கூழ் வடகம் செய்வது எப்படி?

என்னதான் சாதத்துடன் கூட்டு, பொரியல், அவியல் சேர்த்து சாப்பிட்டாலும் கூழ் வடகம் சேர்த்து சாப்பிடும் ருசியே தனிதான். வடகத்திற்கு என்று பெரியவர் முதல் சிறியவர் வரை பெரிய ரசிகர் கூட்டம் உண்டு.

கோடை வந்து விட்டாலே புழுக்கமும், வெட்கையும் எல்லோரையும் வாட்டி எடுத்துவிடும். அப்படி வாட்டி எடுத்தும் விடும் வெயில் காலத்தில் மட்டுமே தயாரித்து பத்திரப்படுத்தி தேவையான பொழுது உபயோகிக்கக் கூடிய உணவு பதார்த்தங்களுள் கூழ் வடகம் முக்கியமானது.

எளிய முறையில் சுவையான கூழ் வடகம் தயார் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

 

தேவையான பொருட்கள்

இட்லி அரிசி – 1 கப்

ஓமம் – 2 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

தண்ணீர் – 8 கப்

 

செய்முறை

முதலில் இட்லி அரிசியை நான்கு மணி நேரம் ஊற வைக்கவும். பின் கிரைண்டரில் இட்லி மாவு பதத்திற்கு ஆட்டிக் கொள்ளவும். அதனுடன் உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.

 

இட்லி மாவு பதத்தில்
இட்லி மாவு பதத்தில்

 

அதனுடன் தேவையான அளவு ஓமம் சேர்க்கவும்.

 

ஓமம் சேர்க்கும்போது
ஓமம் சேர்க்கும்போது

 

அடி கனமான பாத்திரத்தில் எட்டு கப் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க விடவும். பின் அதனுடன் அரிசி மாவை சிறிது சிறிதாக சேர்த்து கட்டி விழாதவாறு கிளறிக் கொண்டே இருக்கவும்.

 

கொதி நீரில் இடும்போது
கொதி நீரில் இடும்போது

 

மாவு வெந்தவுடன் சிறிது நிறம் மாறி நல்ல வாசனையுடன் கூழ் பதத்திற்கு வரும். அது தான் வடகம் ஊற்றுவதற்கு சரியான பதம்.

 

கூழ் பதத்தில் மாவு
கூழ் பதத்தில் மாவு

 

அடுப்பை அணைத்து வடகம் கூழை இறக்கி விடவும். பின் சுத்தமான துணியை வெயில் படும் இடத்தில் விரிக்கவும். வடகம் கூழை ஒரு சிறிய ஸ்பூனில் எடுத்து சின்ன சின்ன வட்டமாக படத்தில் காட்டியபடி ஊற்றவும்.

 

வடகமாகக் காய வைக்கும்போது
வடகமாகக் காய வைக்கும்போது

 

வடகம் நன்றாகக் காயும் வரை வெயிலில் காயவிடவும். வடகம் நன்றாகக் காய்ந்தவுடன் துணியைத் திருப்பி தண்ணீரை சிறிது சிறிதாக தெளித்து துணியில் இருந்து பிய்த்து எடுக்கவும்.

பின் ஒரு தட்டில் வைத்து ஈரப்பதம் இல்லாதவாறு நன்கு காயவைக்கவும். (ஈரப்பதம் இருந்தால் வடகம் கெட்டு விட வாய்ப்பு உண்டு). வடகம் சுருளக் காய்ந்ததும் சுத்தமான டப்பாவில் காற்றுப் புகாதவாறு அடைத்து வைக்கவும். மேற்கூறிய பக்குவத்தில் செய்த வடகம் ஒரு வருடம் வரைக் கெட்டுப் போகாமல் இருக்கும்.

 

காய்ந்த வடகம்
காய்ந்த வடகம்

 

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சுருளக் காய்ந்த வடகத்தைப் போட்டு வறுக்கவும். இதனை எல்லா வகையான சாதத்துடனும் சேர்த்துச் சாப்பிடலாம். குழந்தைகளுக்கு வறுத்து தனியே தின்பண்டமாகக் கொடுக்கலாம்.

 

எண்ணெயில் பொறிக்கும்போது
எண்ணெயில் பொறிக்கும்போது

 

குறிப்பு: கூழ் வத்தல் தயார் செய்யும் போது விருப்பமுள்ளவர்கள் மிளகாயை அரைத்து விழுதாகச் சேர்த்து தயார் செய்யலாம்.

ஓமம் சேர்ப்பதால் சீரண சக்தி எளிதாவதுடன், ஒரு வித நல்ல வாசனையுடன் வடாம் சாப்பிட ருசியாக இருக்கும்.

அரிசி மாவை கூழ் பதத்தினை விட கட்டியாகக் காய்ச்சி அச்சில் ஊற்றி முறுக்காப் பிழிந்து காய வைத்து வடகம் தயார் செய்யலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.