கை வைத்திய முறைகள் என்பது வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு செய்யும் எளிய மருத்துவ முறையாகும்.

கீழே விழுந்து அடிபட்டால், திரிபலா சூரணம் நீரில் கொதிக்க வைத்து தெளிவான கஷாயத்தில் காயத்தைக் கழுவி பிறகு திரிபலா சூரணத்தைக் காயத்தின் மீது தூவி விடவும்.

காயத்திற்கும், இரத்த கசிவு அதிகமாக இருந்தாலும் அரக்கு சூரணத்தைக் காயத்தில் வைத்துக் கட்டவும்.

சளி, இருமலுக்கு தாளிசாதி சூரணத்தைக் குழைத்துத் தேனில் அடிக்கடிக் கொடுக்கவும்.

இருமலுக்கு ஆடாதோடைக் கஷாயம் தேனுடன் அடிக்கடி சாப்பிடலாம்.

புண்களுக்கு வேப்பிலை, மஞ்சள், ஆலம்பட்டை, அரசம்பட்டை கசாயத்தில் கழுவவும். திரிபலா சூரணத்தைப் புண்ணில் அப்பி விடவும்.

வெள்ளைப்படுதலுக்கு கீழாநெல்லிக் கஷாயம் மற்றும் நெல்லிக்காய்த் தூளில் பனை வெல்லம் கலந்து சாப்பிடவும்.

தலைவலிக்கு இரண்டு சொட்டு நொச்சித் தைலத்தை மூக்கின் துவாரங்களில் செலுத்தவும். தலையில் நொச்சித் தைலத்தைத் தராளமாகத் தடவவும்.

உடலில் எந்த அங்கங்களில் வலி தோன்றினாலும் சூடாகத் தைலத்தைத் தடவவும்.

குழந்தைகளின் சளிக்கு வெற்றிலை, கருந்துளசிச் சாற்றைத் தேனில் கலந்து கொடுக்கவும்.

சொத்தைப் பல்லின் வலிக்கு சுக்கு, கற்பூரம், உப்பு கலந்து பல்லில் வைத்தால் தீவிரமான வலியை உடனே கட்டுப்படுத்தும். பிறகு தகுந்த வைத்தியம் செய்து கொள்ளவும்.

கால் சுளுக்கினால் சூடாக உப்பு + புளி பற்றுப் போடவும்.

தலையில் அடிபட்டுக் காயம் இல்லாமல் வீக்கம் மட்டும் இருந்தால் முருங்கை இலையைப் பற்றுப் போடவும்.

குழந்தைகளின் மலச்சிக்கலுக்கு இடுப்பில் தைலம் தேய்த்து ஒத்தடம் கொடுக்கவும். வெற்றிலைக் காம்பினை விளக்கெண்ணையில் தோய்த்து ஆசன வாயில் வைக்கவும்.

வயிற்றுப் போக்கிற்கு முக்கியமாக குழந்தைகளுக்கு ஜாதிக்காயை இழைத்து தேனில் பலமுறை கொடுக்கவும்.

வயிற்று வலிக்கு வெந்நீரில் நெய், சுக்கு, சர்க்கரை கலந்து கொடுக்கவும். வலியுள்ள பகுதிக்கு சூடாக தைலம் தடவவும்.

வயிறு, நெஞ்சு எரிச்சலுக்கு உலர்ந்த கருப்பு திராட்சை, கடுக்காய், சர்க்கரை சமஅளவு சேர்த்து சாப்பிடவும். அவற்றை அரைத்து வில்லைகளாக்கியும் சாப்பிடலாம். பாலுடன் சுக்கு கலந்து உட்கொள்ளலாம்.

வயிற்று வலிக்கு ஓமத்தை அரைத்து மோரில் கலந்து கொடுக்கவும்.
பால் செரிக்காமல் வயிற்றுப் போக்கு ஏற்படுமானால் பாலுடன் நீர் கலந்து, சுக்கும் கோரைக்கிழங்கும் சேர்த்துக் காய்ச்சிக் கொடுக்கவும். பால் நன்றாகச் செரிக்கும்.

மலம் சரிவரப் போக சுக்கு வெந்நீரில் 1-2 ஸ்பூன் விளக்கெண்ணெய் கலந்து சாப்பிடலாம்.

இஞ்சிச்சாறும், சின்ன வெங்காயச் சாறும் கலந்து வாந்தி, குமட்டல் போன்றவற்றிற்குக் கொடுக்கலாம்.

இஞ்சிச்சாறு, புதினா, உப்பு, வெங்காயம் கலந்து கொடுப்பது அஜீரணம், குமட்டல், பசியின்மை, வயிற்று உப்புசம் இவற்றிற்கு நல்லது.

குழந்தைகளின் சளிக்கு துளசி + வெற்றிலைச்சாறு தேனுடன் கலந்து கொடுக்கவும்.

குழந்தைகளின் சளிக்கு வேப்பெண்ணெய்யை மார்பு, முகுதுப் பகுதியில் தடவவும். வேப்பெண்ணையை உள்ளுக்கும் கொடுக்கவும்.

தீப்புண்களுக்குச் சோற்றுக் கற்றாழையின் உள் பகுதியிலுள்ள சோற்றைத் தடவவும்.

 

Leave a comment

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: