கேசம் பராமரிப்பு ஆலோசனைகள்

அழகிய கேசம் பெறுவது எப்படி மற்றும் கேசம் பராமரிப்பு செய்வது எப்படி என்றும் தெரிந்து கொள்ளுங்கள்.

கேசம் என்றால் முடி என்று அர்த்தம். இதற்கு மயிர், குழலி (தலையில் உள்ள முடி),  உரோமம் (உடலில் உள்ள முடி) என்றும் பெயர் உண்டு. கர்ப்பத்தில் ஆறாவது மாதத்தில் இருந்து முடி வளர்ச்சி தொடங்குகிறது. இது தந்தை வழி மரபிலிருந்து உருவாகிறது.

முடியின் எண்ணிக்கை மனிதனின் ஆரோக்கியம் மற்றும் சுற்றுச் சூழலை பொறுத்து மாறுபடுகிறது. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது ஒளவையின் மொழி. உடலின் ஆரோக்கியம் முடியில் தெரியும்.

தலைமுடி முக அழகைத் தருகிறது; தட்ப வெப்ப நிலைகளின் மாற்றத்திலிருந்து நம்மை காக்கிறது. மூக்கில் இருக்கும் முடி காற்றில் உள்ள தூசுகளை நுரையீரலுக்குள் செல்ல விடாமல் தடுக்கிறது. கை,கால் மற்றும் உடலில் இருக்கும் முடி குளிரிலிருந்து நம்மை காக்கிறது. மீசை ஆணிற்கு கம்பீரத்தையும் அழகையும் கொடுக்கிறது.

முடியில் 95% புரோட்டின் மற்றும் 5% நீர் சத்து உள்ளது. முடியின் தோற்றத்தை வைத்து இரண்டாக பிரிக்கப்படுகிறது.

1. எண்ணெய் பசையுள்ள முடி

2. வறண்ட முடி
ஆரோக்கியமான மனிதனுக்கு தினமும் 0.4மிமீ நீளம் முடி சராசரியாக வளர்கிறது.
முடியானது மயிர் காலிலிருந்து இரண்டு முதல் ஆறு ஆண்டுகள் வரை வளரும். பின்பு 2 முதல் 3 மாதங்கள் நிலைத்து நின்று பின்பு உதிரத் தொடங்கும்.
ஆரோக்கியமான முடியை கண்டறியும் விதம்

ஒரு முடியை எடுத்துக் கொண்டு இழுத்தோமேயானால் மீண்டும் அது பழைய நிலையை அடைய வேண்டும். அவ்வாறு இழுக்கும்போது முடி உடைந்து விட்டால் அது ஆரோக்கியமான முடி அல்ல.

ஒரு முடியை எடுத்து தண்ணீரில் விட வேண்டும். அது 5 முதல் 10 நொடிக்குள் மூழ்கிவிட்டால் அந்த முடியானது ஆராக்கியமற்ற முடி ஆகும். (ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்)

 

கேச நோய்களுக்கான காரணங்கள்

வயது: குழந்தைகளுக்கு தலையில் புண், பொடுகு, புழுவெட்டு காரணமாக முடி உதிரும்.

சுற்றுச் சூழல்: தொழிற்சாலை மாசு, உப்பு நீரில் குளித்தல், அழுக்கான தண்ணீரில் குளித்தல் காரணமாக முடி உதிரும்.

ஆரோக்கியம்: காய்ச்சலின் போதும், காய்ச்சலுக்குப் பிறகும் முடி உதிரும். (மலேரியா, டைபாய்டு, வைரஸ் காய்ச்சல்கள், டெங்கு, சிக்கன் குனியா). கால்சியம், துத்தநாகம், இரும்புச் சத்து குறைவால் முடி உதிரும்.

கிராம வாழ்க்கையில் முடி உதிர்வதில்லை; காரணம் அமைதியான சூழ்நிலை.நகர வாழ்க்கையில் அதிகம் முடி உதிர்கிறது. காரணம் அமைதியின்மை, வேலைப்பளு, மற்றும் வாழ்க்கை இயந்திர மயமாக இருப்பது.

முடி உதிர்வதற்கான மற்றும் பல‌ காரணங்கள்:

1. வெளியில் அதிக நேரம் திரிதல்

2. புளிப்பு, கார சுவை உள்ள உணவுகள் அதிகம் உண்பதால்

3. சத்தான உணவுகளை குறைவாக சாப்பிடுதல்

4. இரவு நேரங்களில் அதிக நேரம் விழித்திருத்தல்

5. தலைக்கு எண்ணெய் தேய்க்காதிருத்தல்

6. மிகச் சூடான நீரில் குளித்தல்

7. மன உளைச்சல், மன அழுத்தம்

8. நீண்ட நாட்களாக இருக்கும் அஜீரணக் கோளாறு

9. அகச் சுரப்பி வியாதிகளினால்

10. முடி சுத்தம் செய்யாதிருத்தல்

11. அதிகமாக ஷாம்பு தேய்த்து குளித்தல்

12. கனமாக உள்ள தலையணையில் தூங்குதல்.

 

 

கேசம் பராமரிப்பு

ஆண்கள் மாதம் ஒரு முறை முடி வெட்ட வேண்டும். வாரத்தில் இரண்டு நாள்கள் முக சவரம் செய்ய வேண்டும். முகச் சவரம் செய்வதற்கு முன் வெது வெதுப்பான நீரில் முகத்தை நன்கு கழுவிய பின் முகச் சவரம் செய்ய வேண்டும்.

குழந்தை பிறந்து ஓர் ஆண்டிற்குப் பின்தான் மொட்டை போட வேண்டும்.

தினமும் எண்ணெய் தேய்த்து குளிப்பதால், இளநரை, வழுக்கை, முடி உதிர்தல், தலைமுடி வெடிப்பு, மற்றும் கபால வியாதிகளை தடுக்க அல்லது குறைக்க முடியும்.

எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது தலைமுடியில் உள்ள எண்ணெய் பசை நீங்கவும், தலைமுடி சுத்தமாக்கவும் சில பொடிகளை நாம் உபயோகப்படுத்தலாம்.அவை
1.சீயக்காய் 2.பாசிப்பயறு 3.நெல்லி வற்றல் 4.காய்ந்த கறிவேப்பிலைப்பொடி 5.வெந்தயப்பொடி ஆகியன.

இவற்றை எல்லாம் விட சிறந்தது நண்டு குழியில் உள்ள மண்ணை எடுத்து தேய்த்து குளிப்பது ஆகும். இது மிகவும் ஆரோக்கியமானதாகும்.

நண்டு குழி மண் கிடைக்காதவர்கள் பூமியில் 5 அடி ஆழத்திற்கு குழிதோண்டி அதற்கு கீழ் உள்ள மண்ணை நல்ல சல்லடையில் சலித்து வைத்துக் கொண்டு உபயோகிக்கலாம். மற்றும் உசிலை மர இலை பொடியும் மிக நன்று.

முடக்கத்தான் இலையை பொடி செய்து குளித்தால் முடியில் உள்ள அழுக்கு நீங்கும். வெந்தயம், பாசிபயறு (பச்சை பயறு) பொடி தேய்த்து குளித்தால் முடி மிருதுவாகும். எண்ணெய் தேய்த்து குளிக்கும்போது பொடுதலை இலை பொடி தேய்த்து குளித்தால் பொடுகு, மற்றும் தலையில் உள்ள சிறிய புண்கள் நீங்கும்.

 

எக்காரணத்தைக் கொண்டும் தலையை அலசுவதற்கு சுடு தண்ணீர் உபயோகிக்கக் கூடாது. குளிர்ந்த நீர் அல்லது வெதுவெதுப்பான தண்ணீர் கொண்டு முடியை அலச வேண்டும்.

 

பெருநெல்லி, தான்றிக்காய், கடுக்காய், அதிமதுரம், நெருஞ்சில் இவற்றுடன் சிறிது தேயிலை கலந்து தலையில் தேய்த்து குளித்தால் முடி மிக மிருதுவாகும். பொடுகு நீங்கும். முடி உதிர்தல் நிற்கும்.

நெல்லிக்காய், அதிமதுரம் ஆகியவற்றை கசாயம் செய்து கசாயத்துடன் பால் கலந்து தலைக்கு குளித்தால் பித்தத்தின் காரணமாக முடி உதிர்வது (வழுக்கை) குணமாகும்.

மருத மரப்பட்டை, வாகை மரப்பட்டை, செம்மரப்பட்டை ஆகியவற்றில் கசாயம் செய்து தலைக்கு குளித்தால் தலை அரிப்பு குணமாகும்.

நெல்லிக்காய், தான்றிக் காய், கடுக்காய், வசம்பு, செம்மரப்பட்டை ஆகியவற்றை கசாயம் செய்து குளித்தால் கபம் காரணமாக ஏற்படும் முடி உதிர்தல் (வழுக்கை) குணமாகும்.

மருதாணி இலையை கசாயம் செய்து அவற்றில் குளித்தால் இளநரை நீங்கும்.

சீயக்காய், எலுமிச்சை தோல், வேப்பம் பட்டை, மருதாணி இலை, சந்தன மர இலை, மர மஞ்சள் கொண்டு கசாயம் செய்து இவற்றுடன் இந்துப்பு கலந்து குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

வேப்பம்பட்டை, கருங்காலி பட்டை, மர மஞ்சள், எலுமிச்சம்பழ தோல், நெல்லிக்காய், தான்றிக் காய், கடுக்காய் இவற்றில் கசாயம் செய்து தலை அலச பொடுகு, தலைப்புண், பூஞ்சைத் தொற்று, தலை அரிப்பு ஆகியன நீங்கும்.

படிகாரத்தை தண்ணீரில் கரைத்து தலை அலச பேன் தொல்லை நீங்கும்.
கருந்துளசி (கிருஷ்ண துளசி) கொண்டு கசாயம் செய்து தலை அலசினால் பேன் தொல்லை நீங்கும்.

வேப்பிலை கசாயம் தலைப் புண்ணை குணமாக்கும்.

எலுமிச்சம் பழ சாற்றை தண்ணீர் கலந்து குளித்தால் தலை முடி மிருதுவாகும். உடல் பளபளக்கும்.

கரிசலாங்கண்ணி, நெல்லிக்காய், ரோஜா இதழ் சந்தன மர இலை ஆகியவற்றை கசாயம் செய்து தண்ணீரில் கலந்து குளித்தால் முடி மிருதுவாகும். உடல் பளபளக்கும்.

தேக்கிலையை கசாயம் வைத்து குளித்தால் முடி உதிர்வது நிற்கும்.

 

தலை முடிக்கு தூபமிடுதல்

குளித்ததும் தலைக்கு தூபமிடுவதால், முடி உதிர்தல் சளி தொந்தரவு, பேன் தொல்லை, தலை வலி, பொடுகு, மூக்கில் நீர் வடிதல் ஆகியவை குணமாகும்.

நல்ல சாம்பிராணி, குங்கிலியம், வெட்டி வேர், இலவந்த பத்திரி, அகர்கட்டை, சந்தன தூள் ஆகியவற்றை பொடி செய்து தூபமிட வேண்டும்.

 

தலையில் சூட ஏற்ற பூக்கள்

ஜாதிப்பூ, செவ்வந்திப்பூ, ரோஜா, சந்தனம், மகிழம், செண்பகம், கஸ்தூரியுடன் சேர்ந்து சூட வேண்டும்.

மந்தாரை, தாமரை போன்றவை கற்பூரத்துடன் சேர்ந்து சூட வேண்டும்.

மல்லிகைப் பூவை குளிப்பதற்கு முன்புசூட வேண்டும்.

முல்லை மற்றும் வில்வம் பூவை குளித்த பின் சூட வேண்டும்.

உடலில் எண்ணெய் தேய்க்கும் போது தாழம் பூவைச் சூடலாம்.

அணியும் பூ கபாலத்தில் படவேண்டும்.

சித்தகத்திப்பூ அணிந்தால் தலை வலி குணமாகும்.

தாழம்பூ – தூக்கத்தை கொடுக்கும்

வில்வம்பூ – காசநோயைக் கட்டுப்படுத்தும் (சுவாச நோய்கள்)

தாமரைப்பூ – தூக்கத்தைக் கொடுக்கும்.

மகிழம்பூ – கபால வியாதிகளை குணப்படுத்தும்

செம்பருத்தி – முடி வளர்ச்சியை கூட்டும்.

 

கேசம் பராமரிப்பு செய்யுங்கள்; தன்னம்பிக்கை பெறுங்கள்.