கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்
கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்
எத்தொழில் எதுவும் தெரியாமல்
இருந்திடல் உனக்கே சரியாமோ?
என்று நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளையவர்கள் பாடிய பாடலில் கூறியுள்ளார்.
கைத்தொழில் வகைகள்
நமது நாட்டில் கிராமங்களே பலவாக உள்ளன. கிராமங்களில் பெரும்பாலோர் பயிர் தொழிலையே செய்கின்றனர்.
பயிர் தொழில் செய்யும் விவசாயிகள் ஆண்டில் பல மாதங்கள் வீணே காலத்தைக் கழிக்கின்றனர். அவர்கள் அக்காலத்தில் பல குடிசைத் தொழில்களைச் செய்து, தங்கள் வருவாயைப் பெருக்கிக் கொள்ளலாம்.
மட்பாண்டங்கள் செய்தல், எண்ணெய் எடுத்தல், உணவுத் தொழிலுக்குத் தேவையான சில கருவிகளைச் செய்தல், நெசவுத்தொழில், பாய்பின்னுதல், கூடைமுடைதல், ஆடுமாடு, கோழி வளர்த்தல் போன்ற பல கைத் தொழில்களைச் செய்யலாம்.
காட்டுப் பகுதியில் உள்ளவர்கள் தேன் எடுத்தல், மரச்சாமான்கள் செய்தல் போன்ற தொழில்களைச் செய்து தமது வருவாயைப் பெருக்கிக் கொள்ளலாம்.
குடிசைத் தொழில்களை ஓய்வு நேர வேலையாக மேற்கொள்ளலாம் அல்லது முழுநேர வேலையாக மேற்கொள்ளலாம்.
குடிசைத் தொழின் மூலம் ஆக்கப்படும் தொழில்களை அனைவரும் விரும்பி வாங்குகின்றனர். அவை அன்றாட வாழ்க்கைக்கு பயன்படுவதாக உள்ளன.
அவை நாள்தோறும் பயன்படுத்தப்படுவதால் அவற்றின் தேவை மிகவும் அதிகமாகிறது. இத்தேவையை இடைவிடாத உற்பத்தியினால் நிறைவேற்றலாம்.
பொருளாதார பயன்
ஒரு நாட்டின் பொருளாதாரம் அந்நாட்டில் நடைபெறும் தொழில் வளத்தைப் பொருத்திருக்கிறது. தொழில்வளம் மிக்க நாடுகள் செல்வ செழிப்புகள் உள்ளதாக இருக்கின்றன.
உதாரணமாக ஜப்பானில் உள்ள பெண்களும் தம் ஓய்வு நேரங்களில் பூ வேலை செய்தல், பின்னுதல் போன்ற கைத்தொழில் செய்து வருகிறார்கள். ஆகையால் ஜப்பான் சிறுதீவுகளாக காட்சியளித்தாலும் செல்வச் சிறப்புடன் விளங்குகிறது.
அவர்களைப் போலவே நாமும் உழைத்து நம்நாட்டை உயர்த்த கைத்தொழில் வேண்டும். இது இயந்திரத்தின் உதவியின்றி, சிறிதளவு பணத்தைக் கொண்டு கையால் செய்யப்படுவது. ஆகவே அனைவரும் இதனை எளிதில் மேற்கொள்ளலாம்.
இவ்வாறு குடிசைத் தொழில்கள் செழிப்பதால் வேலையில்லாத் திண்டாட்டம் குறைகிறது. நாட்டின் பொருளாதாரம் வளர்கிறது. பிற நாட்டாரை எதிர்பார்க்கும் நிலை நீங்குகிறது.
தொழிற் கல்வி
கல்வியுடன் தொழிற் கல்வியையும் கற்றுக் கொள்ள வேண்டும் இளமையிலே ஏதேனும் ஒரு தொழிலைக் கற்பது எளிது, பயனுடையது. ஒருவர் எந்தத் தொழிலை வேண்டுமானாலும் கற்கலாம்.
எந்த பருவத்தினரும் ஏதேனும் ஒரு தொழிலை ஓய்வு நேரத் தொழிலாகக் கொள்ளலாம்.
நம் வாழ்க்கைத் தேவையான உணவு, உடை முதலிய வாழ்க்கைக் கருவிகள் ஆகியவற்றிற்கு தொழிற்கல்வி மிகவும் இன்றியமையாத இருக்கிறது.
எனவே மாணவர்கள், கல்விப் பயிற்சி காலத்திலேயே நெசவு தையல் போன்றவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு கற்றுக்கொண்டால் நாம் கற்ற கல்விக்கேற்ப வேலையில்லா காலங்களில் நம் பிழைப்புக்கான ஊதியத்தை பெறலாம்.
காந்தியடிகள் கூறியது போல, நமது தேவையை நாமே நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். அயலார் கையை எதிர் நோக்குவது அவச் செயலே ஆகும்.
– S.ஆஷா