கொள்ளு – வலிமை தரும் பயறு

கொள்ளு அதிக ஆற்றலையும், வலிமையையும் வழங்கக்கூடிய பயறு ஆகும். ஆதலால்தான் இதனை பந்தய குதிரைகளுக்கு உணவாக அளிக்கின்றனர். எனவே இது ஆங்கிலத்தில் ஹார்ஸ் கிராம் என்று அழைக்கப்படுகிறது.

கொள்ளு பழங்காலத்திலிருந்தே நம்முடைய நாட்டில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக தென்னிந்தியாவில் இது அதிகளவு பயன்படுத்தப்படுகிறது.

இதனுடைய தாயகம் தெற்காசியா மற்றும் வெப்பமண்டல ஆப்பிரிக்கா என்று கருதப்படுகிறது.

இது காணம், முதிரை என்றும் அழைக்கப்படுகிறது. இதனுடைய அறிவியல் பெயர் மேக்ரோடிலைமா யூனிஃபெளோரம் என்பதாகும்.

கொள்ளுவின் அமைப்பு மற்றும் சிறப்பியல்பு

கொள்ளு 30-60 செமீ வரை வளரக்கூடிய ரைசோபிய வகையைச் சார்ந்த குற்றுச்செடி வகைத் தாவரத்திலிருந்து பெறப்படுகிறது. இதில் இருபால் தன்மை உடைய இளம்பச்சை அல்லது மஞ்சள் கலந்த பச்சை நிறப்பூக்கள் வளருகின்றன.

 

கொள்ளுப் பூ
கொள்ளுப் பூ

 

இப்பூக்களிலிருந்து இருபுறகளிலும் வெடித்துப் பரவக் கூடிய விதைகளைக் கொண்டுள்ள காய்கள் வளருகின்றன. முதிர்ந்த விதைகளே கொள்ளு என்று அழைக்கப்படுகிறது.

 

கொள்ளுக் காய்கள்
கொள்ளுக் காய்கள்

 

கொள்ளானது தட்டையாக பழுப்பு அல்லது மண்நிறத்தில் காணப்படும்.

கொள்ளானது வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டலத்தில் செழித்து வளருகிறது. கரிசல் மண், அடர்ந்த சிவப்பு நிறம் உடைய செம்மண், களிமண் ஆகியவை உட்பட பல்வேறு மண்வகைகளிலும், உலர்ந்த நிலங்களிலும் நன்கு வளருகிறது.

இப்பயிர் வளர குறைந்த சூரிய ஒளியே போதுமானது. எனவே இதனை மரங்களுக்கு அடியிலும் பயிர் செய்யலாம்.

இவை குறைந்த காலத்தில் அடர்ந்து வளர்வதால் மண் அரிப்பினைத் தடுக்கிறது. சரிவான கனிமச்சத்து குறைந்த இடங்களில் இதனை வளர்த்து மண்அரிப்பினைத் தடுக்கலாம்.

கொள்ளானது வளம் குறைந்த வறட்சியான பகுதிகளுக்கு ஏற்றது. எனவே இதனை வளமில்லா இடங்களை பயிர் வளர்ச்சிக்கு ஏற்றவையாக மாற்ற இதனைப் பயிர் செய்யலாம்.

கொள்ளினை சிறந்த உணவுப்பொருள், கால்நடைத் தீவனம் மற்றும் உரமாகப் பயன்படுத்தலாம்.

கொள்ளில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

கொள்ளானது அதிக கால்சியம், இரும்புச்சத்து, புரதச்சத்தினைக் கொண்டுள்ளது. பயறு வகைகளில் கொள்ளானது அதிகளவு கால்சியத்தைப் பெற்றுள்ளது.

மேலும் அதிகப் புரதத்தைக் கொண்டுள்ள சைவ உணவுகளில் ஒன்று. இது குறைந்த கொழுப்புச் சத்து மற்றும் அதிக நார்ச்சத்துடன் கூடிய கார்போஹைட்ரேட்டையும் கொண்டுள்ளது. இதில் பாஸ்பரஸ் உள்ளது.

கொள்ளு – மருத்துவ பண்புகள்

கொள்ளானது அதிகளவு நுண்ஊட்டச்சத்துக்களையும், தாதுஉப்புகளையும் கொண்டுள்ளதால் இது சூப்பர் உணவு என்ற அந்தஸ்தைப் பெறுகிறது.

இது மனிதன் மற்றும் விலங்களுக்கு ஆரோக்கிய உணவாகும். இது உடலில் உள்ள கொழுப்பினைக் குறைக்கும் தன்மையை உடையது என்பதை இளைத்தவனுக்கு எள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு என்ற பழமொழி மூலம் அறிந்து கொள்ளலாம்.

நல்ல செரிமானத்திற்கு

கொள்ளில் உள்ள நார்ச்சத்து செரிமானம் நன்கு நடைபெற உதவுகிறது. இது செரிமான மண்டலத்தில் உண்டாகும் வாயு மற்றும் அஜீரணத்தைக் குறைக்கிறது.

மேலும் இது குடலில் வாழும் ஒட்டுண்ணிகளை அழித்து செரிமானத்தை ஊக்குவிக்கிறது. காலையில் வெறும் வயிற்றில் கொள்ளினை உண்பதால் செரிமானப்பாதையை செரிமானத்திற்கு தூண்டி செரிமானம் நன்கு நடைபெற வழிவகுக்கிறது.

விழிவெண்படல அழற்சியை சீர்செய்ய

விழிவெண்படல அழற்சி உள்ளவர்கள் பன்னீரைக் கொண்டு கண்ணை அலசுவார்கள். அதற்கு பதில் முதல் நாள் இரவு கொள்ளினை ஊற வைத்து பின் ஊற வைத்த நீரில் கண்ணினைக் கழுவ அழற்சி மற்றும் கண்எரிச்சல் சரியாகும்.

இதற்கு காரணம் ஊற வைத்த நீரில் உள்ள ஆன்டிஆக்ஸிஜென்டுகள் ஆகும். இவ்வாறாக நாள் ஒன்றுக்கு மூன்று முறை கண்ணினை மேற்கூறியவாறு கழுவலாம்.

ஆரோக்கியமான உடல் இழப்பிற்கு

கொள்ளில் உள்ள நார்ச்சத்தானது வயிறு நிரம்பிய உணர்வினை உண்டாக்குவதுடன் உடலினை உற்சாகமாகவும் வைக்க உதவுகிறது. இதனால் மேலும் மேலும் உணவு உட்கொள்வது தடைசெய்யப்பட்டு உடல்எடை அதிகரிக்காமல் பாதுகாக்கப்படுகிறது.

சிறுகுடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் பொருட்களை வெளியேற்றி சீரான உடல் வளர்ச்சிதை மாற்றத்திற்கும் வழி ஏற்படுத்துகிறது. எனவே கொள்ளினை உண்டு ஆரோக்கியமான உடல் இழப்பினைப் பெறலாம்.

மாதவிடாய் பிரச்சினை சரியாக

மாதவிடாய் பிரச்சினையால் அவதியுறுபவர்கள் கொள்ளினை ஊற வைத்தோ அல்லது சூப்பாக செய்தோ உண்ணலாம். மாதவிடாய் பிரச்சினையால் ஏற்படும் அதிக ரத்தப்போக்கை இதில் உள்ள இரும்புச்சத்து சரி செய்கிறது.

கொலஸ்ட்ராலின் அளவினைக் குறைக்க

கொள்ளினை உண்ணும்போது அது இரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவினைக் குறைப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

கெட்ட கொலஸ்ட்ரால் நரம்புகளில் ஒட்டிக் கொண்டு இரத்த ஓட்டத்தை தடை செய்து இரத்த அழுத்தத்தை உண்டாக்கிறது. முதல் நாள் இரவு ஊறவைத்த கொள்ளினை உண்ணும்போது கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறைக்கப்படும்.

மலச்சிக்கல் மற்றும் மூலப்பாதிப்பினைத் தடுக்க

மலச்சிக்கலானது உணவில் நார்ச்சத்து குறைபாடு, தண்ணீர் குறைபாடு, தாதுஉப்புகள் குறைபாடு, மனஅழுத்தம் ஆகியவற்றால் ஏற்படும்.

கொள்ளினை உண்ணும்போது அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்தானது மலச்சிக்கலைப் போக்குகிறது.

கொள்ளினை ஊற வைத்து அதனை உண்ணும்போது அதில் நார்ச்சத்து மூலப்பாதிப்பிற்கும் நிவாரணம் அளிக்கிறது.

சருமபிரச்சினைகளுக்கு

சருமத்தில் உண்டாகும் தடிப்புகள், கொப்புளங்கள் போன்றவற்றிற்கு ஊறவைத்த கொள்ளினை அரைத்து பூச நிவாரணம் கிடைக்கும்.

கொள்ளில் இருக்கும் ஆன்டிஆக்ஸிஜென்ட்டுகள், தாதுஉப்புக்கள் சருமத்தைப் பாதுகாக்கிறது. மேலும் இதனுடைய பாக்டீரிய எதிர்ப்பு, பூஞ்ஞை எதிர்ப்பு பண்பானது சருமத்தை தொற்றிலிருந்து பாதுகாக்கிறது. எனவே கொள்ளினைக் கொண்டு பொலிவான சருமத்தைப் பெறலாம்.

சளி மற்றும் காய்ச்சலிலிருந்து நிவாரணம் பெற

கொள்ளில் உள்ள பாக்டீரியா மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்பானது சளி, காய்ச்சல் போன்ற தொற்று நோய்களுக்கு நிவாரணம் அளிக்கிறது.

கொள்ளினை உண்ணும் போது மூக்கடைப்பினை நீக்குவதோடு சளியை இழகச் செய்து வெளியேற்றுகிறது. கொள்ளானது உடலுக்கு வெப்பத்தினை வழங்குவதால் இது குளிர்காலத்துக்கு ஏற்ற உணவாகக் கருதப்படுகிறது.

மேலும் கொள்ளானது சீரான வளர்ச்சிதை மாற்றத்தையும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும்; அதிகரிக்கச் செய்கிறது.

நீரழிவு நோயாளிகளுக்கு

கொள்ளினை முறையாக தொடர்ந்து உண்ணும்போது அது இரத்தத்தில் சர்க்கரையின் அளவினைக் குறைப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

சிறுநீரகக் கற்களை வெளியேற்ற

சிறுநீரகக் கற்கள் கால்சியம் ஆக்ஸலேட்டுகளால் உருவாகின்றன. கொள்ளில் உள்ள இரும்புச் சத்து மற்றும் பாலிபீனால்கள் சிறுநீரகக் கற்களை வெளியேற்ற உதவுகிறது.

கொள்ளினை முதல் நாள் இரவே ஊறவைத்து தண்ணீரையும், கொள்ளினையும் அப்படியோ உண்ண சிறுநீரகக் கற்கள் வெளியேற்றப்படும்.

கொள்ளினைப் பற்றிய எச்சரிக்கை

கல்லீரல் பாதிப்பு உள்ளவர்கள், அதிக பித்த உற்பத்தி உள்ளவர்கள், அல்சர் தொந்தரவு உள்ளவர்கள் இதனைத் தவிர்ப்பது நலம்.

கொள்ளினை அப்படியேவோ, வறுத்தோ, ஊறவைத்தோ, முளைக்க வைத்தோ பயன்படுத்தப்படுகிறது.

கொள்ளிலிருந்து சூப், ரசம், பொடி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் தயார் செய்யப்படுகின்றன.

உடலுக்கு ஆரோக்கியம் தரும் கொள்ளுவை உண்டு வளமான வாழ்வு வாழ்வோம்.

வ.முனீஸ்வரன்

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.