கொத்தமல்லி துவையல் சுவையான, ஆரோக்கியமான உணவு வகை ஆகும். தோடர்ந்து கொத்தமல்லி இலையை உண்பதால் இதய நோய்கள் வராமல் தடுக்கலாம்.
பித்த காய்ச்சல் மற்றும் பித்த மயக்கத்திற்கும் கொத்தமல்லி இலையை மருந்துப் பொருளாக உபயோகப்படுத்தலாம்.
பல்வலி ஈறுவீக்கம், வாய்துர்நாற்றம் ஆகியவை நீங்க கொத்தமல்லி இலையை வாயில் போட்டு மெல்லலாம்.
இனி கொத்தமல்லி துவையல் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கொத்தமல்லி இலை – இரண்டு கைபிடி (சுத்தம் செய்தது)
வெள்ளைப் பூண்டு – 2 பற்கள் (பெரியது)
புளி – சிறிய எலுமிச்சை அளவு
பச்சை மிளகாய் – 1 எண்ணம் (பெரியது)
உப்பு – தேவையான அளவு
தாளிக்க
நல்ல எண்ணெய் – 3 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு – 3 ஸ்பூன்
கடுகு – 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை – 5 கீற்று
செய்முறை
முதலில் கொத்தமல்லி இலையை தண்ணீரில் அலசி வடிதட்டில் போட்டு வடித்துக் கொள்ளவும்.
வெள்ளைப் பூண்டினை தோல் உரித்து சுத்தம் செய்து கொள்ளவும்.
பச்சை மிளகாயை காம்பு நீக்கி அலசி வைத்துக் கொள்ளவும்.
கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.
வாணலியில் நல்ல எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் உளுந்தம் பருப்பு, கடுகு, அலசி உருவிய கறிவேப்பிலை சேர்த்து தாளிதம் செய்யவும்.
பின்னர் அதனுடன் வெள்ளைப் பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்துக் கிளறவும்.
ஒரு நிமிடம் கழித்து அலசி வடித்த மல்லி இலையை சேர்த்து ஒரு சேரக் கிளறி அதனுடன் புளியைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
மல்லி இலை நன்கு வதங்கியதும் அடுப்பில் இருந்து கலவையை இறக்கி ஆற விடவும்.
பின்னர் மிக்ஸியில் ஆறிய கலவையுடன் தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
சுவையான கொத்தமல்லி துவையல் தயார்.
இதனை எலுமிச்சை சாதம், புளியோதரை உள்ளிட்ட கலவை சாதம் வகைகள், மோர் சாதம், ரசம் சாதம் உண்ண பொருத்தமாக இருக்கும்.
குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் பச்சை மிளகாய்க்குப் பதில் மிளகாய் வற்றல் சேர்த்தும் துவையல் தயார் செய்யலாம்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!