கெமிஸ்ட்ரி ஒர்க்கவுட் ஆயிடுச்சா?

ஒவ்வொரு கல்வியாண்டிலும் புதிது புதிதாய் மாணவர்களை சந்திக்கும் பாக்கியம் என் போன்ற ஆசிரியர்களுக்கு கிடைக்கும் இனிய அனுபவமாகும்.

புதிய மாணவர்களுக்கு முதல் நாள் வகுப்பு எடுக்கச் செல்லும் போது, பரஸ்பர அறிமுகங்கள் மற்றும் நல விசாரிப்புகளுக்குப் பின் நான் எனது வகுப்பினை ஒரு கேள்வியுடன் ஆரம்பிப்பது வழக்கம்.

நான் ஒரு வேதியியல் பேராசிரியர். எனவே எனது முதல் கேள்வி என்னவென்றால் “What is Chemistry?” என்பதுதான்.

அதாவது கெமிஸ்ட்ரி என்றால் என்ன?

இதற்கு பல தரப்பட்ட பதில்களை நான் கிடைக்கப் பெற்றிருக்கின்றேன்.

பொதுவாக மாணவ மாணவியர் சொல்லும் பதில் “சார் கெமிஸ்டரி என்றால் வேதியியல்.”

உடனே நான் “அப்போ வேதியியல் என்றால் என்ன?” என்று கேட்பேன்.

உடனே சில மாணவர்கள், “கெமிஸ்ட்ரி” என்று கூட்டாகப் பதிலளிப்பார்கள்.

இப்படித்தான் எங்கள் அறிமுகம் ஆரம்பமாகும்.

ஒரு நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இதே போல ஒரு அறிமுக வகுப்பில் நான் கேள்வி கேட்டு விளக்கமளித்துக் கொண்டிருக்கும் போது ஒரு மாணவன் எழுந்து சந்தேகம் கேட்டான்.

“சார்! தனியார் தொலைக்காட்சி ஒன்றில் மானாட! மயிலாட! என பிரமாண்டமான ஒரு நிகழ்ச்சி நடக்குது.

அதில் நடுவர்களாக இருக்கும் விற்பன்னர்கள் கலா மாஸ்டர், நமீதா அக்கா மற்றும் குஷ்பு மேடம் எல்லோருமே நிகழ்ச்சியில் ஒரு ஜோடி ஆடி முடிந்ததும் தங்கள் விமர்சனம் சொல்லும் போது கட்டாயமாக ஒரு விஷயம் சொல்லுவாங்க.

‘உங்கள் கெமிஸ்ட்ரி நல்லா இருந்துச்சு அல்லது உங்க கெமிஸ்டரி ஒர்க்கவுட் ஆச்சு என்று’.

அப்படியென்றால் கெமிஸ்ட்ரி என்றால் லவ்வா சார்?” என்று கேட்டதும், மாணவ மாணவியர் அனைவரும் கை தட்டி ஆரவாரம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

நான் அவர்களைப் பார்த்து ரசித்து, “பரவாயில்லையே! இந்த மானாட! மயிலாட நிகழ்ச்சியினால் கெமிஸ்ட்ரி எல்லோரிடமும் நல்லா ரீச்சாயிருக்கு.” என்று சொல்லி எனது பதிலை கூற ஆரம்பித்தேன்.

“வேதியியல் என்பது பொருட்களைப் பற்றியும், அவற்றின் இயல்பு மற்றும் வேதியியல் மாற்றங்களைப் பற்றியும் படிக்கும் அறிவியலாகும்” என்றேன்.

“சார் இது எப்படி எங்கள் கேள்விக்குப் பதிலாகும்?” என மற்றொரு வில்லங்கமான கேள்வியினைக் கேட்டான் அந்த மாணவன்.

உடனே நான் சங்க இலக்கியத்திலுள்ள குறுந்தொகைப் பாடலாகிய

“யாயும் ஞாயும் யாராகியரோ 

எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர் 

யானும் நீயும் எவ்வழி அறிதும் 

செம்புலப் பெயல்நீர் போல 

அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே!’’

என்ற பாடலில் அமைந்துள்ள “செம்புலப் பெயல்நீர் போல” என்ற வரியின் துணையுடன் விளக்கமளிக்க முனைந்தேன்.

அதாவது, தூய மழைநீர் செம்மண் தரையில் விழுந்தவுடன், அதனுடன் சேர்ந்து சிவந்த நீராக மாறிப்போன தன்மைக்கு காரணமான அறிவியல்தான் வேதியியல்” எனக்கூறி அதனை மேலும் பின்வருமாறு விளக்கினேன்.

“சரி நீரையே எடுத்துக் கொள்வோம். திட நிலையில் அது பனிக்கட்டி, திரவ நிலையில் அது நீர் மற்றும் வாயு நிலையில் அது நீராவி. மூன்று நிலைகளிலும் அதன் வேதித்தன்மை மாறாமல் அது நீராகத்தான் இருக்கிறது.

இப்படி எந்த நிலையில் இருக்கும் போதும் தனது தன்மையினை அது இழக்கவில்லை யென்றால் அது இயல்பு மாற்றம் எனப்படும்.

அதே சமயத்தில் ஹைட்ரஜன் ( H2 ) என்ற வாயுவை எடுத்துக்கொள்வோம்.

அது எங்கே பிறந்தாலும் ‘பாப்’ எனும் சத்தத்துடன் எரியும் தன்மை கொண்டது.

ஆக்ஜிஸன் ( O2 ) மற்றுமொரு வாயு. இது எரிதலுக்கு துணைபோகக் கூடிய வாயு.

அதாவது ஹைட்ரஜன் அப்பா மாதிரி; கோபம் வந்தால் அடிப்பாரு. ஆக்ஜிஸன் அம்மா மாதிரி; அதாவது அப்பா கோபப்பட்டு திட்டுகிற நேரம், மேலும் நம்மைப் பற்றிப் போட்டுக் கொடுக்கிற ஆளு அம்மா.

இந்த ரெண்டு பேரும் அதாவது ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஜிஸன் சேர்ந்து கிடைக்கிற பொருள் என்ன?

நீர்தானே!

2H2 + O2 → 2H2O

நீருடைய தன்மை என்ன?

நீர் தீயை அணைக்கக் கூடியது.

ஹைட்ரஜன் எரியக் கூடியது.

ஆக்ஜிஸன் எரிதலுக்குத் துணைபோகக் கூடியது.

இவர்களின் பிள்ளை நீரில் இவை இரண்டின் அம்சம் இருந்தாலும் குணாதிசயத்தில் மாற்றம் ஏற்பட்டு, நீர் தீயை அணைக்கும் பொருளாக மாறி விடுகிறது.

இது ஒரு நிலையான மாற்றம். அதன் பெயர்தான் வேதியியல் மாற்றம் அல்லது இரசாயன மாற்றம் என்பதுவாகும்.

இப்போ கூட்டி கழித்துப் பாருங்க. மானாட! மயிலாட! கெமிஸ்ட்ரியும், நம்ம கெமிஸ்ட்ரியும் ஒரே மாதிரிதான் என்று புரியும்.

ஒரு நடனம் என்றால் இசைக்குத் தகுந்தாற் போல காலையும் கையையும் எவ்வித உணர்ச்சியுமின்றி ஓர் எந்திரம் போல அசைத்தால், அங்கே நிகழ்வது வெறும் இயற்பியல் மாற்றம் தான் (நீர் மூன்று நிலைகளில் இருப்பது போல).

அதே சமயம் அந்த இசையை உள்வாங்கி அதில் தனது உணர்வுகளையும் குழைத்து ஆடினால், அதுதான் நடனம்.

அத்தகைய நடனம்தான் பார்ப்பவர் மனதிலும் ஒரு கிளர்ச்சியினை ஏற்படுத்தும் வல்லமை கொண்டது. (H2 மற்றும் O2 இணைந்து நீர் தோன்றுவது போல). அதுதான் கெமிஸ்டரி.

அதாவது உள்ளத்தாலும் உணர்வாலும் ஏற்படும் ஈர்ப்பால் உடலில் உண்டாகும் மாற்றம்தான் அந்த கெமிஸ்ட்ரி.

இத்தகு நடனத்தைத்தான் நடுவர் மட்டுமல்ல அனைவரும் மனம் மகிழ்ந்து பாராட்டுவர்.”

இனி சில வாரங்கள் நான், அன்றாடம் நாம் காணும் செயல்களில் புதைந்து கிடக்கும் அறிவியல் கோட்பாடுகளின் சுவாரசியமான உண்மைகளை தொடர்ந்து எழுத விழைகிறேன்.

இந்த விசயங்கள் மற்றும் விவாதங்கள் உங்களிடம் ஒரு நிலையான புரிதல் மற்றும் மாற்றத்தினை ஏற்படுத்தும்.

சுருக்கமாக சொல்லப்போனா நிச்சய‌மா! எனது கெமிஸ்ட்ரி உங்களிடம் ஒர்க்கவுட் ஆகும்.

மு​னைவர் ​பொ.சாமி
வேதியியல் இ​ணைப் ​பேராசிரியர்
வி.இ.நா. ​செந்திக்குமார நாடார் கல்லூரி
விருதுநகர் – 626 001
கைபேசி: 9443613294

9 Replies to “கெமிஸ்ட்ரி ஒர்க்கவுட் ஆயிடுச்சா?”

  1. முனைவர் சாமி ஐயா அவர்களுக்கும் எனக்கும் 2002 முதல் கெமிஸ்ட்ரி ஒர்க்கௌட் ஆகிட்டுதான் இருக்கிறது இப்பொழுது வரைக்கும்…இன்னும் இனிதே தொடரும்…
    நன்றி சாமி சார்..
    நன்றி இனிது இதழ்…

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.