நீருடன் ஓர் உரையாடல் 5 – கொதிநீராவி

அன்று நான் மட்டும் தான் வீட்டில் இருந்தேன். ‘காலை சிற்றுண்டியாக என்ன சமைக்கலாம்?’ என்ற கேள்வி மனதில் எழுந்தது.

நேற்று, அம்மாவும் அப்பாவும், அக்கா வீட்டிற்கு புறப்படும் முன், “பிரிட்ஜில இட்லி மாவு இருக்கு, காலைல தோசை ஊத்திக்கோ” என்று அம்மா கூறியது நினைவிற்கு வந்தது.

உடனே குளிர்சாதன பெட்டியை திறந்தேன். காய்கறிகளும், மூன்று பாத்திரங்களும் மூடிய நிலையில் இருந்தன. முன்னதாக தெரிந்த ஒரு குண்டாவை திறந்து பார்த்தேன். அதில் மாவு இருந்தது. அதை வெளியே எடுத்து வைத்தேன்.

‘தோச ஊத்தனும்னா நேரம் ஆகும். தோச சுடர வரைக்கும் கூடவே நிக்கனும். ஆனா இட்லிக்கு அப்படியில்ல. மாவ அடுக்குல ஊத்தி குண்டானுல வச்சிட்டா போதும். இட்லி வெந்து முடியரதுக்குள்ள நம்ம வேலைகளையும் கொஞ்சம் பார்த்துக்கலாம்’ என்று தோன்றியது.

“சரி, இட்லியே ஊத்திடுவோம்” என்று எனக்கு நானே கூறிக் கொண்டேன்.

இட்லி குண்டாவை தேடினேன். சுமார் பத்து நிமிடங்களுக்கு பின்னர், அதை கண்டுபிடித்தேன். சமையலறை மேடையின் கீழே தான் இட்லி குண்டா இருந்தது. ‘ச்சே இங்க பார்க்காம இவ்வளவு நேரம் தேடினேனே’ என்று சலித்துக் கொண்டேன்.

பிறகு, எரிவாயு அடுப்பை பற்ற வைத்து, அதில் இட்லி குண்டா வை வைத்தேன். தேவைக்கேற்ப அதில் நீரை ஊற்றினேன். மாவையும் இட்லி தட்டில் ஊற்றி முடித்தேன்.

இட்லி குண்டானில் ஊற்றியிருந்த நீரின் வெப்பநிலை 100 டிகிரி செல்சியஸை அடைந்திருக்கும். அதனால் தான் திரவ நீர் நன்றாக கொதித்து கொதிநீராவி உண்டாகியது.

மாவு ஊற்றியிருந்த இட்லி தட்டுகளை குண்டாவில் வைத்து மூடிவிட்டு எனது வேலையை தொடர்ந்தேன். ‘நீராவியின் பயன்கள்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை தயார் செய்துக் கொண்டிருந்தேன்.

அரை மணிநேரம் சென்றிருக்கும் என்று நினைக்கிறேன். இட்லி நியாபகத்திற்கு வரவே, சமையலறையை நோக்கி விரைந்து சென்றேன். இட்லி குண்டாவில் ஒரு ஓரத்திலிருந்து வெண்ணிறத்தில் கொதிநீராவி பீறிட்டு வெளியே வந்து கொண்டிருந்தது.

உன்மையில் கொதிநீராவி என்பது கண்ணுக்குத் தெரியாத வாயு நிலை நீர் தான். எனினும் கொதிநீராவி வெண்ணிறமாக தோன்றுவதற்கு காரணம், கலனில் இருந்து வெளிவரும் கொதிநீராவி சூழ்நிலையில் குளிர்ச்சி அடைந்து திரவ நிலைக்கு மாற்றமடைவதே.

அதாவது, சிறு சிறு திரவ நீர்துளிகள் காற்றில் உருவாகி வெண்ணிறமாக காட்சி தருகின்றன.

அப்பொழுது, ‘கொதிக்க வைத்த ஒவ்வொரு லிட்டர் நீரும் 1600 லிட்டர் கொதிநீராவியாக விரிவடையும்’ என்று எங்கோ படித்தது நினைவிற்கு வந்தது.

எனது கவனம் இட்லி குண்டாவில் திரும்பியது. துணியைக் கொண்டு குண்டாவின் மூடியை திறந்தேன். கொதிநீராவி அதிகமாக வெளியேறியது. மேலிருந்த இட்லி தட்டை எடுத்தேன். அக்கணம் சட்டென கொதிநீராவி எனது வலக்கை கட்டை விரலை சுட்டுவிட்டது.

வலி தாங்க முடியவில்லை. இட்லி தட்டை அப்படியே விட்டுவிட்டு வலக்கை உதறிக் கொண்டு பார்த்தேன். கட்டை விரலில் எரிச்சல் அதிகமாக இருந்தது.

“என்னாச்சு சார்? என்னாச்சு?” என்று பதற்றத்துடன் குரல் ஒலி கேட்டது.

நான், இட்லி குண்டாவை பார்த்தபடியே, அருகில் இருந்த குழாயை திறந்தேன். அதில் வழிந்த நீரில் கட்டை விரலைக் காட்டினேன். ஓரளவிற்கு எரிச்சல் தணிந்தது.

“இப்ப பரவாயில்லையாங்க?” என்று கேட்டது நீர்.

நிதானம் அடைந்தேன். “இம். எரிச்சல் கொஞ்சம் கம்மியாயிருக்கு.”

“கவனமா இருந்திருக்கலாமே”

“ஆமாம், ஆனா நீ தான் என்னோட விரல சுட்டுடியே, நல்லா எரியுது” என்றேன்.

“எரியுதா? ஆனா, நெருப்போ தெரியலையே.” என்று சிரிப்புடன் கூறியது நீர்.

“என்ன கிண்டலா? உன்னால தான் எனக்கு காயம் ஏற்பட்டிருக்கு. இதுல உனக்கு சிரிப்பு வேற?”

“கோவிச்சிக்காதீங்க சார், சும்மா தான் சொன்னேன், சரி மருந்து இருந்தா போட்டுக்கோங்க”

“ஒன்னும் பெரிய காயம் இல்ல, அதோட நீ என்ன பண்ணுவ? கொதிநீராவியா இருக்கும் போது உன்னோட ஆற்றல் தான் அதிகமாச்சே.”

“ஆமா..ம் சார்” என்றது நீர்.

“உம்ம், அறிவியல் விளக்கப்படி, கொதிக்கிற நீரவிட, நீ கொதிநீராவியா இருக்கறப்ப உன்னோட ஆவியாதலின் உள்ளுறை வெப்பம் ரொம்ப அதிகம். ஆங்கிலத்துல latent heat of vaporization அப்படீன்னு சொல்லுவாங்க. அதனால தான், கொதிநீராவி தோலில் விழுந்தவுடனே, அதிக வெப்பத்தை தருது. இதனால, தீக்காயமும் மிகவும் கடுமையா இருக்கு.”

“இவ்வளவு விளக்கம் சொல்றீங்க. ஆனா கைவிரல்ல காயம் பட்டுகிட்டீங்களே.”

“ஆமாம்.. ஆமாம்.. இனி கவனமா இருப்பேன்.”

“சார், என்னால உங்க கைவிரல்ல காயம் பட்டாலும், இட்லி சமைக்க நான் தானே உதவி பண்ணியிருக்கேன்.”

“சரி தான். உன்னோட உதவியாலத்தான் நான் இட்லியும் சமைச்சிருக்கேன். அதுக்கு உனக்கு நன்றி”

“இருக்கட்டும் சார். விரல்ல இருந்த எரிச்சலும் திரவ நீரால தானே குறைஞ்சிருக்கு.”

“ஆமா, ஆமா.”

“ஆக மொத்தத்துல என்னால உங்களுக்கு நன்மைகள் தான் அதிகமா இருக்கு. இல்லையா?”

“உண்மை தான். இதுமட்டுமில்ல, கொதிநீராவியா நீ, பல வகைகளிலும் மனிதர்களுக்கு பயன் தர.”

“அப்படியா! என்ன பயன்கள் சொல்லுங்களேன்.”

“உம்.. இந்த மின் உலகத்துல, அடிப்படை தேவையான மின்சாரமே உன்னோட உதவியால தான் தயாரிக்க முடியுது. அது மட்டுமில்லாம, கிருமிநாசினியாகவும், ஈரப்பதத்தை சரியான அளவுல காப்பதற்கும், நீ பயன்படுற. அத்தோட சில பொருட்கள உலர்த்தவும் நீ பயன்படுற”

“நல்லது சார்.”

“ஊம்ம்… ஆனா உன்ன உருவாக்கனும்னா, நாங்க அதிக அளவு வெப்ப ஆற்றல தரவேண்டியிருக்கு.”

“சரி தாங்க, ஆன நான் இயற்கை செயல்முறையிலேயும் உற்பத்தியாகிறேனே”

ஆச்சரியத்துடன், “அப்படியா…. நீ எங்க உற்பத்தியாகிற?” என்றேன்.

“சார், எரிமலை செயல்பட தொடங்கும் போது கொதிநீராவியா நான் வருவேனே. அது மட்டுமா? பூமியில சில இடங்கள்ள வெண்ணீரூற்றுகள் மூலமும் நான் வெளிப்படுகிறேன்” என்றது நீர்.

“சிறப்பு தான்” என்றேன்.

அப்பொழுது எனக்கு பசி அதிகரித்திருந்தது. இட்லிக்கு தொட்டுக்க நேற்று சமைத்த சாம்பார் இருக்கும் குண்டாவை என் கண்கள் தேடின.

“சார்,என்ன தேடுறீங்க?” என்று கேட்டது நீர்.

“சாம்பார் இருக்கு. சூடு பண்ணிக்கோன்னு அம்மா சொன்னாங்க. அதான் எங்க இருக்குன்னு தேடுறேன்?” என்றேன்.

“சார், பிரிட்ஜில இருக்கான்ணு பாருங்க”.

உடனே, சென்று பிரிட்ஜில் பார்த்தேன். அதில் ஒரு சிறிய பாத்திரத்தில் சாம்பார் இருந்தது. எடுத்துச் சென்று அடுப்பில் வைத்தேன்.

“சரிங்க சார். நீங்க பசியா இருக்கீங்க போல. நாம அப்புறம் சந்திப்போம்” என்று கூறி சென்றது நீர்.

அதன் பின், சாம்பாரை சூடு செய்து கொண்டு, தட்டில் சில இட்லிகளை எடுத்துக் கொண்டு தரையில் அமர்ந்தேன். காலை உணவு உண்பதற்காக.

(உரையாடல் தொடரும்)

கனிமவாசன்
சென்னை
கைபேசி: 9941091461
மின்னஞ்சல்: drsureshwritings@gmail.com

இதைப் படித்து விட்டீர்களா?

நீருடன் ஓர் உரையாடல் 4 – ஈரப்பதம்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.