கேழ்வரகு கடலை உருண்டை மிகவும் சத்தான, வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற ஆரோக்கியமான இடைவேளை சிற்றுண்டி.
இதனை செய்து வைத்து ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம். இதனை செய்வது மிகவும் எளிது.
வளரும் குழந்தைகளுக்குத் தேவையான இரும்புச்சத்து, கால்சியம் உள்ளிட்ட சத்துக்கள் இதில் நிறைந்து இருப்பதால் குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு இரண்டு உருண்டைகள் கொடுக்கலாம்.
இனி சுவையான கேழ்வரகு கடலை உருண்டை செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கேழ்வரகு மாவு – 1 கப்
நிலக்கடலை – 1/2 கப்
கருப்பட்டி – 1/4 கப்
பேரீச்சம் பழம் – 1/2 கப்
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
முந்திரிப்பருப்பு – 20 எண்ணம்
செய்முறை
பேரீச்சம் பழத்தில் உள்ள விதைகளை நீக்கி சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
கருப்பட்டியை நன்கு பொடித்துக் கொள்ளவும்.
வாணலியில் ஒரு ஸ்பூன் நெய்யினைச் சேர்த்து உருகியதும் அதில் கேழ்வரகு மாவினைச் சேர்த்து அடுப்பினை மிதமான தீயில் வைத்து ஐந்து நிமிடங்கள் வறுக்கவும்.


கேழ்வரகு மாவில் நன்கு வறுப்பட்ட வாசனை வரும். அடுப்பிலிருந்து கேழ்வரகு மாவினை இறக்கி ஆற விடவும்.
பச்சை நிலக்கடலையை வாணலியில் சேர்த்து அடுப்பினை மிதமான தீயில் வைத்து 15 நிமிடங்கள் வறுக்கவும். பின்னர் அடுப்பிலிருந்து கடலையை இறக்கி தோலினை நீக்கிக் கொள்ளவும்.


வறுத்த நிலக்கடலை எனில் வாணலியில் வறுத்த நிலக்கடலையைச் சேர்த்து லேசாக சூடேறும் வரை வறுத்துக் கொள்ளவும்.
நிலக்கடலை ஆறியதும் அதனை மிக்சியில் அரைக்கவும். நிலக்கடலையை அரைக்கும் போது விட்டு விட்டு அரைத்துக் கொள்ளவும்.

நிலக்கடலை பொடியானதும் அதில் வறுத்து ஆற வைத்துள்ள கேழ்வரகு மாவினைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

பின்னர் அதில் பொடித்து வைத்துள்ள கருப்பட்டியைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

அதனுடன் பேரீச்சம் பழத்தைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
அரைத்தவற்றை வாயகன்ற பாத்திரத்தில் போடவும்.


வாணலியை அடுப்பில் வைத்து அதில் நெய்யினை ஊற்றி முந்திரிப் பருப்பினைச் சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.

பின்னர் அதனை அரைத்தவற்றுடன் சேர்த்து நன்கு கிளறிக் கொள்ளவும்.

பின்னர் மாவினை விருப்பமான அளவில் எடுத்து உருண்டைகளாகப் பிடிக்கவும்.
சுவையான கேழ்வரகு கடலை உருண்டை தயார்.

குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் கருப்பட்டிக்குப் பதில் மண்டை வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்து உருண்டை தயார் செய்யலாம்.
விருப்பமுள்ளவர்கள் முந்திரி பருப்புடன் கிஸ்மிஸ் பழம் சேர்த்து உருண்டை தயார் செய்யலாம்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!