கொள்ளு சூப் ஆரோக்கியமானது. இது அடிவயிற்றுக் கொழுப்பைக் குறைப்பதுடன், சளித் தொந்தரவிற்கும் அருமையான நிவாரணி.
மழைக் காலங்களில் தேநீருக்குப் பதிலாக இதனை அருந்தலாம்.
நமது பராம்பரியமான உணவு வகைகளுள் இதுவும் ஒன்று.
இனி சுவையான கொள்ளு சூப்பின் செய்முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கொள்ளு – 4 டேபிள் ஸ்பூன்
துவரம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
வெள்ளைப் பூண்டு – 5 பற்கள் (பெரியது)
தக்காளி – 2 எண்ணம் (பெரியது)
மிளகு – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 8 எண்ணம்
பெருங்காயம் – ¼ ஸ்பூன்
மஞ்சள் பொடி – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – 7 டம்ளர்
தாளிக்க
நல்ல எண்ணெய் – 1 ஸ்பூன்
கறிவேப்பிலை – 3 கீற்று
கடுகு – ¼ ஸ்பூன்
மிளகாய் வற்றல் – 2 எண்ணம்
கொள்ளு சூப் செய்முறை
வெறும் வாணலியில் கொள்ளையும் துவரம் பருப்பையும் தனித்தனியே போட்டு, சிவக்க வறுத்து ஆற வைக்கவும்.
ஆறியதும் கொள்ளையும், துவரம் பருப்பையும் நன்கு பொடியாக்கிக் கொள்ளவும்.
பொடியுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலக்கி வைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை தோலுரித்து நன்கு தட்டிக் கொள்ளவும்.
வெள்ளைப் பூண்டினைத் தோலுரித்து சுத்தம் செய்யவும்.
தக்காளியைக் கழுவி சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
வெள்ளைப் பூண்டினையும், நறுக்கிய தக்காளியையும் மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.
மிளகையும் சீரகத்தையும் பொடியாக்கிக் கொள்ளவும்.
வாயகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் சேர்த்த பொடிக் கலவையை போட்டு வேக விடவும்.
இரண்டு நிமிடங்கள் கழித்து நசுக்கிய வெங்காயத்தைச் சேர்க்கவும்.
பின்னர் அதனுடன் வெள்ளைப் பூண்டு தக்காளிக் கலவை, மஞ்சள் பொடி, பெருங்காயப் பொடி, தேவையான உப்பு, 7 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
கொதி வந்ததும் அடுப்பினை மீடியத்தில் வைத்துக் கொள்ளவும்.
6 டம்ளர் அளவுக்கு தண்ணீர் வற்றியதும் அடுப்பினை அணைத்து விடவும்.
கலவையை வடிகட்டியில் வடித்துக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து நல்ல எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல் சேர்த்து தாளித்துக் கொட்டவும்.
சுவையான கொள்ளு சூப் தயார்.
குறிப்பு
கொள்ளுவை ஒரே சீராக வறுக்கவும். இல்லையெனில் சூப்பின் சுவை மாறிவிடும்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!