கொரோனா நோய் தடுப்பில் சிறிய நம்பிக்கை என்ற இக்கட்டுரை, கும்மிருட்டில் மின்னல் ஒளியென நமக்கு நம்பிக்கையை உண்டாக்குகிறது.
உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஒரு கோடியைத் தாண்டியுள்ளது.
இக்கொள்ளை நோய் பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் பல லட்சங்களைக் கடந்துள்ளது.
சீனாவில் கடந்த ஆண்டின் இறுதியில் பரவத் தொடங்கிய இந்தப் பெரும் கொள்ளை நோயானது, இன்று உலகம் முழுவதும் பரவிவிட்டது.
அனைத்து நாடுகளும் இந்த கொரோனா நுண்கிருமியை எதிர்த்துப் போராடுவதற்கு தடுப்பு மருந்துகள் மற்றும் நோய் எதிர்ப்பு மருந்துகளை கண்டுபிடிப்பதில் முனைப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
கொரோனா சிகிச்சைக்காக உலகம் முழுவதும் பல மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.
நோய் தொற்றுக்கான மிகச்சிறந்த மருந்து கண்டுபிடிப்பதற்காக, உலக சுகாதார அமைப்பு ஒருங்கிணைந்த ஆய்வுத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இந்த நோய்க்கான மருந்து கண்டுபிடிப்பதற்காக பிரிட்டன், ஸ்பெயின் மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா நோயாளிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
உலகில் உள்ள ஏராளமான ஆய்வுக்கூடங்கள், இந்நோய் தொற்றினால் இறந்தவர்களின் இரத்தத்தை கொண்டு மருந்தினைக் கண்டறியும் முயற்சியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளன.
இதுவரையான மருந்துகள்
இதுவரை வேறு நோய்களைக் குணமாக்கப் பயன்படுத்தப்பட்ட மருந்துகளில் பல மருந்துகள் மீண்டும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.
மலேரியா நோய்க்கு மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயின், இந்நோயைக் குணப்படுத்தும் என்று முன்பு பரபரப்பாக பேசப்பட்டது.
அதனடிப்படையில் அமெரிக்காவும் இந்தியாவிடமிருந்து பெருமளவிலான இந்த ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துகளை கொள்முதல் செய்தது.
ஆனால் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பலன் மிக்க மருந்தாக இல்லை என்பதே நிதர்சனமானது.
இந்நிலையில் “ரெம்டெசிவிர்” (Remdesivir) என்ற மருந்து நோய் தொற்று சிகிச்சைக்கு பயன்படும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மற்றொரு உயிர்கொல்லி நோயான எபோலாவிற்காக தயாரிக்கப்பட்ட இந்த மருந்தினை பயன்படுத்துவதற்கான ஆய்வுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
புதிய நம்பிக்கை
ஃபாவிபிராவிர் (Favipiravir) என்ற சோதனை மருந்து, லேசான கொரோனா தொற்றிலிருந்து விடுபட சரியான மருந்து என ஆய்வுகளில் தெரிய வருகிறது. இந்த மருந்தை சீனா தனது நாட்டில் பயன்படுத்தியுள்ளது.
ஆனால் இந்த மருந்து நுரையீரல் திசுக்களில் பெரிய அளவில் தனது செயல்பாட்டை வெளிக்காட்டாது என சில ஆய்வுகள் கூறினாலும், லேசான தொற்றுக்கு சற்று மேம்பட்ட பலனை அளிக்கும் என நம்பப்படுகிறது.
இந்தியாவின் நம்பிக்கை
இந்திய மருந்து கட்டுப்பாட்டாளரின் (Drugs Controller General of India) ஒப்புதலுக்குப் பிறகு, க்ளென்மார்க் என்ற மருந்து நிறுவனம் 20-ஜூன்-2020 அன்று, இந்தியாவில் ஃபாவிபிராவிரை (Favipiravir) அறிமுகப்படுத்தியுள்ளது.
லேசான மற்றும் மிதமான கோவிட் 19 தொற்றிற்கான வைரஸ் எதிர்ப்பு மருந்தாக ஃபாவிபிராவிர் பயன்படுத்தப்படும்.
இந்த மருந்து சந்தைக்கு வருமாயின், ஒரு மாத்திரை 103 ரூபாய்க்கு கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.
“இந்தியாவில் கொரானா தொற்று அதிகரித்து வரும் நேரத்தில் இந்த ஒப்புதல் வந்துள்ளது. இது எங்கள் அமைப்புக்கான அங்கீகாரம்” என்று க்ளென்மார்க் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான க்ளென் சல்தான்ஹா தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கீழ்க்கண்ட தகவல்களைத் தெரிவிக்கின்றார்.
“ஃபாவிபிராவிர் வலுவான மருத்துவ ஆதாரங்களால் தயாரிக்கபட்ட மருந்து. இது இந்தியாவில் கொரோனா நோயாளிகளுக்கு மிகவும் தேவையான மற்றும் சரியான நேரத்தில் சிகிச்சையளிக்க உதவும். இது லேசான மற்றும் மிதமான கோவிட் 19 நோயாளிகளுக்கு ஊக்கமளிக்கும் முடிவுகளைக் காட்டுகிறது.
ஃபாவிபிராவிர் 20-90 மற்றும் வயதுக்குட்பட்டவர்களில், குறிப்பிடப்பட்டுள்ள மருத்துவ முன்னேற்றத்துடன், கோவிட் 19 மரபணு ஆர்.என்.ஏ வை எதிர்க்கும் திறன்பெற்றது.
10 க்கும் மேற்பட்ட முன்னணி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளைச் சேர்ந்த நோயாளிகள் இந்த ஆய்வுக்கு சேர்க்கப்பட்டனர்.
நீரிழிவு மற்றும் இதய நோய் என்ற இரட்டை முக்கிய காரணிகள் ( கோமர்பிடிட்டி – Comorbidity) உள்ள கோவிட் 19 நோயாளிகளுக்கு, நோயின் நிலைமையை பொருத்து, இந்த புதிய மருந்தான ஃபாவிபிராவிர் பயன்படுத்தப்படலாம்.
நான்கு நாட்களுக்குள், கோவிட் 19 வைரஸ் சுமைகளை விரைவாகக் குறைத்து, வேகமான முன்னேற்ற அறிகுறியை அளிக்கும்.
இந்த மருந்து மூலப்பொருள்களில் இருந்து, மருந்து வடிவமாக உருவாக்கும் பணியை கிளென்மார்க் நிறுவனத்தின் ஆய்வு மற்றும் வளர்ச்சி குழு (Research &Development Team) உருவாக்கியுள்ளது.
ஒரு புதிய மருந்து மக்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பு பல கட்டத்திலான மருத்துவ பரிசோதனைகளை (Clinical trial) கடந்திருக்க வேண்டும்.
அதன் அடிப்படையில் கோவிட் 19 நோயாளிகளுக்கு வைரஸ் தடுப்பு மருத்துவ பரிசோதனையை நடத்துவதற்கு (சோதனை கட்டம் – 3), மருந்து கட்டுப்பாட்டாளரின் ஒப்புதலைப் பெற்ற முதல் இந்திய நிறுவனம் கிளென்மார்க் நிறுவனம்.
முதல் தடுப்பூசி
இந்நிலையில், இந்தியாவில் கொரோனாவிற்கான முதல் தடுப்பூசியை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளதாக, ஐதராபாத்தை சேர்ந்த தடுப்பூசி தயாரிப்பு முன்னனி நிறுவனம் பாரத் பயோடெக் அறிவித்துள்ளது.
இது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (Indian Council of Medical Research) மற்றும் தேசிய வைராலஜி நிறுவனம் (National Virology Institute) உடன் இணைந்து தயாரித்ததாகவும் தெரிவித்துள்ளது.
‛கோவேக்சின்’ என அழைக்கப்படும் இந்த தடுப்பூசியை, விரைவில் நாடு முழுவதும் இரண்டு கட்ட மனித மருத்துவ பரிசோதனைகளை நடத்துவதற்கு, இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டாளர் மற்றும் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரின் ஒப்புதலை பெற்றுள்ளது.
முனைவர் ஜி.சத்தியபாலன்
உதவி பேராசிரியர்
மதுரை மருத்துவக் கல்லூரி
மதுரை
Useful information