கொள்ளு மசியல் ஆரோக்கியமான அவசியமான உணவு ஆகும். கொள்ளு சத்துமிக்க சிறுதானிய வகைகளுள் ஒன்று. கொள்ளில் துவையல், சட்னி, இட்லி, அடை என பலவகையான உணவுகள் செய்யலாம். நார்ச்சத்து மிகுந்த கொள்ளை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது அவசியம்.
கொள்ளு மசியலை சாதம், சப்பாத்தி, இட்லி, தோசை போன்றவற்றுடன் தொட்டுக் கொள்ளலாம். கொழுத்தவனுக்கு கொள்ளு என்பது பழமொழி. ஆதலால் உடல் பருமன், கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் இதனை உண்டு பயன் பெறலாம்.
இனி எளிய முறையில் சுவையான கொள்ளு மசியல் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கொள்ளு – 50 கிராம்
சின்ன வெங்காயம் – 10 எண்ணம்
தக்காளி – 1 பெரியது
பச்சை மிளகாய் – 2 எண்ணம்
வெள்ளை பூண்டு – 2 பற்கள் (பெரியது)
கறிவேப்பிலை – 3 கீற்று
கொத்த மல்லி இலை – 1 கிளை
கொத்த மல்லி விதை (வறுத்தது) – 1/2 ஸ்பூன்
சீரகம் – 1/2 ஸ்பூன்
மஞ்சள் பொடி – 1/4 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தாளிக்க
நல்ல எண்ணெய் – 2 ஸ்பூன்
மிளகாய் வற்றல் – 1 எண்ணம் (பெரியது)
கடுகு – 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கீற்று
செய்முறை
கொள்ளினை கல், தூசி நீக்கி சுத்தம் செய்து அலசிக் கொள்ளவும்.
சின்ன வெங்காயம், வெள்ளைப் பூண்டு, சின்ன வெங்காயம் ஆகியவற்றை தோல் நீக்கி நேராக கீறிக் கொள்ளவும்.
தக்காளி, பச்சை மிளகாய், மல்லி இலை ஆகியவற்றைக் கழுவி சிறுதுண்டுகளாக வெட்டவும்.
குக்கரில் கொள்ளு, சின்ன வெங்காயம், வெள்ளைப் பூண்டு, தக்காளி, பச்சை மிளகாய், கொத்த மல்லி இலை, கறிவேப்பிலை, மஞ்சள் பொடி, உப்பு, சீரகம், கொத்த மல்லி விதை, தேவையான தண்ணீர் சேர்த்து மூடி அடுப்பில் வைக்கவும்.
ஏழு விசில் வந்ததும் அடுப்பினை சிம்மில் இரண்டு நிமிடங்கள் வைத்து அணைத்து விடவும்.
குக்கரின் ஆவி அடங்கியதும் திறந்து கொள்ளுக் கலவையை வடிகட்டி ஆற விடவும்.
கொள்ளுக் கலவை ஆறியதும் மிக்ஸியில் கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து நல்ல எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை, கடுகு, மிளகாய் வற்றல் சேர்த்து தாளித்து அரைத்த விழுதில் சேர்க்கவும்.
வடித்து வைத்துள்ள கொள்ளு தண்ணீரை தாளித்த விழுதில் சேர்த்து அடுப்பில் வைத்து மூன்று நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கவும். சுவையான கொள்ளு மசியல் தயார்.
குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் கொள்ளினை நான்கு மணி நேரம் ஊற வைத்து பிறகு வேக வைத்து மசியல் தயார் செய்யலாம்.
விருப்பமுள்ளவர்கள் கொள்ளினை வறுத்து பிறகு வேக வைத்து மசியல் செய்யலாம்.