உன்முகம் காணாது என் மனமோ வாடுதே!
உனையின்றி எவரெனினும் எதற்கென்று தோணுதே!
கண்முன்னே சென்றதெல்லாம் கனவாகிப் போனதே! – உன்
கால் நடந்த பாதையெல்லாம் மண்மேடாய் ஆனதே?
அன்றொருநாள் நான் தழுவ நீ சிரித்து சென்றதேன்!
அடுத்தடுத்த நாட்களிலும் எனக்கின்பம் தந்ததேன்!
பின்னொருநாள் நீ தூங்கிக் கிடந்திட்ட பொழுதிலே
பேதை என்விரல் படவும் முகம் காட்டி நின்றதேன்!
குன்றுசூழ் அடர்வானும் குறைவாகிப் போனதால்
கோபத்தால் தானோ சொல், உன்வரவும் நின்றதோ?
வெண்மேகத் தாய் மடியும் மலடாகிப் போனதோ?
விரிகடலும் உனைஅணைக்க ஏன்தான் தயங்குதோ?
பன்னெடுங் காலமாக உன்னைப் பாடும் பொழுதிலே!
பைந்தமிழும் உனைப்போல ஆறாகிப் பெருகுமே!
சின்னவளே, நதிப்பெண்ணே நீசென்று மறைந்ததேன்?
செந்தமிழால் நான் அழைத்தும் கேளாது கிடப்பதேன்?
-இராசபாளையம் முருகேசன் கைபேசி: 9865802942
மறுமொழி இடவும்