கூற்றுவ நாயனார் – இறைவனின் திருவடியை திருமுடியாக ஏற்றவர்

கூற்றுவ நாயனார்

கூற்றுவ நாயனார் தில்லை சிற்றம்பலத்தில் அருள்புரியும் நடராஜப் பெருமானின் திருவடிகளையே திருமுடியாக ஏற்றுக் கொண்ட மன்னர்.

திருக்களந்தை என்னும் திருத்தலத்தை குறுநில மன்னர்கள் பலர் ஆட்சி செய்தனர். அதில் களப்பாளர் மரபில் தோன்றியவர் கூற்றுவ நாயனார் என்பவரும் ஒருவர்.

பகைவர்களுடன் போர்புரிகையில் கூற்றுவனைப் போல் (எமனைப் போல்) தோன்றி மிடுக்குடன் போர்புரிந்து வென்றமையால் இவர் கூற்றுவர் என்று அழைக்கப்பட்டார்.

சிவனார் மேல் ஆழ்ந்த அன்பும் பெரும் பக்தியும் கொண்டமையால் கூற்றுவ நாயனார் என்று ஆனார். ஆதலால் இவரின் இயற்பெயரை அறிய இயலவில்லை.

களந்தை என்னும் ஊரில் இருந்த அம்மன்னர் பல மன்னர்களுடன் போர் செய்து வெற்றி பெற்றார். அந்த வெற்றிகளால் செருக்குறாமல் இறைவனை நினைத்த வண்ணம் இருந்தார்.

‘எல்லாம் அவனின் திருவருள்’ என்ற எண்ணத்தினைக் கொண்டவராக இருந்ததால் அரனாரின் திருநாமத்தை மறவாமல் ஓதியபடியே இருப்பார்.

சிவனடியார்களைக் கண்டால் அவர்களுக்கு வேண்டியதைச் செய்து கொடுப்பார். மேலும் பலவகையான சிவத்தொண்டுகளிலும் ஈடுபட்டு பேரின்பம் கண்டார்.

முடியுடை மன்னர்

இறைவனாரின் அருள் வலிமையைப் பெற்றிருந்ததால் அவருக்கு எல்லா வலிமைகளும் தானாகவே கிடைத்தது. தேர்ப் படை, காலாள் படை, குதிரைப் படை மற்றும் யானைப் படை என நால்வகையான படைகளும் நிரம்பி இருந்தன.

ஆதலால் அவர் சேர, சோழ, பாண்டியன் உள்ளிட்ட மூவேந்தர்களையும் மேலும் பல மன்னர்களையும் போரில் வென்று வெற்றி முகத்துடன் விளங்கினார். அவருடைய அரசும் விரிந்து பரந்து விளங்கியது.

தமிழ்நாட்டில் மூவேந்தர்களாகிய சேர,சோழ, பாண்டிய மன்னர்கள் மட்டுமே மணிமுடி அணியும் வழக்கத்தினைக் கொண்டிருந்தனர். ஆதனால் அவர்களை முடியுடை மன்னர்கள் என்று வழங்குவது மரபு.

குறுநில மன்னரான கூற்றுவ நாயனார் தம்முடைய வலிமையால் மூவேந்தர்களையும் வென்று வெற்றி வீரராக விளங்கியபோதும், அவரால் முடியுடை மன்னராக முடியவில்லை.

மூவேந்தர்களின் வழியில் பிறக்கவில்லை என்ற குறையைத் தவிர முடிசூடிக் கொள்ள எல்லாத் தகுதியும் அவரிடம் நிறைந்து விளங்கியது.

மணிமுடியை தாமாகவே மன்னர்கள் சூடிக் கொள்வதில்லை. வேளாளச் செல்வர்கள் தரச் சிறந்த அந்தணர்கள் உரிமையுடைய மன்னர்களுக்கு மணிமுடியைச் சூட்டுவார்கள்.

தில்லை, திருவாரூர், உறையூர் மற்றும் பூம்புகார் ஆகிய இடங்களில் சோழ மன்னர்கள் முடிசூடிக் கொள்ளுவது வழக்கம்.

‘இப்போது நாட்டின் ஆட்சிமுறை நம் கையில் இருப்பதனால் நாமே முடி புனைந்து அரசாள்வது முறை’ என்ற கருத்து கூற்றுவ நாயனாரின் மனதில் தோன்றியது.

ஆகவே கூற்றுவ நாயனார் இறைவனின் திருக்கோவில்களில் சிறந்த தலமான தில்லையில் முடிசூடிக் கொள்ள ஆர்வம் கொண்டார். அதே சமயத்தில் சோழர்களின் மணிமுடியை தில்லைவாழ் அந்தணர்கள் பாதுகாத்து வந்தனர்.

ஆதலால் தில்லையை அடைந்த கூற்றுவ நாயனார் மணிமுடி சூடிக்கொள்ளும் தம்முடைய விருப்பத்தை தில்லைவாழ் அந்தணர்களிடம் தெரிவித்தார்.

அதற்கு தில்லைவாழ் அந்தணர்கள் “சோழப் பரம்பரையில் வரும் மன்னர்களைத் தவிர மற்ற மன்னர்களுக்கு மரபுக்கு மாறாக திருமுடி அணிவிக்க மாட்டோம்.” என்று மறுத்து விட்டனர்.

சோழ நாட்டினை ஆளும் மன்னனுக்கு முடிசூட மறுத்ததால் அரசனுடைய கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்று தில்லைவாழ் அந்தணர்கள் அஞ்சினர்.

ஆதலால் தம்மில் ஒரு குடும்பத்தாரை மட்டும் தில்லை ஆடலரசனுக்கு வழிபாட்டினை நடத்தவும், சோழ அரசரின் மணிமுடியைப் பாதுகாக்கவும் சோழநாட்டில் விட்டுவிட்டு ஏனையோர் சேர நாட்டிற்கு புலம் பெயர்ந்தனர்.

தில்லைவாழ் அந்தணர்கள் சோழ நாட்டினைவிட்டு சென்றதற்கான காரணம் தெரியாமல் கூற்றுவ நாயனார் வருந்தினார்.

இறைவனின் திருவடி

‘தில்லைவாழ் அந்தணர்கள் எனக்கு திருமுடியைச் சூடாவிட்டாலும், அவர்களுள் முதல்வராகிய ஆடலரசனின் திருவடியை நன்முடியாகச் சூடிக்கொள்வேன்’ என்று எண்ணி அம்பலத்தரசனை, ‘நீயே நின் திருவடியை எனக்கு மணிமுடியாகச் சூட்டி அருள வேண்டும்’ என்று மனமுருகி வேண்டிக் கொண்டார்.

அன்றிரவு கூற்றுவ நாயனார் துயில்கையில் அவர் கனவில் தோன்றிய ஆடலரசன் குஞ்சித பாதத்தை தம்முடைய அடியாரின் விருப்பப்படியே மணிமுடியாகச் சூட்டினார்.

உடனே விழித்தெழுந்த நாயனார் தாம் பெற்ற பேற்றை எண்ணி மகிழ்ந்தார். இறைவனின் திருவருளை எண்ணி எண்ணி உருகினார்.

தில்லைவாழ் அந்தணர்கள் மறுத்ததை எல்லோருக்கும் முதலவான இறைவனார் நிகழ்த்தியை எண்ணி நெகிழ்ந்து பரவினார்.

தில்லைவாழ் அந்தணர்கள் சேர நாடு சென்றதற்கான காரணத்தை அறிந்து ‘எதற்கும் அஞ்ச வேண்டாம்’ என்று ஓலை அனுப்பி அவர்களை சோழ நாட்டிற்கு மீண்டும் வருவித்தார் கூற்றுவர்.

தில்லைவாழ் அந்தணர்களும் இறைவனார் கூற்றுவ நாயனாருக்கு திருவருள் புரிந்ததை அறிந்ததை அறிந்து அவரிடம் பேரன்பு கொண்டு தில்லை திரும்பினர்.

பின்னர் கூற்றுவ நாயனார் இறைவனார் கோவில் கொண்டுள்ள பலத் திருத்தலங்களுக்கும் சென்று, திருத்தொண்டுகள் செய்து வழிபட்டு பேரின்பம் கண்டார். இறுதியில் நிலைத்த இன்பமான வீடுபேற்றினை இறையருளால் பெற்றார்.

கூற்றுவ நாயனார் குருபூஜை ஆடி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் பின்பற்றப்படுகிறது.

இறைவனின் திருவடித் தாமரைகளையே திருமுடியாக ஏற்றுக் கொண்ட கூற்றுவ நாயனாரை சுந்தரர் திருத்தொண்ட தொகையில்ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோன் அடியேன்‘ என்று போற்றுகிறார்.

Visited 1 times, 1 visit(s) today