கொத்தமல்லி புலாவ் என்பது அருமையான கலவை சாத வகைகளுள் ஒன்று ஆகும். இதனை வீட்டில் எளிய முறையில் செய்து அசத்தலாம்.
சுவையான கொத்தமல்லி புலாவ் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
சீரக சம்பா அரிசி – 250 கிராம் (1 பங்கு)
கொத்தமல்லி இலை கட்டு – 1கட்டு
பெரிய வெங்காயம் – 1 எண்ணம் (நடுத்தரமானது)
தக்காளி – 1 எண்ணம் (பெரியது)
பச்சை மிளகாய் – 3 எண்ணம்
இஞ்சி – பாதி சுண்டுவிரல் அளவு
வெள்ளைப் பூண்டு – 3 எண்ணம் (நடுத்தர அளவு)
தேங்காய் – ½ மூடி
முந்திரிப் பருப்பு – 10 எண்ணம்
நல்ல எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் (தேங்காய் பாலுடன் சேர்த்து) – 2 பங்கு
மஞ்சள் பொடி – 1 டீஸ்பூன்
நெய் – 4 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி விதை – 1 டேபிள் ஸ்பூன்
தாளிக்க
பெருஞ்சீரகம் – 1 டீஸ்பூன்
பட்டை – சுண்டு விரல் அளவு
ஏலக்காய் – 2 எண்ணம்
கிராம்பு – 5 எண்ணம்
நட்சத்திரப் பூ – 1 எண்ணம்
கடல்பாசி – சிறிதளவு
கொத்தமல்லி புலாவ் செய்முறை
சீரக சம்பா அரிசியை ½ மணி நேரம் ஊற வைக்கவும்.
தேங்காயைத் துருவி பால் எடுத்துக் கொள்ளவும்.
கொத்தமல்லி இலையை சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும்.
பச்சை மிளகாயை அலசி காம்பு நீக்கிக் கொள்ளவும்.
தக்காளியை அலசி நறுக்கிக் கொள்ளவும்.
பெரிய வெங்காயத்தை சுத்தம் செய்து நேராக வெட்டிக் கொள்ளவும்.
கொத்தமல்லி இலை, கொத்தமல்லி விதை, நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, வெள்ளைப்பூண்டு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு விழுதாக்கிக் கொள்ளவும்.
குக்கரில் நல்ல எண்ணெய் ஊற்றி தாளிக்கும் பொருட்களைச் சேர்த்து தாளிதம் செய்யவும்.
பின்னர் நறுக்கிய பெரிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பாதி வதங்கியதும் முந்திரிப் பருப்பு சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அரைத்த விழுதினைச் சேர்த்து வதக்கவும்.
கலவையிலிருந்து எண்ணெய் பிரிந்ததும் 2 பங்கு தேங்காய்பால் தண்ணீரைச் (தேங்காய்பால் மற்றும் தண்ணீரை 2 பங்கு இருக்குமாறு எடுத்துக் கொள்ளவும்.) சேர்த்து மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
கலவை கொதித்ததும் அதனுடன் ஊற வைத்த சீரக சம்பா அரிசியைச் சேர்த்துக் கிளறி குக்கரை மூடி விசில் போட்டு ஒரு விசில் வந்ததும் சிம்மில் இரு நிமிடங்கள் வைத்து இறக்கி விடவும்.
குக்கரின் ஆவி அடங்கியதும் திறந்து நெய் சேர்த்து ஒரு சேரக் கிளறவும்.
சுவையான கொத்தமல்லி புலாவ் தயார்.
இதனுடன் பேபி கார்ன் மசாலா சேர்த்து உண்ணலாம்.
குறிப்பு
சீரகசம்பா அரிசியை முதலில் களைந்துவிட்டு பின்னர் 2 பங்கு தண்ணீருக்கு தேவையான அளவு அதாவது தேங்காய்ப்பால் போக மீதமுள்ள அளவு தண்ணீரில் அரிசியை ஊற வைக்கவும்.
அரிசியை ஊற வைத்த தண்ணீரைப் பயன்படுத்தி புலாவ் தயார் செய்யவும். இதனால் அரிசியில் உள்ள ஊட்டச்சத்துகள் வீணாவது தடுக்கப்படும்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!