கேலியைப் பொருட்படுத்தாதீர்; முன்னேறுவீர்! –
இதுவே, நாம் வாழ்வில் உருப்படியாக ஏதேனும் செய்ய வேண்டுமென்றால் கடைப்பிடிக்க வேண்டிய மந்திரம்.
நாம் ஒரு செயலைச் செய்தால் பிறர் நம்மைக் கேலி செய்வார்களோ, கிண்டல் அடிப்பார்களோ என்றே நம்மில் பலர் தயங்குகிறோம்.
சில நேரங்களில் செயல்களைச் செய்கின்றோம். பலநேரங்களில் யோசித்து தயங்கி, செய்யும் செயல்களை செவ்வனே முடிக்காமல் திணறுகிறோம்.
பிறர் கேலியைப் பொருட்படுத்தாதீர்; முன்னேறுவீர்! என்பதை நமது இலட்சியமாகக் கொள்ள வேண்டும்.
அது எவ்வாறு என்பதை ஒரு சிறு கதையின் மூலம் பார்ப்போம்.
முன்னொரு காலத்தில் பூவந்தி என்ற நாட்டில் சாம்பன் என்பவன் வசித்து வந்தான்.
அவனுக்கு நாம் இச்செயலைச் செய்தால் பிறர் நம்மை கேலி செய்வரோ என்று எண்ணி, கவனச் சிதறலாக வேலையைச் செய்து பிறரின் கேலிக்கு ஆளானான்.
தினந்தோறும் பிறரின் கேலியால் அவனுக்கு தாழ்வு மனப்பான்மை உண்டானது.
ஒருநாள் பூவந்தி அரசானான இராசவர்மனிடம் சென்று சாம்பன் “அரசே, ஒரு வேலையைச் செய்யும்போது பிறர் நம்மை கேலி செய்வர் என்று எண்ணிவாறு வேலையைச் செய்யும் போது கவனச்சிதறல் ஏற்படுகிறது.
அக்கவனச் சிதறலால் பிறரின் ஏளனப் பேச்சிற்கு ஆளாகிறேன். இதனால் எனக்குள் தாழ்வு மனப்பான்மை உண்டாகி மனவருத்தம் அதிகம் ஏற்படுகிறது. இதிலிருந்து நான் விடுபட ஏதேனும் ஒருவழி சொல்லுங்கள்.” என்று கூறினான்.
“சரி, நான் உனக்கு ஒரு நல்ல வழியைச் சொல்லுகிறேன். அதற்கு நீ எதனைப் பரிசாக எனக்குத் தருவாய்?” என்று கேட்டான் அரசன் இராசவர்மன்.
“அரசே, என்னுடைய இக்குறையைப் போக்கிக் கொள்ளும் தங்களின் உபாயத்திற்கு என்னுடைய உயிரைக் காணிக்கையாக்குகிறேன்.” என்றான் சாம்பன்.
“சரி, நான் சொல்வதைக் கவனமாகக் கேள். நான் செய்யச் சொல்வதில் ஏதேனும் சிறுதவறு நிகழ்ந்தாலும், உன் உடலில் உயிர் இருக்காது.” என்று கூறினான்.
“அரசே, நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான்.
அரசனின் கட்டளை
அரசன் வேலையாளிடம் ஒரு கிண்ணத்தில் நிரம்ப எண்ணெய் கொண்டுவருமாறு ஆணையிட்டான். கிண்ணம் நிரம்ப எண்ணெயுடன் வந்த வேலையாளிடம் “நீ அதனை சாம்பனிடம் கொடு.” என்று கட்டளை இட்டான்.
கிண்ணத்தைக் கையில் வாங்கிய சாம்பனிடம் அரசன் இராசவர்மன் “நீ இந்தக்கிண்ணத்தைக் கையில் வைத்துக் கொண்டு தலைநகரின் வீதிகளில் சுற்றி மீண்டும் அரண்மனை திரும்ப வேண்டும்.
அவ்வாறு சுற்றி வரும்போது எண்ணெயில் ஒருசொட்டு கூட கீழே விழக்கூடாது. அவ்வாறு சிந்தினால் உன்னுடைய உடலில் உயிர் இருக்காது.” என்று கூறினான்.
அரசகட்டளையை ஏற்று சாம்பன் தலைநகரின் வீதிகளில் செல்லத் தொடங்கினான். சாம்பனின் செயலைக் கண்டதும் பலரும் அவனை கேலி செய்தனர். கிண்டலாகப் பேசினர்.
ஆனால் சாம்பன் எதனையும் பொருட்படுத்தாமல் கிண்ணத்தில் இருந்து எண்ணெய் சிந்தாதவாறு நடந்தான்.
நகரவீதிகளில் சுற்றிவிட்டு இறுதியில் அரண்மனையை அடைந்தான். கிண்ணத்திலிருந்து ஒருசொட்டு எண்ணை சிந்தவில்லை.
இதனைக் கண்டதும் இராசவர்மன் அவனிடம் “நீ நகரவீதிகளில் சென்றபோது யாரேனும் உன்னைக் கேலி செய்தார்களா?” என்று கேட்டான்.
அதற்கு சாம்பன் “அரசே, எண்ணெய் சிந்தக்கூடாது என்பதிலேயே நான் கவனமாக இருந்தேன். ஆதலால் பிறர் பேசியதைக் கவனிக்கவில்லை.” என்று கூறினான்.
“நீ ஒருசெயலில் ஈடுபடும்போது, கவனத்துடன் அதைச் செய்தால் பிறரின் கேலியும் கிண்டலும், உனக்குப் பெரிய விசயமாகத் தெரியாது.
உன் மீது அக்கறை உள்ளவர்கள் உனக்கு ஆலோசனை வழங்குவார்கள்.
உன் மீது வஞ்சம் உள்ளவர்கள்தான், கேலியும் கிண்டலும் செய்வார்கள்.
அவர்களை நீ புறக்கணிப்பு செய்வதுதான் நீ அவர்களுக்குத் தரும் தண்டனை.”
என்று கூறி பரிசுப் பொருட்கள் வழங்கி சாம்பனுக்கு விடை கொடுத்தான் இராசவர்மன்.
ஆதலால் நீங்களும் இன்றிலிருந்து பிறர் கேலியைப் பொருட்படுத்தாதீர்; முன்னேறுவீர்!
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!