கேழ்வரகு / ராகி புட்டு சத்தானதும், சுவை மிகுந்ததுமான மாலை நேரத்துக்கு ஏற்ற சிற்றுண்டி.
கேழ்வரகில் அடை, தோசை, இடியாப்பம், களி, கூழ் என பல வகையான உணவு வகைகளைத் தயார் செய்யலாம்.
கேழ்வரகு புட்டு செய்வதற்கு சிறிது நேரமே (20 நிமிடங்கள்) ஆகும்.
இனி எளிதான முறையில் வீட்டில் கேழ்வரகு புட்டு செய்முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கேழ்வரகு மாவு – 300 கிராம்
சர்க்கரை – 100 கிராம்
தேங்காய் – ½ மூடி
ஏலக்காய் – 3 எண்ணம்
நல்ல எண்ணெய் – 3 ஸ்பூன்
கல் உப்பு – சிறிதளவு
தண்ணீர் – தோராயமாக 50 மில்லி லிட்டர் ( ½ டம்ளர்)
செய்முறை
முதலில் கேழ்வரகு மாவினை ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
ஏலக்காயை நன்கு தட்டிக் கொள்ளவும்.
தேங்காயை துருவி பூவாக்கிக் கொள்ளவும்.
சிறிதளவு கல் உப்பினை தோராயமாக ½ டம்ளர் தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும்.
கேழ்வரகு மாவில் தண்ணீரை சிறிது சிறிதாகத் தெளித்து எல்லா மாவிலும் ஈரப்பதம் இருக்குமாறு பிசையவும்.
மாவானது பிடித்தால் கொழுக்கட்டை போலவும், அதனை உதிர்த்தால் எளிதில் உதிரியாகவும் இருக்க வேண்டும். இதுவே புட்டு மாவிற்கான பதமாகும்.
மாவினை பிசையும் போது சிறு சிறு கட்டிகள் ஏற்பட்டால் கைகளால் அதனை உடைத்து உதிரியாக்கவும்.
பின் இட்லிப் பானையில் ஈரத் துணியினை விரித்து அதன் மேல் பதமான புட்டு மாவினை பரப்பி மூடி ஆவியில் வேக விடவும்.
15 நிமிடங்கள் கழித்து இட்லிப் பானையைத் திறந்து மாவு வெந்ததை உறுதி செய்யவும்.
புட்டு மாவு வெந்து விட்டால் நிறம் மாறி நல்ல வாசனையுடன் துணியில் அதிகம் ஒட்டாது வரும்.
இப்போது புட்டினை வாயகன்ற பாத்திரத்தில் போடவும். அதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து ஒரே சேரக் கிளறுவும்.
இவ்வாறே சர்க்கரை, தட்டிய ஏலக்காய் மற்றும் நல்லெண்ணெய் சேர்த்து ஒரு சேரக் கிளறவும். சுவையான கேழ்வரகு / ராகி புட்டு தயார்.
இதனை எல்லோரும் விரும்பி உண்பர்; குழந்தைகளுக்கு தின்பண்டமாகவும் பள்ளிக்குக் கொடுத்து விடலாம்.
குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் சர்க்கரைக்குப் பதில் மண்டை வெல்லம் அல்லது கருப்பட்டி சேர்த்தும் புட்டு தயார் செய்யலாம். மண்டை வெல்லம் அல்லது கருப்பட்டியை நன்கு தூளக்கி புட்டில் சேர்க்கவும்.
புட்டு மாவு பிசையும்போது தண்ணீர் அதிகமாகி விட்டால் காய்ந்த கேழ்வரகு மாவினை சிறிதளவு சேர்த்து ஒரு சேரப் பிசைந்து புட்டு தயார் செய்யலாம்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!