தமிழ்நாடு அரசின் ஆவின் பால் நிறுவனம் புகழ் பெற்றது. நயமிக்க, தரமிக்க பால், தயிர், நெய், பால்கோவா போன்ற சுவை மிக்க இதர பொருட்களையும் இந்நிறுவனம் தயாரித்து வழங்கி வருவது அனைவரும் அறிந்தது தான்.
பால் பாக்கெட் பொறுத்த மட்டில் கால் லிட்டர், அரை லிட்டர், ஒரு லிட்டர் போன்ற பாக்கெட்களை பச்சை நிறத்திலும் பிரவுன், ஆரஞ்சு கலரிலும் – தயிர் பாக்கெட்களை நீலம் மற்றும் ஆரஞ்சு நிறங்களிலும் வழங்கி வருகின்றது ஆவின் பால் நிறுவனம்.
மக்கள் மத்தியில் பிரசித்தி பெற்ற ஆவின் நிறுவனம், பால் மற்றும் தயிர் பாக்கெட்களில் Use by date என கெடு தேதியை பளிச் என மக்களுக்குத் தெரியும் வகையில் தெளிவாகக் குறிப்பிடுவதில்லை.
மேலும் இந்த கெடு தேதியைப் பாக்கெட்களின் வெள்ளை நிறப் பகுதியில் குறிப்பிடாமல், பாக்கெட்களின் கலர் பகுதிகளில் குறிப்பிடுவதால் பாக்கெட்களை எப்படித் திருப்பிப் பார்த்தாலும் கெடு தேதி மிகத் தெளிவாகத் தெரிவதில்லை.
கெடு தேதியின் சீல் மிகச் சிறிய எழுத்துக்களில் குறிப்பிடப்படுவதால், அதுவும் வெள்ளைப் பகுதியில் இல்லாமல் பாக்கெட்களின் கலர் பகுதிகளில் மங்கலாகத் தெரிவதால் கெடு தேதி மக்களுக்குப் புரிவதில்லை.
தேதி காலாவதியான பால் பாக்கெட்டுகளை மக்கள் தலையில் கட்டி விடுகிறார்கள். பாலைக் காய்ச்சும் சமயம் பால் திரிந்து கெட்டுப் போய் விடுகிறது. பல பாக்கெட்களில் கெடு தேதி சீல் காணப்படுவதேயில்லை.
புதிய பாலா, பழைய பாலா என்பதெல்லாம் தெரியாமல் குழந்தைகளும், முதியோர்களும் கெடு தேதி முடிந்து போன பாலை வாங்கி அருந்தி வயிற்றுப் போக்கு ஏற்பட்டு அவதியுறும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
உடல் ஆரோக்கியம் சம்மந்தப்பட்ட இவ்விஷயத்தில் தமிழ்நாடு அரசு உடனடியாகத் தலையிட்டு, கெடு தேதி முடிந்த பால் மற்றும் தயிர் பாக்கெட்களை உற்பத்தி செய்யும் இடத்திலேயே கண்டறிந்து, அங்கேயே அவைகளைத் தடை செய்ய தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மக்கள் கெடு தேதியை மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ளும் வகையில், பாக்கெட்களின் வெள்ளைப் பகுதியில் பெரிய எழுத்துக்களால் அச்சிட ஏற்பாடு செய்ய வேண்டும்.
ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998