கேழ்வரகு இனிப்பு ரொட்டி செய்வது எப்படி?

கேழ்வரகு இனிப்பு ரொட்டி மிகவும் சத்தான சிற்றுண்டி ஆகும். இது குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் மிகவும் ஏற்ற உணவாகும்.

சிறுதானிய வகைகளில் ஒன்றான கேழ்வரகை நாம் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஏனெனில் இதில் உள்ள கால்சியம் மற்றும் நார்ச்சத்து நம்முடைய உடலுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும்.

ஒரு டம்ளர் பாலில் உள்ள கால்சியத்தைவிட கேப்பையில் உள்ள கால்சியச் சத்து அதிகம்.

கேழ்வரகில் புட்டு, இடியாப்பம், கார ரொட்டி, பூரி எனப் பல உணவு வகைகளை ஏற்கனவே நம்முடைய இனிது இணைய இதழில் பதிவிட்டுளோம்.

இனி சுவையான கேழ்வரகு இனிப்பு ரொட்டி செய்முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

ரொட்டி செய்யத் தேவையான பொருட்கள்ரொட்டி செய்யத் தேவையான பொருட்கள்

 

கேழ்வரகு மாவு – ஒரு கப் (ஒரு பங்கு)

மண்டை வெல்லம் (தூளாக்கியது) – 1/2 கப் (1/2 பங்கு)

தண்ணீர் – 1/4 கப் (1/4 பங்கு)

உப்பு – மிகவும் சிறிதளவு

முந்திரி பருப்பு – 10 எண்ணம்

பாதாம் பருப்பு – 10 எண்ணம்

தேங்காய் எண்ணெய் – 3 ஸ்பூன்

நல்ல எண்ணெய் – மாவை விரிக்க மற்றும் சுட்டு எடுக்கத் தேவையான அளவு

 

செய்முறை

மண்டை வெல்லத்தை நன்கு தட்டி தூளாக்கி கொள்ளவும்.

முந்திரி பருப்பு மற்றும் பாதாம் பருப்பை சிறுசிறு துண்டுகளாக உடைத்துக் கொள்ளவும்.

மண்டை வெல்லத்தை தண்ணீரில் சேர்த்து முடிந்தளவு கரைத்துக் கொள்ளவும்.

வாயகன்ற பாத்திரத்தில் கேழ்வரகு மாவினைப் போட்டு அதனுடன் சிறிதளவு உப்பினைச் சேர்க்கவும்.

 

கேழ்வரகு மாவுடன் உப்பினைச் சேர்த்ததும்
கேழ்வரகு மாவுடன் உப்பினைச் சேர்த்ததும்

 

பின்னர் அதனுடன் உடைத்த முந்திரி பருப்பு மற்றும் பாதாம் பருப்பினைச் சேர்க்கவும்.

 

பருப்பு வகைகளைச் சேர்த்ததும்
பருப்பு வகைகளைச் சேர்த்ததும்

 

மண்டை வெல்லத் தண்ணீரை அடுப்பில் வைத்து, மண்டை வெல்லம் முழுவதும் கரையும் வரை சூடேற்றி இறக்கவும்.

மண்டை வெல்லக் கரைசலை வடிகட்டி, கேழ்வரகு மாவில் சேர்த்து ஒருசேரக் கிளறி, அதனுடன் 3 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்க்கவும்.

 

வெல்லக்கரைசலைச் சேர்த்ததும்
வெல்லக்கரைசலைச் சேர்த்ததும்

 

கேழ்வரகு மாவினை சப்பாத்தி மாவு பதத்திற்குத் திரட்டவும்.

 

மாவினைத் திரட்டியதும்
மாவினைத் திரட்டியதும்

 

இதனை 1/4 மணி நேரம் ஊற விடவும்.

பின்னர் மாவினை சிறுஉருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

ஒரு தட்டினை தலைகீழாகப் போட்டு அதில் ஈரத்துணியை விரிக்கவும்.

துணியின் மேல் உருண்டையை வைத்து, நல்ல எண்ணெயைத் தொட்டுக் கொண்டு, மாவினை ஒரே தடிமத்துடன் சீராக விரிக்கவும்.

 

ஈரத்துணியின் மேல் உருண்டை
ஈரத்துணியின் மேல் உருண்டை

 

மாவினை விரித்ததும்
மாவினை விரித்ததும்

 

தோசை கல்லினை அடுப்பில் வைத்து சூடாகியதும் விரித்த மாவினை கல்லில் போடவும்.

அடுப்பினை மிதமான தீயில் வைக்கவும்.

மாவினைச் சுற்றிலும் எண்ணெய் விட்டு ஒரு நிமிடம் கழித்து திருப்பிப் போடவும்.

 

விரித்த மாவினை கல்லில் போட்டதும்
விரித்த மாவினை கல்லில் போட்டதும்

 

மீண்டும் எண்ணெய் விட்டு ஒரு நிமிடம் கழித்து திருப்பி விடவும்.

 

திருப்பிப் போட்டதும்
திருப்பிப் போட்டதும்

 

பின்னர் ஐந்தாறு முறைகள் எண்ணெய் விடாமல் திருப்பி திருப்பிப் போட்டு சுட்டு எடுக்கவும்.

இவ்வாறாக எல்லா உருண்டைகளையும் விரித்து சுட்டு எடுக்கவும்.

சுவையான கேழ்வரகு இனிப்பு ரொட்டி தயார்.

 

சுவையான கேழ்வரகு இனிப்பு ரொட்டி
சுவையான கேழ்வரகு இனிப்பு ரொட்டி

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் முந்திரி பருப்பு, பாதாம் பருப்பிற்கு பதிலாக தேங்காயை துருவியோ, பற்களாகக் கீறியோ மாவில் சேர்த்து இனிப்பு ரொட்டி தயார் செய்யலாம்.

விருப்பமுள்ளவர்கள் மண்டை வெல்லத்திற்கு பதிலாக கருப்பட்டியைக் கொண்டு இனிப்பு ரொட்டி தயார் செய்யலாம்.

மண்டை வெல்லம் சேர்த்து இனிப்பு தயார் செய்வதால் ரொட்டியின் மேல்புறம் சட்டென கருகி விடும். ஆதலால் அடுப்பினை சிறுதீயில் வைத்து அடிக்கடி திருப்பிப் போட்டு ரொட்டி சுடவும்.

ஜான்சிராணி வேலாயுதம்

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.