கைதட்டித் தாவும் தண்டால் செய்வது எப்படி?

கைதட்டித் தாவும் தண்டால் செய்வது எப்படி? என்ற‌ இக்கட்டுரை, டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா எழுதிய இந்திய நாட்டு தேகப் பயிற்சிகள் என்ற நூலில் இடம் பெற்ற கட்டுரை ஆகும்.

பெயர் விளக்கம்

தாவும் தண்டால் செய்யும் பொழுது, தரையை உள்ளங்கைகள் தொடுவதற்குமுன், கைதட்டி ஒலி எழுப்பிவிடும் ஆற்றல் முறைக்கே கைதட்டித் தாவும் தண்டால் என்று பெயர்.

செய்முறை

முதல்நிலை : நேர்த்தண்டால் செய்வதற்குரிய ஆரம்ப நிலையில் முதலில் இருந்து, பின்னர் தரைக்கு இணையாக உடலைக் கொண்டுவந்து இருப்பது முதல் நிலையாகும்.

இரண்டாம்நிலை : உடலைத் தூக்கியவாறு முன்புறமாகத் தாவி, உள்ளங்கைகளைத் தரையில் ஊன்றுவதற்குள், நெஞ்சுக்கு முன்புறமாகக் கைகளைக் கொண்டுவந்து கைதட்டி ஒலி எழுப்ப வேன்டும்.

பின்  தரையில் கைகளை ஊன்றி, தண்டால் எடுத்து, பின்னர் மேலேழுப்பி வந்து பின்னர் குதிகால் உட்காரும் நிலைக்கு வரவேண்டும்.

குறிப்பு : தாவி விழுவதற்கு முன்னர் கைதட்ட வேண்டும். கைதட்டிய உடனே கைகளை ஊன்றி விடவேண்டும். இதற்கு இடைப்பட்ட நேரம் மிகவும் குறைவென்பதால், விரைவுடன் செய்து விடவேண்டும்.

மிகவும் கவனத்துடன் இந்தப் பயிற்சியை செய்திருக்க வேண்டும்.
தண்டால் பயிற்சிகளை ஒரு முறைமட்டும் செய்தால் பயனில்லை.

பலமுறை தொடர்ந்தாற்போல் செய்தால்தான் பலன் பெறமுடியும் என்பதால், தொடர்ந்து பலமுறை செய்யவும். அதே சமயத்தில், உடலை வருத்திச் செய்கின்ற தன்மையிலிருந்தும் விடுபட வேண்டும்.

பயிற்சி செய்யும்பொழுது, உடலுக்கு பலம் பெறுவது போன்ற நிலையினை உணர்வதுதான் பயிற்சி செய்வதில் பயன் பெறும் நிலையுமாகும்.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

எஸ்.நவராஜ் செல்லையா அவர்கள்

ஒரு மிகச் சிறந்த உடற்பயிற்சி ஆசிரியர் மற்றும் தமிழ் எழுத்தாளர் ஆவார். (பிறப்பு 1937 – இறப்பு 2001)

இவர் விளையாட்டு, உடற்பயிற்சி, உடல்நலம், விளையாட்டுத் துறை (ஆங்கிலம் தமிழ்) அகராதி உள்ளிட்ட 27 நூற்களை எழுதியுள்ளார். இவரின் நூல்களை 2010 -2011 இல் தமிழ் நாடு அரசு நாட்டுடைமை ஆக்கியது.

முதன் முதலாக விளையாட்டுத்துறை பற்றி ஆய்வு செய்து, சென்னைப் பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர் இவர்.

விளையாட்டுக் களஞ்சியம் மாத இதழை 1977 முதல் வெளியிட்டு அதன் ஆசிரியராகவும் பணியாற்றி வந்தார்.

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.