கொள்ளு துவையல் அருமையான தொட்டுக் கறியாகும். இளைத்தவனுக்கு எள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு என்பது பழமொழி.
ஆகவே உடல் எடையை இழக்க விரும்புபவர்கள் கொள்ளினைக் கொண்டு துவையல் செய்து உண்ணலாம்.
இதனை எளிதாக தயார் செய்யலாம். அதேநேரத்தில் இதனுடைய சுவையும் அதிகம். மேலும் கொள்ளு உடலுக்கு வலுவினைத் தரும்.
இனி சுவையான கொள்ளு துவையல் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கொள்ளு அல்லது கானப் பயறு – 100 கிராம்
மிளகாய் வற்றல் – 4 எண்ணம் (பெரியது)
புளி – சிறிய கோலி அளவு
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – 3 கீற்று
கொள்ளு துவையல் செய்முறை
கொள்ளினை சுத்தம் செய்து கொள்ளவும்.
மிளகாய் வற்றலைக் காம்பு நீக்கிக் கொள்ளவும்.
கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.
புளியை இதழ்களாக பிய்த்து சிறிதளவு நீரில் ஊற வைக்கவும்.
வாணலியை அடுப்பில் வைக்கவும். வாணலி சூடானதும் கொள்ளினைப் போட்டு சிவக்க வறுக்கவும்.
கொள்ளு பாதிக்கு மேற்பட்டு வறுபட்டதும் அதனுடன் காம்பு நீக்கிய மிளகாய் வற்றல், அலசி உருவிய கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து ஒரு சேர கிளறி வறுக்கவும்.
கொள்ளினை சிவக்க வறுத்ததும் அதனை அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிடவும்.
கொள்ளு கலவை நன்கு ஆறியதும் மிக்ஸியில் வறுத்த கொள்ளு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து ஒரு சுற்று சுற்றவும்.
பின்னர் அதனுடன் தேவையான உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து ஒரு சேர கெட்டியாக அரைக்கவும்.
சுவையான கொள்ளு துவையல் தயார்.
இதனை நெய் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம் உள்ளிட்ட எல்லா சாத வகைகளுக்கும், இட்லி மற்றும் தோசை ஆகியவற்றுடனும் சேர்த்து உண்ணலாம்.
குழந்தைகளுக்கும் இதனைச் செய்து கொடுத்து வலுவான உடலைப் பெறலாம்.
குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் சிறிதளவு தேங்காய் துருவல், உளுந்தம் பயறு சேர்த்து வறுத்து துவையல் தயார் செய்யலாம்.
விருப்பமுள்ளவர்கள் மிளகாய் வற்றலுக்குப் பதில் பச்சை மிளகாய் சேர்த்தும் துவையல் தயார் செய்யலாம்.