கொரோனா நோயும் கொல்லும் பார்வையும் கழுத்தை நெறிக்கக் கதறும் மக்கள் பற்றியே இதில் பேசப் போகிறேன்.
2019ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவின் வூகான் மாகாணத்தில் தோன்றிய கொரோனா, தற்போது உலக நாடுகள் அனைத்தையும் உலுக்கி கொண்டிருக்கின்றது. அது இந்தியாவையும் அதன் பொருளாதாரத்தையும் விட்டு வைக்கவில்லை.
இந்நேரத்தில் மக்கள் கொரோனா நோயினை கண்டு பயப்படுகிறார்கள். மற்றவர்களிடம் இருந்து நோய் நமக்குத் நோய் தொற்றிவிடுமோ என்று அஞ்சி நடுங்குகிறார்கள்.
அச்சத்தால் ஒரு மனிதன் சக மனிதனை விலக்குகிறான்.
அதாவது தமிழ்நாட்டில் சென்னை போன்ற பெருநகரங்களில் பணிபுரிந்து, கொரோனா காலத்தில் வேலைகளை இழந்து, சொந்த ஊர்களுக்கு வீடு திரும்பிய சிலர் மீது ஊரில் உள்ள அக்கம் பக்கத்தினரின் பார்வை வேறுபடுகிறது.
இந்நிகழ்வு அவர்களைவிட, அவர்களின் வீட்டின் அருகே ஏதும் அறியாமல் உள்ளவர்களைப் பெரிதும் பாதிக்கிறது.
அயலூரில் இருந்து வந்தவரை தனிமைப்படுத்துதல் அல்லது பரிசோதனை செய்ய அழைத்து செல்லுதல் ஆகியவற்றின் போது, கொரோனா பாதிப்பு இல்லாத வீட்டினரையும் சேர்த்து கொரோனா தெரு என தள்ளி வைக்கின்றனர்.
கொரோனாவை விட, மக்களின் இந்த பார்வை சக மனிதனை கொல்லாமல் கொன்றுவிடுகிறது.
உணர்ந்து செயல்படுங்கள்
இதற்கு ஓர் உதாரணம். உண்மையும் கூட…
திருவண்ணாமலையில் ஒரு பிரபலமான கடையில் பணிபுரிந்த ஒருவர், சென்ற வாரம் பணிபுரிந்த இடத்தில் சக நண்பர்களுக்கு கொரோனா தாக்கிவிட, சொந்த ஊர் வந்தார்.
அப்போது அந்த நபர்க்கு காய்ச்சல் வரவே, அருகில் உள்ளோரிடம் எந்த பழக்கமும் தொடர்பும் இல்லாமல் இருந்தார்.
உடனே அரசு அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு பரிசோதனைக்கு சென்றார்.
அப்போது அருகே ஏதுமறியா ஓர் சிறு குடும்பம் எப்போதும் போல தனது வியாபார வேலையை செய்து கொண்டிருக்க, காவல்துறையினரோ அத்தெருவை மூடினர்.
உடனே வெளியூர் நபரிடம் சிறிதும் நேர்முகமாவோ, மறைமுகமாவோ தொடர்பில்லாத அத்தெருவை சார்ந்தோர் அவர்களின் வயல்களில் தங்கினர்.
சிறு வியாபார குடும்பம் தனது குழந்தையுடன் வயலில் தங்க நேரிட்டது. அவர்களின் உறவினர்கள் கூட அவர்களிடம் பேச மறுத்தனர்.
கொரோனாவை விட, மற்றவர்களின் அச்ச பார்வை சிறு குடும்பத்தினரை கழுத்தை நெறிக்க, அவர்களின் அன்றாட வாழ்க்கையும் வியாபாரமும் பாதித்தது.
சிறுகுடும்பத்தின் தாய் குழந்தையுடன் தாய்வீட்டுக்கு செல்ல, அங்கே சில உறவுகள் “உன்னுடைய கணவனைத்தான் கொரோனா தாக்கியதால் அழைத்து சென்றுள்ளனர். நீ ஏன் இங்கே வந்தாய்?” என கேட்டனர்.
இதனைக் கேட்டதும் அவள் கண்களின் ஓரம் கண்ணீர்த் துளி விழத் தொடங்கியது. மனம் நொறுங்கியது. தாய்வீட்டினரும் சங்கடப்பட நேர்ந்தது.
இதில் கொரோனா தாக்குதலா என்ற ஐயத்தால் வெளியூர்காரர் அரசு அதிகாரியை தொடர்புகொள்ள, உறவினரோ சிறுகுடும்பத்தைதான் கொரோனா தாக்கியது என புரளியை கிளப்பினர்.
வியாபாரத்துக்கு சென்றாலோ கொரோனாக்காரன் பொண்டாட்டி என்று இந்த சமூகம் அவளின் பொருளாதாரத்திலும், மன உறுதியிலும் மண்ணை அள்ளிப் போட்டது.
இதில் வேடிக்கை என்ன என்றால் கொரோனா என சென்ற வெளியூர்காரர் அவரின் வீடு திரும்ப, அவள் மட்டும் இன்னும் வீடு திரும்ப இயலவில்லை.
ஏனென்றால் குழந்தையின் மீதான பாசம், கொரோனாவை விட அதன் அச்ச பார்வை ஒரு குடும்பத்தை சிதறடித்திருக்கிறது.
உணர்ந்து செயல்படுங்கள் மக்களே!
அவர்களும் மனித இனமே…
கொரோனா நோயும் கொல்லும் பார்வையும் கழுத்தை நெறிக்க கதறும் மக்கள்….
நோயை விட, அதன் அச்ச பார்வையின் விளைவுகளை உணர்ந்து கொள்ளுங்கள் எம் உறவுகளே!.
அவர்களும் நம் உறவுகள்தானே!
இதற்கு தீர்வு நம்மிடமே உள்ளது.
கொரோனா மீதான அச்சப் பார்வையும், அதன் விளைவுகளும், கொரோனா நோயை விடக் கொடியவை.
அச்சத்தோடு செயல்பட வேண்டாம்; அறிவியல் அடிப்படையில் செயல்படுவோம்.
சமூக பார்வை வேண்டும் என்றும் நம் மனதில்.
சதிஷ்ணா
மருந்தியல் பட்டதாரி
8438574188
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!