கோட்புலி நாயனார் ‍- உறவினர்களைத் தண்டித்தவர்

கோட்புலி நாயனார்

கோட்புலி நாயனார் சிவாலயங்களில் திருவமுது செய்விக்க வைத்திருந்த நெல்லை உண்டு சிவபதாரம் செய்த தம்முடைய உற்றார் உறவினர்களைக் கொன்று குவித்த வேளாளர்.

இவர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர்.

பண்டைய சோழநாட்டில் திருநாட்டியத்தான்குடி என்னும் திருத்தலத்தில் வேளாளர் மரபில் தோன்றியவர் கோட்புலி நாயனார்.

திருநாட்டியத்தான்குடி திருவாரூர் மாவட்டம் திருவாரூர் வட்டத்தில் உள்ளது.

கோட்புலி என்பதற்கு கொல்லுவதில் வல்ல புலி என்பது பொருளாகும்.

வேளாளராக இருந்தபோதிலும் இவர் அரசனுக்கு படை கொண்டு சென்று, போர்க்களத்தில் பகைவர்களை கொன்று வெற்றி பெறுபவராக விளங்கினார்.

அஞ்சா நெஞ்சமும் அளவிடாத துணிச்சலும் கொண்டு பகைவர்களை அழிக்கும் குணத்தினைப் பெற்றிருந்த போதிலும் இவருக்கு இறைவனான சிவனாரிடம் பேரன்பு இருந்தது.

ஆதலால் போர்முனையில் பகைவர்களை அழித்து வெற்றி பெற்றதற்காக அரசன் அளிக்கும் நிதி மற்றும் பொன்னிற்கு செந்நெல்லை வாங்கி குவித்து வைப்பார். அந்நெல்லை சிவாலயங்களின் திருவமுது வழிபாட்டிற்கு கொடுத்து மனம் நிறைவு கொள்வார்.

ஏதேனும் ஒரு சிவாலயத்தில் இறைவழிபாட்டிற்காக நெல் இல்லை என்பதை அறிந்தால் கோட்புலியார் தான் சேமித்து வைத்திருக்கும் செந்நெல்லை உடனடியாக அங்கு அனுப்பி திருக்கோவிலில் திருவமுது நடைபெற உள்ளம் மகிழ்வார்.

புலியைப் போல் பகைவர்களைக் கொல்லும் குணம் கொண்டிருந்தாலும் சிவனார் மீதும், சிவவழிபாட்டின் மீதும் தீராத அன்பினைக் கொண்டிருந்தார்.

ஒருசமயம் பகைவரை எதிர்த்து போரிட வருமாறு கோட்புலியாருக்கு அரசன் அழைப்பு விடுத்திருந்தான்.

பகைவன் பெரும் படையினைப் பெற்றிருப்பதால் போர் நெடுநாள் நீளும் என்பதைக் கோட்புலியார் அறிந்தார்.

‘போர்முனையிலிருந்து திரும்பும் வரை சிவாலாயத்தில் திருவமுது பணி தடையில்லாமல் நடைந்தேற வேண்டும்’ என்று எண்ணினார்.

எனவே தான் பராமரித்து வந்த நெற்களஞ்சியங்களை உறவினர்களிடம் ஒப்படைத்தார்.

அவர்கள் ஒவ்வொருவரிடமும், “இவை இறைவனின் திருக்கோவில் திருவமுதிற்கானவை. இவற்றை திருக்கோவில்களுக்கு மட்டும் தேவைப்படும் பொழுது வழங்க வேண்டும். இதிலிருந்து யாரும் தமக்கென்று எடுக்கக் கூடாது. இது சிவபெருமானின் மீது ஆணை.” என்று சொல்லிவிட்டு போர்முனைக்குச் சென்றார்.

கோட்புலியார் போர்முனைக்கு சென்ற சிறிது காலத்தில் வானம் பொய்த்து, நிலம் வறண்டு, பயிர் விளைச்சல் இல்லாமல் போனது. இதனால் கடும் உணவுப் பஞ்சம் ஏற்பட்டது.

பட்டினியால் மக்களில் பலர் மடிந்தனர். கோட்புலியார் உறவினர்கள் தங்களுக்குள் கூடிப் பேசினர்.

“நாம் இப்போது இந்நெல்லைப் பயன்படுத்தி உயிர் பிழைப்போம். தக்க சமயத்தில் இதனை திருப்பிக் கொடுப்போம்.” என்று கூறி பாதுகாத்திருந்த நெல்லை தங்களின் உணவிற்காகப் பயன்படுத்தினர்.

சில மாதங்களில் போர் முடிவுக்கு வந்தது. கோட்புலியார் போரில் பகைவர்கள் பலரைக் கொன்று தம்முடைய அரசருக்கு பெரும் வெற்றியைப் பெற்றுத் தந்தார்.

அரசனும் மனமகிழ்ந்து பெரும் நிதியையும் பொற்குவியல்களையும் பரிசாக வழங்கினான். அவற்றைப் பெற்றுக் கொண்ட கோட்புலியார் ஊர் திரும்பலானார்.

வரும் வழியில் தம்முடைய உறவினர்கள் சிவாலய திருவமுதிற்கான நெல்லை பஞ்சத்தால் உண்டு விட்டார்கள் என்பதை அறிந்தார்.

அவருக்கு கடும் கோபம் உண்டானது. நெல்லை உண்டு சிவபதாரம் செய்த உறவினர்களுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் என்ற எண்ணம் உண்டானது.

வீடு திரும்பிய கோட்புலியார் தம்முடைய உற்றார் உறவினர்களை உடை மற்றும் பரிசுப் பொருட்களைப் பெற்றுக் கொள்ள வருமாறு அழைத்தார்.

அவர்கள் அனைவரும் கோட்புலியாரின் அழைப்பினை ஏற்று அவருடைய வீட்டிற்கு வந்தனர். வீட்டிற்கு வெளியே காவலாளி ஒருவரை நிற்க வைத்தார்.

“உங்களுக்கு ஏற்ற பரிசினை அளிக்கப் போகிறேன்” என்று கூறி உடைவாளை உருவினார்.

“சிவபெருமானின் மீது ஆணையிட்டு, உங்களை நம்பி வைத்த செந்நெல் முழுவதையும் எடுத்துக் கொண்ட உங்களுக்கு வானுலகம் வழங்குவதுதான் தக்க பரிசு” என்றபடி அங்கிருந்தோரை எல்லாம் கொன்று குவித்தார்.

அவருடைய வாளுக்கு அவருடைய தந்தை, தாய், உடன்பிறந்தோர், மனைவி, மனைவியைச் சார்ந்தோர் என அனைவரும் இரையாயினர்.

இறுதியில் இளம் பாலகன் ஒருவன் எஞ்சியிருந்தான்.

அவனை கோட்புலியார் நோக்கியதும் அங்கிருந்த காவலாளி, “ஐயா, இவனோ பால்மணம் மாறா பச்சிளம் பாலகன். திடஉணவினை இன்னும் இவன் உண்ண ஆரம்பிக்கவில்லை. ஆதலால் இவன் இறைவனுக்கான செந்நெல்லை உண்ணவில்லை. மேலும் இவன் மட்டுமே உங்கள் கொடியில் எஞ்சியுள்ளான். குலம் தழைக்கவாவது இவனை விட்டுவிடுங்கள்.” என்று கெஞ்சினான்.

அதற்கு கோட்புலியார் “இவன் நேரடியாக இறைவனுக்கான நெல்லை உண்ணவில்லைதான். ஆனால் இறைநெல்லை உண்ட இவன் அன்னையிடம் பாலைக் குடித்தவன் ஆயிற்றே.” என்றடி அவனை நோக்கி வாளை வீசினார்.

அப்போது இறைவனார் தோன்றி “உம்முடைய உறவினர்கள் அனைவரும் சொர்க்கத்தை அடைந்து விட்டனர். நீ இப்போது எம்பால் அணைக” என்று அருளினார்.

இறைவனின் கூற்றுப்படி கோட்புலி நாயானார் நிலைத்த இன்பமாகிய வீடுபேற்றினைப் பெற்றார்.

இறைவனின் மீது கொண்ட பக்தி வெறியாக முற்றியதால், சிவபதாரம் செய்த உற்றார், உறவினர்களை கொன்றழித்த கோட்புலி நாயனார் 63 நாயன்மார்களுள் ஒருவராக திகழும் பாக்கியம் பெற்றார்.

கோட்புலி நாயனார் குருபூஜை ஆடி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் பின்பற்றப்படுகிறது.

கோட்புலி நாயனாரை சுந்தரர் திருத்தொண்ட தொகையில் ‘அடல் சூழ்ந்த வேல்நம்பி கோட்புலிக்கும் அடியேன்’ என்று போற்றுகிறார்.

Visited 1 times, 1 visit(s) today