கொண்டைக்கடலை நம் நாட்டில் அடிக்கடி பயன்படுத்தப்படும் உணவுப் பொருள். பெரும்பாலும் எல்லா கடவுளர்களின் வழிபாட்டிலும் இது படையலாகப் படைக்கப்படுகிறது.
இது பசியைப் போக்கி ஆற்றலை வழங்குவதுடன் உடல்நலனையும் மேம்படுத்துகிறது. ஆதலால்தான் இதனை நம் முன்னோர்கள் விரத வழிபாட்டில் பயன்படுத்தியுள்ளனர்.
கொண்டைக்கடலையிலிருந்து நாம் பயன்படுத்தும் பொரிகடலை (வறுகடலை), கடலைப்பருப்பு (குழம்பு) ஆகியவை பெறப்படுகின்றன.
இவை பொதுவாக வெள்ளை, கறுப்பு, பச்சை நிறங்களில் காணப்படுகின்றன. இவை தற்போது உலகெங்கிலும் பயன்படுத்தப்படுகின்றன.
கொண்டைக்கடலையின் அமைப்பு மற்றும் வளரியல்பு
கொண்டைக்கடலையானது 30 முதல் 60 செமீ உயரம் வரை வளரும் செடிவகைத் தாவரத்திலிருந்து பெறப்படுகிறது. இது வறட்சியைத் தாங்கி வளரும் குளிர்காலப் பயிர் ஆகும்.
நல்ல வளமான மண்ணில் நடுநிலை பி.எச் மதிப்பினைக் கொண்ட மண் மற்றும் குறைந்த வெப்பநிலை ஆகியவை இது செழித்து வளர்ந்து நல்ல மகசூலைத்தர சிறந்ததாகும்.
குற்றுச் செடி வகையைச் சார்ந்த இது இறகு வடிவ இலைகளைக் கொண்டுள்ளது. இத்தாவரத்தில் சிறிய காய்கள் தோன்றுகின்றன.
இக்காய்களில் 1-3 விதைகள் காணப்படுகின்றன. இவையே நாம் உண்ணும் கொண்டைக்கடலை ஆகும்.
இது ஃபேபேசி எனப்படும் இருபுறவெடி கனி வகையைச் சார்ந்தது. இதனுடைய அறிவியல் பெயர் சீசர் ஏரிட்டினம் என்பதாகும்.
கொண்டைக்கடலையின் வரலாறு
கொண்டைக்கடலையானது மத்திய கிழக்கு நாடுகளில் தோன்றியதாகக் கருதப்படுகிறது. சுமார் 7000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டைக்கடலை பயன்படுத்தப்பட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன.
கிமு 3000–ல் இது முறையாக பயிர் செய்யப்பட்டது. முதலில் மத்தியதரைக்கடல் பகுதியில் பயிர் செய்யப்பட்ட இப்பயிரானது பின்னர் இந்தியாவிற்கும் எத்தோப்பியாவிற்கும் பரவியது.
எகிப்திய, கிரேக்க மற்றும் ரோமானிய நாகரீகங்களில் இது மிகவும் பிரபலமாக இருந்தது. 16-ம் நூற்றாண்டில் மிதவெப்ப மண்டலப்பகுதிகளுக்கு ஸ்பானியர்கள் மற்றும் போர்த்துகீசியர்களாலும், வெளிநாடுகளுக்குச் சென்ற இந்தியர்களாலும் இது அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தியா, பாகிஸ்தான், துருக்கி, எத்தோப்பியா மற்றும் மெக்ஸிகோ இன்றைக்கு அதிகளவு கொண்டைக்கடலையை உற்பத்தி செய்கின்றன.
1973-ல் வறுத்து பொடித்த கொண்டைக்கடலை காப்பிப் பொடிக்கு மாற்றாக ஐரோப்பாவில் பயன்படுத்தப்பட்டது.
முதல் உலகப்போரில் காப்பிப் பொடிக்கு மாற்றாக பயன்படுத்துவதற்காக ஜெர்மனியில் இது அதிகளவு உற்பத்தி செய்யப்பட்டது. இன்றைக்கும் காப்பிப்பொடிக்கு மாற்றாக வறுத்து பொடித்த கொண்டைக்கடலைப் பொடி பயன்படுத்தப்படுகிறது.
கொண்டைக்கடலையில் உள்ள ஊட்டச்சத்துகள்
கொண்டைக்கடலையில் விட்டமின் பி9 (ஃபோலேட்டுகள்) மிகஅதிகளவும், பி1 (தயாமின்), பி6(பைரிடாக்ஸின்), பி5(பான்டாதெனிக் அமிலம்) அதிகளவும், பி3 (நியாசின்), பி2 (ரிபோஃப்ளோவின்), ஏ, சி, இ, கே ஆகியவையும் காணப்படுகின்றன.
இதில் செம்புச்சத்து, இரும்புச்சத்து ஆகியவை மிகஅதிகளவும், பாஸ்பரஸ், மாங்கனீசு, துத்தநாகம் ஆகியவை அதிகளவும், கால்சியம், பொட்டாசியம், செலீனிம் ஆகிய தாதுஉப்புகள் காணப்படுகின்றன.
மேலும் இதில் புரதச்சத்து, நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், அமினோ அமிலங்கள் ஆகியவை அதிகளவும் காணப்படுகின்றன.
கொண்டைக்கடலை இறைச்சிக்கு இணையான புரதத்தைக் கொண்டுள்ளது. எனவே அதிகப்புரத்தைப் பெற விரும்பும் சைவ உணவினை உண்பவர்கள் கொண்டைக்கடலையை அதிகளவு சேர்த்துக் கொள்ளலாம். எனவேதான் இது புரதஊற்று என்று அழைக்கப்படுகிறது.
கொண்டைக்கடலையின் மருத்துவப்பண்புகள்
நல்ல செரிமானத்திற்கு
கொண்டைக்கடலையில் உள்ள நார்ச்சத்தானது செரிமானப் பாதையில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவித்து செரிமானம் நன்கு நடைபெற உதவுகிறது.
இதில் உள்ள நார்ச்சத்துடன் கூடிய கார்போஹைட்ரேட் நல்ல செரிமானத்தை ஊக்குவிக்கிறது. மேலும் இதில் உள்ள நார்ச்சத்து குடலில் உள்ள நச்சுக்கழிவுகளை வெளியேற்றிவிடுவதால் வயிற்றுப்போக்கு, செரிமானமின்மை, மலச்சிக்கல் உள்ளிட்ட செரிமானப் பிரச்சினைகள் ஏற்படாமல் நம்மைப் பாதுகாக்கின்றன.
இதயநலத்தைப் பாதுகாக்க
கொண்டைக்கடலையில் உள்ள பொட்டாசியம், நார்ச்சத்து, விட்டமின் சி, பி6 ஆகியவை இதயநலத்தை மேம்படுத்துகின்றன. நார்ச்சத்தானது இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவினைக் குறைக்கிறது.
இதனால் இதயநரம்புகளில் கொலஸ்ட்ரால் சேருவது தடைசெய்யப்பட்டு மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட நோய்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது.
இதில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைச் சீராக்குகிறது. இதில் உள்ள ஃபோலேட்டுகள் இரத்த உறைதலைத் தடைசெய்கிறது. எனவே இதனை உண்டு இதயநலத்தைப் பாதுகாக்கலாம்.
புற்றுநோய் ஏற்படாமல் பாதுகாக்க
கொண்டைக்கடலையில் உள்ள செலீனியமானது கல்லீரல் நன்கு செயல்பட ஊக்குவிக்கிறது. இதனால் உடலில் உள்ள புற்றுநோய்க்கு காரணமானவை அழிக்கப்படுகின்றன.
மேலும் செலீனியம் புற்றுகட்டி உருவாதைத் தடுக்கிறது. மேலும் இதில் உள்ள ஃபோலேட்டுகள் டிஎன்ஏ உற்பத்தி மற்றும் பழுதுபார்ப்பில் முக்கியப்பங்கு வகிக்கிறது.
டிஎன்ஏ உருமாற்றமே புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணமாகும். ஃபோலேட்டுகள் டிஎன்ஏ உருமாற்றம் நடைபெறுவதைத் தடைசெய்கிறது.
கொண்டைக்கடலையில் காணப்படும் சபோனின் புற்றுச்செல்களின் பெருக்கத்தைத் தடுக்கிறது. மேலும் இதில் உள்ள நார்ச்சத்து குடல்புற்றுநோயையும், ஐசோப்ளவனாய்டுகள் மார்பகப்புற்று நோயையும் தடைசெய்கிறது.
ஆரோக்கியமான உடல்இழப்பிற்கு
கொண்டைக்கடலையில் உள்ள நார்ச்சத்தானது நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வினை உண்டாக்குகிறது. இதனால் இடைவேளை உணவுகள் தவிர்க்கப்படுகின்றன.
மேலும் இதில் உள்ள புரதச்சத்து உடலில் கொழுப்பு சேகரமாவதைத் தடைசெய்கிறது. ஏனெனில் புரதம் செரிக்கப்படும்போது அதிகளவு சக்தியானது செலவு செய்யப்படுகிறது.
கொண்டைக்கடலையானது உடலுக்குத் தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளதால் இதனை உண்டு ஆரோக்கியமான உடல்இழப்பினைப் பெறலாம்.
புரத ஊற்று
கொண்டைக்கடலையானது தாவர புரச்சத்தைக் கொண்டுள்ள முக்கியமான உணவுப் பொருளாகும். புரதச்சத்தானது உறுப்பு மண்டலங்கள், தசைகள், திசுக்கள் உள்ளிட்டவைகளின் மூப்பினைத் தள்ளிப் போடுகின்றன.
புரதச்சத்தானது இரத்தத்தில் சர்க்கரையின் அளவினைக் கட்டுப்படுத்துவதோடு ஹீமோகுளோபின் உற்பத்தியையும் அதிகரிக்கிறது. மேலும் காயங்களை விரைந்து ஆற்றவும் உதவுகிறது. எனவே புரத ஊற்றான கொண்டைக்கடலையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
சரும ஆரோக்கியத்திற்கு
கொண்டைக்கடலையில் உள்ள மாங்கனீசு செல்லுக்கு ஆற்றலை வழங்குவதோடு ப்ரீரேடிக்கல்களின் செயல்பாட்டினைத் தவிர்த்து சரும மூப்பினைத் தள்ளிப்போடுகிறது.
விட்டமின் பி தொகுப்புகள் செல்லுக்குத் தேவையான ஆற்றலை வழங்குகின்றன. மேலும் இதனை சருமத்தில் தடவும்போது சருமத்தைச் சுத்தமாக்குகிறது. சூரியஒளியால் ஏற்படும் சருமப்பிரச்சினைகளுக்கு கொண்டைக்கடலை சிறந்த தீர்வாகும்.
கேச பராமரிப்பிற்கு
கொண்டைக்கடலையில் உள்ள புரதச்சத்து கேசத்திற்கு ஆரோக்கியம் அளித்து கேசம் உதிர்வதைத் தடைசெய்கிறது. இதில் உள்ள மாங்கனீசு கேசத்திற்கு உறுதியை அளிக்கிறது.
இதில் உள்ள விட்டமின் ஏ மற்றும் துத்தநாகச்சத்து பொடுகுத் தொந்தரவு ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் இதில் உள்ள துத்தநாகம் கேசம் அடர்த்தியாக வளர உதவுகிறது.
இதில் உள்ள செம்புச்சத்து கேசம் மீண்டும் வளர்வதை ஊக்குவிக்கிறது. எனவே கொண்டைக்கடலையை அடிக்கடி உண்டு கேசத்தைப் பராமரிக்கலாம்.
கண்களின் ஆரோக்கியத்திற்கு
கொண்டைக்கடலையில் உள்ள பீட்டா-கரோடீன்கள், துத்தநாகம் ஆகியவை கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது. துத்தநாகம் கண்களின் தசைஅழற்சி நோய் ஏற்படாமல் தடைசெய்கிறது.
துத்தநாகம் கல்லீரலில் இருந்து விட்டமின் ஏ-வானது ரெக்டீனாவிற்குச் செல்ல உதவுகிறது. எனவே கொண்டைக்கடலையை உண்டு கண்களின் ஆரோக்கியத்தைப் பேணலாம்.
எலும்புகளைப் பாதுகாக்க
கொண்டைக்கடலையில் உள்ள மெக்னீசியம் கால்சியத்தோடு சேர்த்து எலும்புகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
இதில் உள்ள மாங்கனீசு, துத்தநாகம், விட்டமின் கே உள்ளிட்டவைகள் எலும்புகளின் கட்டமைப்பினை மேம்படுத்துகின்றன.
இதில் உள்ள இரும்புச்சத்து, துத்தநாகம் போன்றவை எலும்புகளின் வளர்ச்சிக்கு தேவையான கொலாஜன்கள் உற்பத்தியைத் தூண்டுகின்றன.
கர்ப்பிணிகளின் ஆரோக்கியத்திற்கு
கர்ப்பிணிகளுக்கு அவசியமான ஃபோலேட்டுகள் கொண்டைக்கடலையில் அதிகளவு காணப்படுகிறது. ஃபோலேட்டுகள் கருவில் உள்ள குழந்தைகள் குறைபாடின்றிப் பிறக்க மிகவும் அவசியம்.
மேலும் இதில் கர்ப்பிணிகளுக்குத் தேவையான நார்ச்சத்து, புரதச்சத்து, இரும்புச்சத்து கால்சியம் போன்றவையும் இதில் காணப்படுகின்றன. ஆதலால் கொண்டைக்கடலையை உண்டு கர்ப்பிணிகள் ஆரோக்கியத்தைப் பேணலாம்.
கொண்டைக்கடலையினைப் பற்றிய எச்சரிக்கை
கொண்டைக்கடலையினை அதிகளவு உண்ணும்போது அவை வயிற்று வலி, வயிற்று உப்புசம், வாந்தி ஆகியவற்றை ஏற்படுத்தும். எனவே இதனை அளவோடு உண்ண வேண்டும்.
கொண்டைக்கடலையினை வாங்கும் முறை
கொண்டைக்கடலையினை வாங்கும்போது ஒரே சீரான நிறத்துடன் பூச்சி அரிப்பு இல்லாதவற்றைப் பார்த்து வாங்க வேண்டும்.
கொண்டைக்கடலையைப் பயன்படுத்தும்போது இதனை 6-8 மணிநேரம் ஊறவைத்து பின் பயன்படுத்த வேண்டும்.
கொண்டலைக்கடலை அவித்தோ, வேறு உணவுப் பொருட்களுடன் சேர்த்தோ பயன்படுத்தப்படுகிறது.
புரதம் கொழிக்கும் கொண்டைக்கடலையை அடிக்கடி உணவில் சேர்த்து நலமான வாழ்வு வாழ்வோம்.