கொத்தவரை

கொத்தவரை விதையில் இருந்து கிடைக்கும் ஒருவகை கோந்துப் பொருளினால் காய்கறிப் பயிர் என்ற நிலையிலிருந்து வணிகப் பயிர் என்ற அந்தஸ்தைப் பெற்றுவிட்டது.

கொத்தவரை என்பது கொத்தாக காய்கள் உள்ள ஓரளவு வறட்சியைத் தாங்கி வளரும் செடியாகும். இது சுமார் 2 – 3 மீட்டர் உயரம் வளரும். பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் பயிர் செய்யப்படுகிறது. ஆண்டு முழுவதும் இந்த பயிர் சாகுபடி செய்யப்படுகிறது.

இந்தியா மற்றும் இந்தோனேசியா ஆகியவை இதன் தாயகம் ஆகும். இன்று இதன் ஏற்றுமதி வணிக முக்கியதுவத்தால் பல தொழில் வள நாடுகளையும் தன்பால் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதன் விதையைப் பொடியாக்கி தண்ணீரில் கலந்தால் ஒரு வகை கோந்து உருவாகிறது. கேலக்டோமேனன் என்ற பொருள்தான் இதன் கோந்து தன்மைக்கு காரணம் ஆகும்.

இந்த கோந்து மருந்துப் பொருட்கள், பேப்பர், டெக்ஸ்டைல்ஸ், டூத்பேஸ்ட், ஐஸ்கிரீம், பீஸ்சா, லிப்ஸ்டிக் போன்ற பல பொருட்கள் தயாரிப்பிலும் பயன்படுகிறது.

வெப்பமண்டலக் காடுகளில் இப்பயிர் நன்றாக வளரும். இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா நாடுகளில் அதிகம் பயிராகிறது. உலகின் மொத்த கொத்தவரை ஜெல் தேவையில் 80% இந்தியாவில் இருந்து தான் ஏற்றுமதி ஆகிறது.

இந்தியாவில் பஞ்சாப், ராஜஸ்தான், ஆந்திரா, மகாராஷ்ரா ஆகிய மாநிலங்கிளல் கொத்தவரை வணிகரீதியாக அதிகம் பயிர் செய்யப்படுகிறது.

கொத்தவரை விதை மாவு துணிகளுக்கு மிருதுத்தன்மையும், பளபளப்பையும் கொடுக்கிறது. எனவே, இது ஜவுளி உற்பத்தியில் முக்கியப் பங்குவகிக்கிறது.

கொத்தவரை திரவ மருந்துகளை கெட்டியான டானிக்காகவும் சிரப்பாகவும் மாற்றுவதற்கும், தூள்வடிவ மருந்துகளை மாத்திரைகளாகச் செய்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

பெண்களுக்கான லிப்ஸ்டிக், முகப்பூச்சு கிரீம் தயாரிப்பிலும் இந்த கொத்தவரைப் பிசின் தற்போது பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. இயற்கையான பொருள் என்பதால் அலர்ஜி போன்ற தொந்தரவுகள் இல்லை.

கொத்தவரை விதையில் 75% முழுமையான தண்ணீரில் கரையக்கூடிய நார்சத்து நிரம்பியுள்ளது இதன் சிறப்பம்சம் ஆகும். இதனை உண்ணும் போது வயிறு நிரம்பிய உணர்வு விரைவில் வந்துவிடுவதால் அதிகமாக உண்ணமுடியாது.

மேலும் உண்ட உணவு சீரண‌மாவதை இது தாமதப்படுத்துவதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு திடீரென உயராமல் சீராக இருக்கவும் உதவுகிறது. எனவே இது நீரழிவு நோய் உள்ளவர்களுக்கு அருமருந்தாகும்.

உணவுப் பாதையில் கொலஸ்ட்ரால் கிரகிப்பும் குறைவதால் இதயத்தின் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படுகிறது. மேலும் நூறு கிராம் பச்சை கொத்தவரையில் 49 மி.கி. வைட்டமின் ‘சி’யும், 1.08 கிராம் இரும்புச் சத்தும், கால்சியம் 1.30 மி.கிராமும், பாஸ்பரஸ் 57 மி.கிராமும் நிறைந்துள்ளன.

பயறு வகைப் பயிர் என்பதால் புரதச் சத்து மிகுந்துள்ளது. கார்போஹைட்ரேட்டும், கொழுப்பும் மிகக் குறைவாகவே உள்ளது. சிறந்த‌ மலமிலக்கியாக செயல்பட்டு குடல் நோய்கள் வராமல் தடுக்கிறது.

காகிதத் தொழிற்சாலைகளில் பேப்பர் கூழுடன் கொத்தவரை ஜெல்லைக் கலந்து பேப்பருக்கு பிரிண்டிங் செய்வதற்கு ஏற்றவாறு அடர்த்தியான மேற்பரப்பை உருவாக்குகிறார்கள்.

மண்ணிலிருந்து வெட்டப்படும் தாதுக்களைப் பிரித்தெடுக்கவும், வெடிமருந்து தொழிற்சாலைகளிலும் கொத்தவரை பயன்படுகிறது.

காய்கறிப்பயிராகவும், தீவனப் பயிராகவும். பசுந்தாளுரப் பயிராகவும் பயன்படுவதோடு, இத்தாவரத்தின் வேர் முடிச்சுகளில் வாழும் ரைசோபியம் என்னும் பாக்டீரியவானது காற்றில் உள்ள நைட்ரஜனைக் கவர்ந்து மண்ணை வளப்படுத்துகின்றது.

கொத்தவரையை காய்கறியாக விற்பதைவிட முற்றவிட்டு விதைகளை பிரித்தெடுத்து விற்பது இலாபகரமானதாக உள்ளது. உணவு பதப்படுத்தும் தொழிலிலும், சாஸ், கெட்சப் தயாரிப்பிலும் கொத்தவரை விதை பயன்படுத்தப்படுகிறது.

கொத்தவரைச் செடியைப் பயிர்செய்ய தண்ணீர் தேங்காத மணல் கலந்த தோட்டமண் ஏற்றது. உவர் நீர், உவர் மண்ணிலும் வளர்வது இதனுடைய சிறப்பாகும். வெப்பமான காலநிலையில் இதிலிருந்து அதிக மகசூலைப் பெறலாம். பிப்ரவரி முதல் ஜுலை வரை விதைப்புக்குரிய‌ பருவம் ஆகும்.

ஒன்றை அடி இடைவெளியில் பயிர்கள் அமைத்து அரை அடி இடைவெளியில் விதைகளை ஊன்றலாம். ஒரு ஏக்கரில் பயிர் செய்ய நான்கு கிலோ விதைகள் போதுமானது. இதற்கு வாரம் ஒருமுறை தண்ணீர் விட்டால் போதும்.

விவசாயிகள் குறைந்த தண்ணீர், அதிக பணப்பயன் தரும் கொத்தவரையை வளர்த்துப் பயன்பெறலாம்.