கொள்ளு சட்னி செய்வது எப்படி?

கொள்ளு சட்னி அருமையான சட்னி ஆகும்.

கொள்ளு சத்துள்ள உணவுப் பொருள் ஆகும். இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்குக் கொள்ளு என்பது பழமொழி.

கொள்ளின் நன்மைகள் அறிய இங்கே சொடுக்கவும்.

எளிய முறையில் கொள்ளு சட்னி சுவையாக எப்படி செய்வது என்பது பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

தேவையான பொருட்கள்தேவையான பொருட்கள்

கொள்ளு – 50 கிராம்

உளுந்தம் பருப்பு – 1 மேசை கரண்டி

கடலைப் பருப்பு – 1 மேசை கரண்டி

மிளகு – 10 எண்ணம்

மிளகாய் வற்றல் – 1 எண்ணம் (நடுத்தரமானது)

வெள்ளைப் பூண்டு – 4 பற்கள் (பெரியது)

சின்ன வெங்காயம் – 10 எண்ணம்

புளி – சிறிய நெல்லிக்காய் அளவு

தேங்காய் – ஒரு கீற்று (நடுத்தர அளவு)

நல்ல எண்ணெய் – 4 மேசை கரண்டி

உப்பு – தேவையான அளவு

தாளிக்க

நல்ல எண்ணெய் – 1½ மேசை கரண்டி

கடுகு – ¾ தேக்கரண்டி

உளுந்தம் பருப்பு – ¾ மேசை கரண்டி

கறிவேப்பிலை – 2 கீற்று

மிளகாய் வற்றல் – 1 எண்ணம் (நடுத்தரமானது)

கொள்ளு சட்னி செய்முறை

முதலில் வெறும் வாணலியில் கொள்ளைப் போட்டு சிவந்து மணம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.

புளியை சிறிதளவு தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும்.

தேங்காயைத் துருவிக் கொள்ளவும்.

கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.

மிளகாய் வற்றலை காம்பு நீக்கி இரண்டாக ஒடித்துக் கொள்ளவும்.

வெள்ளைப் பூண்டினை தோல் நீக்கிக் கொள்ளவும்.

சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி நேராக வெட்டிக் கொள்ளவும்.

வாயகன்ற பாத்திரத்தில் நல்ல எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் கடலைப் பருப்பு, உளுந்தம் பருப்பு சேர்த்து வதக்கவும்.

 

எண்ணையில் பருப்புக்களைச் சேர்த்ததும்
எண்ணையில் பருப்புக்களைச் சேர்த்ததும்

 

பின்னர் அதனுடன் வெள்ளைப் பூண்டு, மிளகாய் வற்றல், நேராக வெட்டிய சின்ன வெங்காயம், மிளகு சேர்த்து வதக்கவும்.

 

சின்ன வெங்காயத்தைச் சேர்த்ததும்
சின்ன வெங்காயத்தைச் சேர்த்ததும்

 

வெங்காயம் வதங்கியதும் அதனுடன் துருவிய தேங்காயைச் சேர்த்து இரு நிமிடங்கள் வதக்கவும்.

 

தேங்காய் துருவலைச் சேர்த்ததும்
தேங்காய் துருவலைச் சேர்த்ததும்

 

கலவையை ஆறவிடவும்.

வறுத்த கொள்ளை முதலில் தனியாக அரைத்துக் கொள்ளவும்.

 

கொள்ளைப் பொடியாக்கியதும்
கொள்ளைப் பொடியாக்கியதும்

 

பின்னர் அதனுடன் வதக்கிய கலவை, ஊற வைத்த புளி, தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து அரைத்து வேறு பாத்திரத்திற்கு மாற்றவும்.

வாணலியில் நல்ல எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, உளுந்தம் பருப்பு, மிளகாய் வற்றல் சேர்த்து தாளிதம் செய்து கலவையில் கொட்டி ஒரு சேரக் கலக்கவும்.

 

தாளிதம் செய்யும் போது
தாளிதம் செய்யும் போது

 

சுவையான கொள்ளு சட்னி தயார்.

 

சுவையான கொள்ளு சட்னி
சுவையான கொள்ளு சட்னி

 

இதனை இட்லி, தோசை, சப்பாத்தியுடன் தொட்டுக் கொள்ளலாம்.

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் மிளகாய் வற்றலுக்குப் பதில் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி சட்னி தயார் செய்யலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.