கூடா நட்பு

கண்ணனூர் என்ற ஊரில் விவசாயி ஒருவர் வசித்து வந்தார். அவரின் வீடு அவ்வூரின் ஒதுக்குப்புறத்தில் இருந்தது. அவர் தனது விவசாய வேலைகளுக்காக கழுதை ஒன்றை வளர்த்து வந்தார்.

கழுதை பகல் முழுவதும் விவசாயின் விவசாய வேலைக்கு உதவி செய்தது. அதனால் அவர் இரவு நேரத்தில் அதனை சுதந்திரமாக நடமாட விட்டார்.

ஒரு நாள் இரவு நேரத்தில் காட்டில் வசித்த நரி ஒன்று ஊரின் ஒதுக்குப்புறத்தில் இருந்த கழுதையைச் சந்தித்தது.

அப்பொழுது நரி கழுதையிடம் “நண்பனே இங்கிருந்து சற்று தொலைவில் வெள்ளரித் தோட்டம் ஒன்று உள்ளது. அங்கே வெள்ளரிக் காய்கள் மிகவும் சுவையானவையாக இருக்கின்றன. நாம் இருவரும் அங்கே சென்று வெள்ளரிக் காய்களை உண்போமா? நீ என்னுடன் வருகிறாயா?” என்று கேட்டது.

அதனைக் கேட்ட கழுதைக்கு வெள்ளரிக் காய்களைத் தின்ன ஆசை வந்தது. அதனால் நரியிடம் “நண்பனே எனக்கு வெள்ளரிக் காய் சாப்பிட மிகவும் ஆசையாக உள்ளது. நாம் இருவரும் இப்போதே அங்கே செல்வோம்” என்று கூறியது.

நரியும் கழுதையும் வெள்ளரித் தோட்டத்தை அடைந்து அங்கிருந்த வெள்ளரிக்காய்களை ஆசை தீரத் தின்றன. பின் வெள்ளரித் தோட்டக்காரன் வரும் முன்னர் அங்கிருந்து வெளியேறினர்.

இவ்வாறாக தினமும் இரவில் நரியும் கழுதையும் வெள்ளரிக் காய்களைத் திருடித் தின்றன.

வெள்ளரித் தோட்டக்காரன் வெள்ளரிக் காய்கள் களவு போவதை கவனித்து வந்தான். ஆனால் அவனால் திருடனைப் பிடிக்க இயலவில்லை.

ஒருநாள் வழக்கம் போல நரியும் கழுதையும் வெள்ளரித் தோட்டத்தில் வெள்ளரிக் காய்களை வயிறு நிறைய உண்டன. கழுதைக்கு வயிறு நிறைந்தால் பாட வேண்டும் போல இருந்தது.

அதனை தன் நண்பனான நரியிடம் “நண்பனே எனக்கு வயிறு நிறைந்தது மகிழ்ச்சியாக உள்ளது. அதனால் நான் இப்பொழுது பாட்டு பாடப் போகிறேன்” என்றது.

அதற்கு நரி கழுதையிடம் “வேண்டாம். நீ பாடினால் வெள்ளரித் தோட்டக்காரன் வந்து விடுவான். நமக்கு தண்டனை கொடுப்பான். எனவே நாம் இப்பொழுதே இங்கிருந்து புறப்படுவோம்” என்றது.

நரி கூறியதைக் காதில் வாங்காத கழுதை கத்த ஆரம்பித்தது. உடனே தந்திரக்கார நரி அங்கிருந்து சற்று தொலைவில் சென்று மறைந்து கொண்டது. இதனைக் கவனிக்காத கழுதை உரத்த குரலில் கத்தியது.

கழுதையின் சத்தத்தைக் கேட்ட வெள்ளரித் தோட்டக்காரனுக்கு திருடன் யார் என்பது புரிந்தது. அவன் ஆத்திரத்துடன் கம்பினை எடுத்துக் கொண்டு கழுதை இருக்குமிடத்திற்கு வந்தான்.

கழுதை தோட்டக்காரனை கவனிக்காமல் கத்திக் கொண்டே இருந்தது. தோட்டக்காரன் கோபத்தில் கழுதையை கம்பால் நையப் புடைத்து விட்டான். பின் கழுதையின் கழுத்தில் பெரிய கல்லைக் கட்டி தொங்க விட்டு தோட்டத்தை விட்டு விரட்டி விட்டான்.

கழுதை அழுதபடி நடக்கத் தொடங்கியது. அப்போது அங்கு வந்த நரி கழுதையிடம் “நண்பனே உன் பாடலுக்கு சரியான பரிசு கிடைத்து விட்டது. நான் போகிறேன்” என்று கேலியாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றது.

அப்பொழுது கழுதை “கூடா நட்பு கேடாய் முடியும் என்பது இப்போதுதான் எனக்கு புரிகிறது. நான் செய்த தவறுக்கு இது சரியான தண்டனை தான்” என்று வருத்தப்பட்டு தன் இருப்பிடம் நோக்கிச் சென்றது.

குழந்தைகளே கெட்டவர்களின் பழக்கத்தால் கெட்டதே நடக்கும் என்பதை மேலே உள்ள கதையின் மூலம் அறியலாம். எனவே கெட்டவர்கள் என்று தெரிந்தால் உடனே அவர்களை விட்டு விலகி இருப்பது நமக்கு நன்மை அளிக்கும்.

 

One Reply to “கூடா நட்பு”

  1. கழுதை மனநிலையில் சட்ட விரோதமாகப் பொருள் தேட முயன்று
    போதைப் பொருள் கடத்தல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் இதுபோல் இழிதண்டனைக்கு உள்ளாவார்கள்.
    கூடாநட்பால் அழிவோருக்கு சிறந்த பாடம் கற்பிக்கும் கழுதைக்கதை அருமை!

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.