கூவின பூங்குயில் கூவின கோழி

கூவின பூங்குயில் கூவின கோழி என்று தொடங்கும் இப்பாடல் திருவாசகத்தில் வைக்கப்பட்டு உள்ள திருப்பள்ளியெழுச்சியின் மூன்றாவது பாடலாகும்.

அரிமர்த்தன பாண்டியனிடம் அமைச்சராக விளங்கிய மாணிக்கவாசகர், அடியவர்களுக்கு எளியவராக திகழ்கின்ற சிவபெருமானின் மீது திருவாசக திருப்பள்ளியெழுச்சிப் பாடல்களைப் பாடினார்.

திருவெம்பாவை பாடல்கள் 20, திருப்பள்ளியெழுச்சி பாடல்கள் 10 சேர்த்து மொத்தம் 30 பாடல்கள் மார்கழி 30 நாட்கள் இறைவழிபாட்டின் போது பாடப்படுகின்றன.

திருப்பள்ளியெழுச்சி தமிழின் தொண்ணூற்றாறு பிரபந்தங்களின் வகைகளுள் ஒன்று. உயிரினங்களைப் போன்று இறைவனும் இரவில் உறங்கிக் கொண்டிருப்பதாகக் கருதி துயில் எழுப்புவதாக இப்பாடல்கள் அமையப் பெற்றுள்ளன. இப்பாடல்களில் அதிகாலைப் பொழுதில் சுற்றுப்புறத்தில் நிகழும் நிகழ்ச்சிகள் இடம் பெற்றுள்ளன.

மாணிக்கவாசகர் திருப்பெருந்துறையில் இருக்கும் சிவபெருமானின் மீது பாடிய திருப்பள்ளியெழுச்சிப் பாடல்களும், தொண்டரடிப்பொடி ஆழ்வார் ரங்கநாதப் பெருமானின் மீது பாடிய திருப்பள்ளியெழுச்சிப் பாடல்களும் புகழ் பெற்றவை.

உதயகாலத்து சூரியஒளியானது அதிகாலை நட்சத்திர ஒளியை ஒன்றிணைத்துக் கொள்வது போல இறைவன் தன்னுடைய திருவடிகளால் அடியவர்களுக்கு அருள்புரிந்து தன்னுடைய பேரொளியுள் இணைத்துக் கொள்ள வேண்டுவதாக இப்பாடல் கூறுகிறது.

குயில், கோழி மற்றும் பறவைகள் உதயகாலத்து சூரியனைக் கண்டதும் ஆரவாரம் செய்கின்றன. அச்சூரியஒளியானது நட்சத்திரத்தின் ஒளியை தன்னுள் இணைத்துக் கொள்கிறது.

அடியவர்களை உன்னுடன் இணைத்துக் கொள்ளும் பொருட்டு திருவடிகளை எங்களுக்கு அருள்வாயாக. எல்லோருக்கும் அரியவராகவும் அடியர்களுக்கு எளியவராகவும் தன்மை கொண்ட என்னுடைய தலைவனே பள்ளியில் இருந்து எழுந்தருள்வாயாக என்று இறைவனிடம் மாணிக்கவாசகர் வேண்டுதல் செய்கிறார்.

அடியார்களின் உண்மையான அன்பிற்கு இரங்கி எளிமையாகக் காட்சியருளும் இறைவனை அடைய பூரண சரணாகதியே வழி என்பதை இப்பாடல் எடுத்துரைக்கிறது.

இனி திருப்பள்ளியெழுச்சி மூன்றாவது பாடலைக் காண்போம்.

திருப்பள்ளியெழுச்சி பாடல் 3

கூவின பூங்குயில் கூவின கோழி

குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்

ஓவின தாரகை ஒளிஒளி உதயத்து

ஒருப்படுகின்றது விருப்பொடு நமக்குத்

தேவ நற்செறி கழல் தாளிணை காட்டாய்

திருப்பெருந்துறை உறை சிவபெருமானே

யாவரும் அறிவரியாய் எமக்கு எளியாய்

எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே

கூவின பூங்குயில் கூவின கோழி விளக்கம்

திருப்பெருந்துறையில் உறைந்துள்ள சிவபெருமானே, காட்டில் வாழும் குயிலும், வீட்டில் வளரும் சேவலும் மற்றும் மற்ற சிறுபறவைகளும் சூரியனின் உதய காலத்தை தங்களின் குரலால் உணர்த்துகின்றன. கோவில்களில் சங்க நாதம் கேட்கிறது.

உதய காலத்து சூரிய ஒளியானது அதிகாலையில் உள்ள நட்சத்திரங்களின் ஒளியை தன்னுள் இணைத்துக் கொள்கிறது.

அதுபோல தேவர்களுக்கு எல்லாம் தேவனாகிய மகாதேவனே, உன்னுடன் அடியவர்களாகிய எங்களை உன்னுடன் இணைத்துக் கொள்ளவதற்கு ஏதுவாக உன்னுடைய கழல்கள் அணிந்த திருவடிகளை எங்களுக்கு அருள்வாயாக.

தேவர்கள் உள்ளிட்ட மற்றவர்களால் எளிதில் காணப்பதற்கு அரியவனே, உன்னுடைய அடியவர்களின் மீது கருணை கொண்டு எளிமையாகக் காட்சி அளிப்பவனே பள்ளியில் இருந்து எழுந்தருள்வாயாக.

பூரண சரணாகதி, தீர்க்கமான அன்பு ஆகியவற்றால் இறைவனின் அடியவர்களாகி இறையருளை எளிமையாகப் பெறலாம் என்பதை இப்பாடல் அறிவுறுத்துகிறது.

One Reply to “கூவின பூங்குயில் கூவின கோழி”

  1. ´தாளிணைக் காட்டாய்` என்பது தவறு! மாறாக, * தாளிணை
    காட்டாய்* என்பதுதான் சரியானது.
    இனி, ´ அறிவரிறாய் ` . இது தட்டச்சுத் தவறாக இருக்கும் என்று நினைக்கிறேன். * அறிவரியாய்*. திருத்திவிடவும்.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.