் வழிய, பால்சோறு உண்போம்.

அத்தகைய மகிழ்ச்சியை எங்களுக்கு வழங்கி, எங்களைக் காப்பாயாக!

கோதை என்ற ஆண்டாள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.