கோதுமை உப்புமா நார்ச்சத்து மிகுந்த சத்தான உணவாகும். இதனை சிற்றுண்டியாகவும் உண்ணலாம்.
இதனை தயார் செய்ய ரவைப் பதத்திலான கோதுமை தேவை.
சுவையான கோதுமை உப்புமா தயார் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கோதுமை ரவை – 1 கப் (தோராயமாக 250 கிராம்)
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – 2 கப் (தோராயமாக 500 கிராம்)
தாளிக்க
நல்ல எண்ணெய் – 3 ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 10 எண்ணம் (மீடியம் சைஸ்)
பச்சை மிளகாய் – 2 எண்ணம் (மீடியம் சைஸ்)
இஞ்சி – சுண்டுவிரல் அளவு
உளுந்தம் பருப்பு – 1 ஸ்பூன்
கடுகு – ½ ஸ்பூன்
கறிவேப்பிலை – 3 கீற்று
பெருங்காயத்தூள் – தேவையான அளவு
செய்முறை
கோதுமை ரவை தயார் செய்யும் முறை
முழு கோதுமையை வெறும் வாணலியில் போட்டு சிவக்க வறுக்கவும்.

பின் அதனை மிக்ஸியில் போட்டு ஒன்றிரண்டாக பொடிக்கவும்.
அதனை பெரிய ஓட்டை உள்ள சலிப்பில் சலிக்கவும்.
சல்லடையில் மேலே உள்ள கோதுமையை மீண்டும் மிக்ஸியில் போட்டு பொடித்து சலிக்கவும்.
இவ்வாறு எல்லா கோதுமையையும் ரவையாக மாற்றவும்.
மிக்ஸியில் அடிக்கும்போது கோதுமையை மாவாக அடித்து விடக்கூடாது.

உப்புமா தயார் செய்யும் முறை
இஞ்சியை தோல்நீக்கி இழைத்துக் கொள்ளவும்.
சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி சதுரங்களாக நறுக்கிக் கொள்ளவும்.
கறிவேப்பிலையை அலசி தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.
பச்சை மிளகாயை காம்பு நீக்கி துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
முதலில் வாணலியில் நல்லஎண்ணெய், கடுகு, உளுந்தம் பருப்பு, துண்டுகளாக்கப்பட்ட பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சதுரங்களாக நறுக்கிய வெங்காயம், இழைத்த இஞ்சி ஆகியவற்றைச் சேர்த்து தாளிதம் செய்யவும்.

கடுகு வெடித்தவுடன் அதனுடன் தேவையான தண்ணீர், தேவையான உப்பு, பெருங்காயத்தூள் சேர்க்கவும்.
தண்ணீர் தளதள என்று கொதிக்கும்போது அதனுடன் வறுத்து பொடித்த கோதுமை ரவையை சிறிது சிறிதாகச் சேர்த்து கிளறவும்.


அடுப்பில் தீயினை மிதமாக வைத்து அடிக்கடி கிளவும்.
கலவை கெட்டியானதும் இறக்கி விடவும்.


சுவையான கோதுமை உப்புமா தயார்.

இதனை தேங்காய் சட்டினி, சாம்பார், சீனியுடன் சேர்த்து உண்ணலாம்.
குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் பாக்கெட்டில் விற்கும் கோதுமை ரவையை வாங்கி உபயோகிக்கலாம்.
பச்சை மிளகாய்க்கு பதில் மிளகாய் வற்றல் பயன்படுத்தி உப்புமா தயார் செய்யலாம்.
மஞ்சள் பொடி, காய்கறிகள் சேர்த்து உப்புமா தயார் செய்யலாம்.
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலையை உப்புமா இறக்கும்போது சேர்த்து இறக்கலாம்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!