கொரோனாவுடன் ஒரு எதிர் பாட்டு

காலை எழுந்தவுடன் படிப்பு, பின்பு

கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு

எல்லாத்துக்கும் கொரோனா வச்சது வேட்டு!

 

ஆம்

அஞ்சு மணி அலாரம் அவசரமா அடிக்குது

விழித்தவுடன் நெனெப்பெல்லாம் கொரோனாவே நெரப்புது

கண் சிவந்து எழுந்தவுடன்

சூரியனும் மெல்ல மெல்ல எழும்புது

சுறுசுறுப்பாய் உலகை சிவந்த விழியால் பார்க்குது

பல்துலக்கி முகம் கழுவி தோட்டம் நோக்கிப் போகிறேன்!

 

வண்ண வண்ணப் பறவைகள்

கானம்பாடி வானில் பறக்கும் மாயங்கள்

மைனாக்களின் கீதங்கள் வண்டுகளின் ரீங்காரம்

மஞ்சளும் சிவப்புமாய் பூக்களின் பூரிப்பு

பட்டாம் பூச்சிகளின் ஓயாத சிறகடிப்பு

உலைவிலா தேனீக்களின் சுறுசுறுப்பு

கவலையில்லா உல்லாச ஊர்வலங்கள்!

ஓ, என் நெஞ்சமெல்லாம் நிறைந்துவிட்ட கிளுகிளுப்பு

சட்டென நுழைந்தது கொரோனாவின் நினைப்பு

கொரோனா பற்றித் தெரியா

அனைத்துயிர்க்கும் புதிய விடியலே!

 

கொரோனாவே!

மனிதனைச் சாய்க்க விலங்கிலிருந்து வந்தாயா?

இல்லை விலங்கென‌ எண்ணி தவறுதலாய் நுழைந்தாயா?

இரண்டுமே உண்மைதானோ!

 

கொரோனாவின் நையாண்டி

மானுடம் மறந்தாய் மனிதா

மனிதம் துறந்தாய் மனிதா

தாயையும் மறந்தாய் மனிதா

பூமித்தாயையும் மறந்தாய் சரியா?

 

மனிதனின் கவலை?

கொரோனாவே, நீ பிறந்த காலை

உன் வகை அறிந்து தற்செய்ய அறியோம்

அதனால் நீ செருக்குடன் பிறழ்ந்தாயோ தெரியோம்

உன்னால் மனிதன் நொந்தது அறிவாயோ?

நாங்கள் இளைதாக முள்மரம் கொல்வோம்

நீ காழ்த்த இடத்து களையுநர் கொல்வாய் அறிவோம்!

நாங்கள் அறிவு ஜீவிகள் தெரியாயோ

உன்னை முழுதும் அறிந்தோம் சரியாக

வெல்வோம் உனையே முழுதாக!

 

கொரோனாவின் எதிர் பாட்டு

வெல்வாய் எமையென அறிவேன் நான்

பின், ஏன் நான் பிறந்தேன் தெரிவாயோ!

தாயை மதித்தவன் வீழ்ந்ததுமில்லை

தாயை மிதித்தவன் வாழ்ந்ததுமில்லை

அம், பூமித்தாயை மிதித்தவனும் அப்படித்தானே!

 

பூமித்தாய் முகம் சுளித்தாள்

நீ பார்க்கவேயில்லை

மெல்லிய குரலில் முனகினாள்

நீ கேட்கவும் மறுத்தாய்

உன்னுடன் பேச முனைந்தாள்

நீ செவி மடுக்கவும் மறந்தாய்

அன்பு அரவணைப்பு எல்லாமே

தருவதற்கு மிகவும் முனைந்தாள்

உன் புறக்கணிப்பு எல்லையில்லாமல் போனதேன்?

நீ சிந்திக்கத் தெரிந்தவன் என்கிறார்கள்

ஏன் இது நாள்வரை சிந்திக்கவேயில்லை?

உன்னைச் சிந்திக்க வைக்கவே

நான் புதிதாய்ப் பிறந்தேன்!

 

வெள்ளமாய் வந்தேன் கவனிக்க மறுத்தாய்

நெருப்பாய் கனன்றேன் கனிவை மறந்தாய்

காற்றாய்ச் சுழன்றேன் கற்சிலையாய் நின்றாய்

பற்பல வேடங்கள் பார்த்துப் பயந்தாய்!

ஆனால்

பயன் செய மறுத்தாய் சடுதியில் மறந்தாய்!

 

உன் நச்சுக் கரங்கள் தொடாத இடமில்லை

கடல் வாழ் உயிரிகள் உன்னால் உயிரைப் போக்கின

பனிப்பாறையும் உன்னால் மனம் நொந்து கரையும்

கடல் நீரைக் குடி நீராக்குவேன் என்றாய்

ஆனால் மழை நீரையும் வீணடித்தாய்

பூமித்தாய்க் கெதிராய் நீ தொடுக்கும் வினைகள்

ஏராளம் தாராளம்!

 

புரிகிறதா நான் ஏன் புதிதாய்ப் பிறந்தேனென்று?

வீட்டுக்கு வீடு நாட்டுக்கு நாடு ஓய்விலாப் புகைச்சல்

மதம் என்றாய் மதம் கொண்டாய்

கற்பனைக் கெட்டா கொடுங்குணம் கொண்டாய்

மல்லாந்து படுத்து வெறுப்பை உமிழ்ந்தாய்

உன்னைச் சுற்றியுள்ள உயிர்களையெல்லாம்

இரக்கமின்றி கொய்தாய்!

காடுகளைக் கணக்கில்லாமல் களவாண்டாய்,

மனிதனே மனிதனை மறந்தான்

மானுடம் துறந்தான்

சுய நலத்தையே உன் ‘ஜீன்’கள் சீரணித்தன

நீ அதனால் உரு மாறிவிட்டாய்!

 

முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டுமென்பாயே

அதனால்தான் நான் ‘ஜீன்’ மாற்றிப் புதிதாய்ப் பிறந்தேன்!

சீனத்தில் பிறந்தேன் தானத்தால் வளர்ந்தேன்

உன்னைத் தண்டிக்க அல்ல கண்டிக்கவே பிறந்தேன்!

தாயின் பெருமை பேசு பூமித்தாயின் பெருமை பேசு

அவளின் புனிதம் காத்துச் சிறுமை போக்கு!

‘பூமி இழந்திடேல்’ என்றான் பாரதி

அவன் சொல் துறந்தாய்

சொல்லின் பொருளையும் மறந்தாய்

காடுகளே உன் நலன் காக்கும்

விலங்குகளே உணவுச் சங்கிலியின் உயிர் நாடி

சங்கிலிக் கருப்பன் உன் குலதெய்வம்

சங்கிலியறுப்பது குலத் தொழிலா?

நீ காட்டினில் சேட்டை செய்தால்

நான் உன் நாட்டினுள் வேட்டை செய்வேன்

ஆறறிவு அறிவுஜீவியே

சுற்றுச்சூழலின் சூட்சமம் அறியாயோ

சூழலைப் பேணு சுற்றுச் சூழலைப் பேணு

மனிதனாய் மாறு மனிதமே பேணு

நான் ஓரமாய் அமர்ந்து உன் அழகினை ரசிப்பேன்

இல்லையேல் உன்னையே புசிப்பேன்!

கொரோனாவிடம் மன்னிப்பு கோரும் மனிதன்

ஏழாம் அறிவும் எட்டியே பார்த்தது

முன்னம் தீண்டாமை தீதென்றார் பற்பல பெரியார்

இன்னம் தீண்டாமை நன்றென்றார் அறிஞர்

உன்னால் தீண்டாமை தழைத்தது என்பேனோ?

தீண்டாய் மெய் தீண்டாய் கொரோனாவைத் தீண்டாய்

என்று பொருள் கொண்டோம்

மனிதனாய் மாறுவோம்

எமை நம்பு

தாயைப் பேணுவோம்

பூமி இழந்திடோம்

நீயிலா சுதந்திரக் காற்றை இனி பயமின்றி நுகர்வோம்!

நன்றி மறப்பது நன்றன்று!

நன்றி சொல்வோம் நாம் உனக்கு

வாழ்வோம் நலமுடன் வளமுடன்!

த.மாரிமுத்து
மன்னார்குடி

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.