கூவம் ‍ஆறு - ஓர் பார்வை

கூவம் ஆறு – ஓர் பார்வை

கூவம் ஆறு பற்றி தெரியாதவர்கள் சென்னை நகரில் இருக்க மாட்டார்கள். சென்னைக்கு வெளியே இருப்பவர்களும் கூவம் பற்றித் தெரிந்து வைத்திருப்பார்கள்.

கூவம் என்றால் என்ன?

அது பெரிய சாக்கடை என்றே பலர் நினைக்கிறோம்.

அது ஒரு புனித நதி என்றால் நம்புவீர்களா?

அதுதான் உண்மை. கூவம் ஆறு பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளத் தொடர்ந்து படியுங்கள்.

சென்னை நகரில் இருப்போர் கூவம் ஆறு பற்றி அறிவார்கள். ஆனால் கொசஸ்தலை ஆற்றை அறிந்திருக்க மாட்டார்கள்.

நாம் கூவம் ஆறு என்ற தலைப்பில் இரண்டு நதியையும் பற்றி பார்ப்போம்.

காரணம் இன்றைய நிலையில் கொசஸ்தலை ஆறு சென்னைக்கு நீர் கொடுக்கின்றது. கூவம் சென்னைக்கு நீர் கொடுக்கவும் செய்கின்றது; சென்னை மாநகரத்திலிருந்து கழிவுகளைக் கொண்டும் போகின்றது.

கூவம் ஆற்றின் வழித்தடம்

தொண்டை நாட்டில் பாயும் ஆறுகளில் பாலாறு, பொன்னையாறு, வேகவதியாறு, நந்தியாறு, கொசஸ்தலையாறு, நகரியாறு, ஆரணியாறு, செய்யாறு ஆகியவையும் இன்னும் சிற்றாறுகளும் அநேகம் உண்டு.

இவற்றில் கர்நாடகத்தில் தொடங்கும் பாலாறும், பொன்னை வழியாக வரும் பொன்னையாறும் சேர்ந்து, போகும் வழியில் கால்வாய் மூலமாக, சுமார் 1,500 ஏக்கர் பரப்பளவுள்ள பல்லவர் காலத்து காவேரிபாக்கம் ஏரியையும், மகேந்திரவர்ம பல்லவனால் உருவாக்கப்பட்ட மகேந்திரவாடி ஏரியையும் நிரப்புகின்றன.

இன்னும் எத்தனையோ ஏரிகளை நிரப்பினாலும் கூவம் பற்றிய தொடராதலால் இவ்விரண்டு ஏரிகளைப் பற்றி குறிப்பிடுகின்றோம்.

ஆற்றில் அணை கட்டினால் நீரோட்டம் தடுக்கப்பட்டு, வடிகால் பகுதி வறண்டுவிடும் என்பதால், அந்தக் காலத்தில் ஏரிகள், குளங்கள் அமைத்து நீரை நிரப்பினார்கள்.

காவேரிபாக்கம் ஏரியின் உபரிநீர், பணப்பாக்கம் என்ற ஊரின் வழியாக ரெட்டிவலம் என்ற கிராமம் வரை காவேரிபாக்கம் கலங்கள் ஓடை என்ற பெயரில் பாய்கின்றது. அங்கிருந்து கொசஸ்தலையாறு என்ற பெயரில் பாய்ந்து வருகின்றது.

மகேந்திரவாடி(மகேந்திர தடாகம்) என்ற ஏரியின் உபரிநீர், வேப்பேரி கீழ்வீதி வழியாக கல்லாறு என்ற பெயரில் தக்கோலம் வழியாக பாய்ந்து கொசஸ்தலை ஆற்றில் கலக்கின்றது.

கொசஸ்தலை ஆற்றுநீர், கேசாவரம் என்ற கிராமத்தில் தடுப்பணையின் மூலமாக இரண்டு பாகமாக பிரிந்து கூவம் என்ற பெயரில் சத்தரை வழியாக திருவள்ளுர் வழியாக பாய்ந்து வருகின்றது.

கூவம் ஆறு நீர் கால்வாய் மூலமாக திருநின்றவூர் பெரிய ஏரிக்கு வந்து ஏரி நிரம்பிய பின், உபரி நீர் பாக்கம் பெரிய ஏரிக்கு வந்து அதன் உபரி நீர், பாலவேடு ஏரிக்கும் மற்றும் பாக்கம் கிராமம் தாங்கல் ஏரியை நிரப்பி, பின்பு பாக்கம் கிராம ஆற்று ஓடைக்குச் சென்று காட்டாங்கால் வழியாக புழல் ஏரிக்கும் செல்லும்படியாக இருந்தது.

திருநின்றவூர் அருகில் ஜமீன் கொரட்டூர் கிராமத்தில் கூவம் ஆற்றை, தடுத்து ஒருபகுதி செம்பரம்பாக்கம் ஏரிக்கு திருப்பி விடப்படுகின்றது.

செம்பரம்பாக்கம் ஏரியின் உபரிநீர், அடையாறு என்ற பெயரில் அனகாபுத்தூர், சைதாப்பேட்டை வழியாக சென்னைக்குள் பாய்கின்றது.

கொரட்டூர் அணையிலிருந்து உபரிநீர் பருத்திப்பட்டு வழியாக திருவேற்காடு தாண்டி சென்னைக்குள் பாய்கின்றது.

இந்நதியும் பண்டைய காலத்தில் பாலாறு என்றுதான் வழங்கப்பட்டுள்ளது.

கூவம் ஆறு பாலாறாக இருந்ததால்தான், பச்சையப்ப வள்ளல் கூவத்தில் தினமும் நீராடி கோவிலுக்கு சென்றதாக பெரியோர் சொல்லக் கேட்டுள்ளோம்.

பாலாறே மூலம்

கூவம் அருகில் அமைந்த திருநின்றவூர் திவ்யதேச தீர்த்தம் பற்றி குறிப்பிடுகையில் இவ்வாறிலிருந்து கால்வாய்மூலம் நிரம்பும் ஏரி, வருண புஷ்கரணி என்றும் இந்நதி வ்ருத்தக்ஷீரநதி (பாலாறு) என்றும் குறிக்கப்பட்டுள்ளது.

பாலாறு இன்றைக்கு காஞ்சிபுரத்திற்கு தெற்கே பாய்கின்றது, இந்நதி 2,000 ஆண்டுகளுக்கு முன் காஞ்சிக்கு வடக்கே பாய்ந்ததாக குறிப்பிட்டுள்ளார்கள்.

செயங்கொண்டார், பாலாறு, குசஸ்தலை ஆறு இவ்விரண்டையும் கலிங்கத்து பரணி என்ற நூலில் என்று குறிப்பிட்டுள்ளதைக் காணலாம்.

பாலாறு, குசைத்தலை, பொன்முகரிப்
பழஆறு படர்ந்து, எழு கொல்லி எனும்
நாலாறும் அகன்று, ஒரு பெண்ணை எனும்
நதி ஆறு கட்ந்து, நடந்து உடனே…
‍- கலிங்கத்து பரணி (369)

பாலாறு முன்பு வாலாசாப் பேட்டையிலிருந்து வடகிழக்காக பாய்து பழவேற்காட்டிற்கு அருகே கடலில் கலந்திருக்கலாம் என்றும், அதற்குபின் சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன் தடம் மாறி காஞ்சிபுரம், செங்கற்பட்டு வழியாக சதுரங்க பட்டணத்தில் கடலில் கலந்திருக்கலாம் என்றும் பூண்டி அகழ்வாய்வு நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன.

பாலாறும், குசஸ்தலை ஆறும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளது.

பாலாறுதான் குசஸ்தலையாறு ஆகி, கூவம் என்ற ஊரில் பிரிந்து வருவதால் கூவம் ஆறு என்று அழைக்கப்படுகின்றது.

கூவம் என்றால் கிணறு. வழியோரங்களில் கிணற்று நீர் வளத்தினைப் பெருக்கியபடி பாய்ந்ததால், கூவம் ஆற்றுக்கு அப்பெயர் வந்தது என்ற ஒரு கருத்தும் உண்டு.

கொசஸ்தலை ஆற்றின் கரையில் பண்டைய கற்கால மனிதர்கள் வாழ்ந்த இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

திருவள்ளுர் மாவட்டம் பூண்டி அணைக்கு அருகில் குடீயம் என்ற இடத்தில் பழைய கற்கால மனிதர்கள் வாழ்ந்த குகைகள் இன்னும் உள்ளன.

அங்கு கிடைத்த கற்கால பொருட்கள் சேகரித்து பூண்டி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. மற்றும் பூண்டிக்கு அருகில் உள்ள ஊர்களில் கற்கால மக்களின் பொருட்கள் கிடைத்துள்ளன.

ஆக கொசஸ்தலை ஆற்றுப்படுகையில் மனித நாகரீகம் வளர்ந்துள்ளது என்று அறிகின்றோம். அவ்வாற்றின் பழமையை உணர்கின்றோம்.

இப்படி நாட்டை வளப்படுத்திய, வணங்க வேண்டிய நீர்த்தடங்களை எல்லாம் இன்று நாம் உதாசீனப்படுத்துகின்றோம்.

தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் கொசஸ்தலையாற்று பள்ளத்தாக்கு பகுதியில் சுமார் 5,00,000 முதல் 2,000 ஆண்டுகள் முன்னர் பாலாறு பாய்ந்திருக்கலாம் என பூண்டி அகழாய்வு நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன. பாலாறு மற்றும் குசஸ்தலை ஆற்றின் பழமையை இதன்மூலம் அறிகின்றோம்.

கங்கை, சிந்து, காவேரி, கிருஷ்ணா, கோதாவரி, வைகை, பொருநை, நர்மதா, துங்கபத்ரா நதிகளைப் போற்றும் அளவிற்கு பாலாறு, கொசஸ்தலை ஆறுகளை நாம் போற்றுவதில்லை. நமக்காக இயற்கை அளித்த நதிகளை அழிக்கும் புண்ணிய காரியத்தை நாம் கச்சிதமாக செய்கின்றோம்.

கேசாவரம் என்ற இடத்திலிருந்து கொசஸ்தலை ஆறு மணவூர் கடம்பத்தூர் இடையில் பாய்ந்து, பட்டரைபெரும்புதூர் வழியாக பூண்டி ஏரியால் தடுக்கப்பட்டு, சென்னையின் தாகத்தை தீர்க்கும் புண்ணியத்தை செய்கின்றது. மிகுதி நீர் எண்ணூர் வழியாகக் கடலில் கலக்கின்றது.

இதனால் நாம் அறிவது பாலாறுதான் இவ்வாறுகளுக்கெல்லாம் தாயாக இருக்கின்றது. பாலாறு என்பதன் பெயர் காரணம் கந்த புராணத்திலும், சேக்கிழாராலும் குறிப்பிடப்பட்டுள்ளதாக இலக்கியங்கள் வாயிலாக அறிகின்றோம்.

பாலாற்றிலிருந்து கால்வாய்கள் மூலம் எத்தனை கிராம ஏரிகள் நிரம்பி வளப்படுத்துகின்றன என்பதை அறிந்து, அவற்றை நாம் பாதுகாத்தால் வருங்கால சந்ததியினர் நம்மை போற்றுவர்.

வாணியம்பாடி, ஆம்பூர், வேலூர், ஆற்காடு, காஞ்சிபுரம், செங்கற்பட்டு வழியாகச் செல்லும் பாலாறு எத்தனை ஏரி, குளங்களுக்கு உயிர் கொடுக்கின்றது என சிந்திக்க வேண்டும்.

இது நாள் வரையில் ஆறுகளைப் போற்றி கால்வாய்களை அமைத்து, ஏரிகளையும் நீர்வளத்தையும் பாதுகாத்து நம் சந்ததிகளுக்கு விட்டிருப்போமா? விடுவோமா? எண்ணிப் பாருங்கள்.

இருந்ததையாவது சொல்லி வையுங்கள்.

பூண்டி ஏரிக்கான‌ கிராமத்தினர் தியாகம்

திருவள்ளுர் மாவட்டத்தில் பூண்டி ஏரி உருவாவதற்காக சுமார் பத்திற்கு மேற்பட்ட கிராமத்தினர் தியாகம் செய்தனர். அதனால் சென்னைவாழ் மக்கள் குடிநீர் பெறுகின்றனர்.

போராடாமல் தியாகம் செய்த அக்கிராமத்தினருக்கு நாம் நன்றியினை தெரிவிக்க வேண்டும்.

நான் அறிந்த வரையில் அந்த கிராமங்களின் பெயர்களை குறிப்பிடுகின்றேன்.

கத்தேல் பட்டு, கட்டானூர், பாண்டூர், ரங்காவரம், திருவெண்புதூர், திருவெண்பாக்கம், தொழுதவாக்கம், கிஷ்டாவரம், மேலகரம், கரையாமேடு மற்றும் அரும்பாக்கம்.

இவற்றில் சில கிராமங்கள் அதே பெயரில் பூண்டிக்கு அருகில் வெவ்வேறு இடங்களில் இடம் பெயர்ந்தார்கள். இன்றும் அருகிலிருக்கும் கிராமத்தில் வயதானவர்களை அணுகிக் கேட்டால், இன்னும் பல அரிய தகவல்களைப் பெறலாம்.

மேற்கண்ட கிராமங்களில் திருவெண்பாக்கம் கிராமத்தில் இருந்த பாடல் பெற்ற திருஊண்றீசுவரர் கோயில், பூண்டி அணைகட்டு அருகில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டது.

கிஷ்டாவரம் (கிருஷ்ணாபுரம்) கிராமத்தில் பழமையான இராமர் கோயில் இருந்துள்ளது. இன்றும் பூண்டி ஏரியில் நீர் வற்றும் போது பாண்டூர் கிராம மக்களில் ஒரு சிலர் அக்கோயிலுக்கு சென்று விளக்கேற்றி வருவதாக அக்கிராமத்தினர் தெரிவிக்கின்றனர்.

ஆந்திராவிலிருந்து நகரி வழியாக வந்து லட்சுமாபுரம் கடந்து வரும் நகரியாறும், சோழிங்கபுரத்திலிருந்து திருத்தணி வழியாக வரும் நந்தியாறும், இலுப்பூர் என்ற கிராமத்தின் அருகில் ஒன்றாகக் கலந்து கனகம்மசத்திரம் வழியாக நாரயணபுரம் கடந்து பூண்டியில் கலக்கின்றது.

ஆக இவ்வாறுகள் இல்லையேல் சென்னை மிகவும் அல்லல் படும்.

அரசாங்கமும் மக்களும் விழிப்புணர்வுடன் ஏரிகளையும், குளங்களையும், ஆற்று கால்வாய்களையும், ஆறுகளையும் காப்பாற்றவில்லை யென்றால் வருங்காலம் இயற்கையுடன் கலந்து நம்மை அழிக்கும். அக்காலம் வெகு தொலைவில் இல்லை.

இராமமூர்த்தி இராமாநுஜ‌தாசன்
திருநின்றவூர்-602024
கைபேசி: 9444410450

கூவம் பற்றிய YS தமிழ் இதழின் கட்டுரை

புராணங்களில் புனித நதியாக சொல்லப்பட்ட ‘கூவம்’ ஆறு, இன்று சாக்கடையாக மாறியது எப்படி?

கூவம் ஆறு பற்றி அறிய கூடுதல் காணொளிகள்