கேழ்வரகு இடியாப்பம் (ராகி இடியாப்பம்) கேழ்வரகு மாவினைக் கொண்டு சமைக்கப்படும் எண்ணெய் இல்லாத உணவுப் பொருளாகும்.
கேழ்வரகில் இரும்பு சத்தும், கால்சியமும் அதிகம் உள்ளது.
பொதுவாக கேழ்வரகில் இருந்து தோசை, கூழ், அடை போன்ற உணவுகளை நாம் தயார் செய்கிறோம்.
கேழ்வரகினை ஆவியில் வேக வைத்து இடியாப்பாக உண்ணும் போது அதில் உள்ள சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்கின்றன. மேலும் இவ்வுணவு எளிதில் செரிமானமும் ஆகிறது.
வழக்கமாக நாம் உண்ணும் இட்லி, தோசை, பொங்கல், பூரி போன்றவற்றிற்கு மாற்று உணவாக கேழ்வரகு / ராகி இடியாப்பத்தினை செய்து உண்ணலாம்.
மேலும் இவ்வுணவு சர்க்கரை நோயாளிகள், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் மிகவும் ஏற்றது.
தேவையான பொருட்கள்
கேழ்வரகு (ராகி) மாவு – 400 கிராம் (¼ படி)
கல் உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு (இரண்டு டம்ளர்)
செய்முறை
முதலில் வாணலியை அடுப்பில் வைத்து நன்கு சூடேறியதும் கேழ்வரகு மாவை போட்டு வாசனை வரும் வரை நன்கு வறுக்கவும். பின் அதனை இறக்கி நன்கு ஆறவிடவும்.
தேவையான அளவு கல் உப்பினை இரண்டு டம்ளர் தண்ணீரில் சேர்த்து சூடேற்றவும். தண்ணீர் கொதித்ததும் இறக்கி விடவும்.
வறுத்து ஆறவிட்ட கேழ்வரகு மாவில் உப்பு சேர்த்த சுடு தண்ணீரைச் சிறிது சிறிதாகச் சேர்த்துப் பிசையவும்.
மொத்த மாவினையும் சப்பாத்தி மாவு பதத்திற்குத் திரட்டவும்.
இம்மாவினை தேவையான அளவு எடுத்து இடியாப்பக் குழலில் இட்டு இட்லித் தட்டில் இடியாப்பமாகப் பிழியவும்.
பின் இதனை இட்லிப் பானையில் ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
சுவையான கேழ்வரகு / ராகி இடியாப்பம் தயார்.
சத்துக்கள் நிறைந்த இதனை சிறு குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.
இந்த இடியாப்பத்துடன் தேங்காய் பால், தேங்காய்ப் பூ, குருமா, சாம்பார் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றினைச் சேர்த்து உண்ணலாம்.
குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் கேழ்வரகினை முதலில் வறுத்து பின் அதனை அரைத்து தண்ணீர் சேர்த்து இடியாப்பம் தயார் செய்யலாம்.
விருப்பமுள்ளவர்கள் கடுகு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், உளுந்தம் பருப்பு சேர்த்து தாளித்து அதனுடன் கேழ்வரகு / ராகி இடியாப்பம் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து கார இடியாப்பமாகவும் செய்யலாம்.
மறுமொழி இடவும்