கேழ்வரகு ரொட்டி செய்வது எப்படி?

கேழ்வரகு ரொட்டி செய்முறை தெரிந்து கொள்வதற்கு முன்பு கேழ்வரகு பற்றி மிகவும் சந்தோசமான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
பொதுவாக கடைகளில் மளிகைப் பொருட்கள் வாங்கும் போது இதை எப்படி தயாரித்து இருப்பார்களோ என்ற ஐயத்துடனே வாங்குவதுதான் வழக்கம். கேழ்வரகைப் பொறுத்தமட்டில் பயம் தேவையில்லை.

கேழ்வரகு பயிர் வளர்வதற்கு பூச்சிகொல்லி மருந்தோ, உரமோ தேவையில்லை. குறைந்த அளவு தண்ணீரே போதுமானது. இந்த தானியத்திற்கு இயற்கையாகவே அப்படி ஒரு தன்மை.

குழந்தைகள் முதல் பெரியவர் வரை  அனைவரும் பால் அருந்துகின்றனர். தினமும் 2 வேளை பால் அருந்தினால் எலும்புகளுக்குத் தேவையான கால்சியம் சத்து கிடைக்கும் என்று கூறுகின்றார்கள்.

பாலை விட மூன்று மடங்கு கால்சியம் சத்து கேழ்வரகு சிறுதானியத்தில் இருக்கிறது. எனவே கேழ்வரகு சிறுதானியம் உணவுகளை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த மொறு மொறுப்பான கேழ்வரகு ரொட்டி செய்வது எப்படி என்று பார்ப்போம்.

 

தேவையான பொருட்கள்

கேழ்வரகு மாவு – ½ கிலோ

பெரிய வெங்காயம் – ½ கிலோ

கொத்தமல்லி இலை அல்லது முருங்கை இலை – இரண்டு கைபிடி அளவு

கருவேப்பிலை – ஒரு கொத்து

நல்ல எண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

பச்சை மிளகாய் – 2

(காரம் தேவையில்லை எனில் விதையை நீக்கிக் கொள்ளலாம்)

 

செய்முறை

பெரிய வெங்காயம், கொத்தமல்லி இலை அல்லது முருங்கை இலை, கருவேப்பிலை, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக அரிந்து கொள்ளவும்.

கேழ்வரகு மாவில் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

கேழ்வரகுடன் நறுக்கியவைகள் மற்றும் தேவையான நீர் சேர்த்து சிறிது தளர்வாக பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை 1/4 மணி நேரம் ஊற விடவும்.

கேழ்வரகு ரொட்டி மாவுக் கலவை கையில் எடுத்தால் கையில் இருக்கவா, விழவா என்ற பதத்தில் இருக்க வேண்டும்.

 

கேழ்வரகு ரொட்டி மாவுக் கலவை
ரொட்டி தட்ட தயார் நிலையில்  மாவுக் கலவை

தோசைக் கல்லை சூடு படுத்திக் கொள்ளவும். ஓரளவு சூடானதும் ஒரு கை அளவு கேழ்வரகு மாவுக் கலவையை எடுத்து கல்லின் நடுவில் வைத்து கை விரல்களால் மிருதுவாக அனைத்துப் பக்கங்களும் சமமாக இருக்குமாறு அழுத்தி விடவும்.(மருதாணி வைப்பது போல்)

இந்த ரொட்டிக்கு எண்ணெய் சிறிது அதிகமாகவே தேவைப்படும். மாவை சமமாக பரப்பிய பிறகு 2 ஸ்பூன் நல்ல எண்ணெய் விடவும். ரொட்டியை திருப்பிப் போட்டு இன்னும் 2 ஸ்பூன் நல்ல எண்ணெய் விடவும்.

 

கேழ்வரகு ரொட்டி மாவு ‍- அடுப்பில் வைத்ததும்
கேழ்வரகு ரொட்டி மாவு ‍- அடுப்பில் வைத்ததும்

 

ஓவ்வொரு பக்கமும் ஒரு நிமிடம் என்று நான்கு முதல் ஐந்து தடவை திருப்பிப் போடவும். தேவைப்பட்டால் எண்ணெய் சேர்க்கவும்.

கேழ்வரகு ரொட்டி வேக தேவையான எண்ணெயை எடுத்துக் கொண்டு மீதி எண்ணெயை வெளியேற்றி விடும்.

பொதுவாக கேழ்வரகு வேக சிறிது நேரம் பிடிக்கும். கேழ்வரகு புட்டாக இருந்தாலும், கொழுக்கட்டையாக இருந்தாலும் 30 நிமிடங்கள் முதல் 40 நிமிடங்கள் ஆகும்.

அதனாலே கேழ்வரகு ரொட்டி உட்புறமும் வேக சிறிது எண்ணெய் அதிகமாக தேவைப்படுகின்றது.

 

கேழ்வரகு ரொட்டி - வெந்ததும்
ரொட்டி – வெந்ததும்

 

ரொட்டி வெந்ததும் நல்ல மணம் வரும். அதோடு மேல் புறம் பிரவுன் கலர் ஆனதும் எடுத்து விடவும். சுவையான கேழ்வரகு ரொட்டி தயார்.

பிரதிபா செந்தில்