கோதுமை பரோட்டா கோதுமையைப் பயன்படுத்தி, வீட்டில் செய்யப்படும் அருமையான உணவு ஆகும். இது சுவையும், சத்தும் மிகுந்தது.
கோதுமையில் சப்பாத்தி, தோசை, உப்புமா உள்ளிட்ட உணவு வகைளை செய்து உண்போம். இனி பரோட்டாவினையும் கோதுமை மாவில் செய்து அசத்தலாம்.
ஆரோக்கிய உணவான இதனை வீட்டில் செய்வது எப்படி என்பது பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு – 200 கிராம்
பால் – 25 மில்லி லிட்டர்
வெள்ளைச் சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
கடலை எண்ணெய் – 25 மில்லி லிட்டர்
கோதுமை பரோட்டா செய்முறை
கோதுமை மாவினை சலித்துக் கொள்ளவும்.
வாயகன்ற பாத்திரத்தில் கோதுமை மாவினை எடுத்துக் கொண்டு, அதனுடன் தேவையான அளவு உப்பு, வெள்ளைச் சர்க்கரை, பால் ஆகியவற்றைச் சேர்த்து ஒருசேரக் கிளறிக் கொள்ளவும்.

பின்னர் அதனுடன் 2 ஸ்பூன் கடலை எண்ணெய் விட்டு பிசிறி, பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

மாவினை ஈரத்துணியால் மூடி அரைமணி நேரம் ஊற விடவும்.
பிசைந்த மாவினை சிறுஉருண்டகளாக்கிக் கொள்ளவும்.
சிறிய உருண்டையை எடுத்து, கோதுமை மாவினைப் பயன்படுத்தி மெல்லிய சப்பாத்தியாக விரிக்கவும்.

விரித்த சப்பாத்தி மாவின் மேல் ½ ஸ்பூன் கடலை எண்ணெயை ஊற்றி, எல்லா இடங்களிலும் படுமாறு கையால் தடவவும்.

பின்னர் படத்தில் காட்டியபடி சப்பாத்தியின் ஒரு ஓரத்தினைப் பிடித்து விசிறி போல் மடிக்கவும்.


மடித்த மாவினை படத்தில் காட்டியபடி வட்டமாகச் சுருட்டவும்.
இவ்வாறாக எல்லா மாவினையும் செய்யவும்.


சுருட்டிய மாவினை மீண்டும் வட்டமாக (அழுத்தம் குறைவாகக் கொடுத்து) விரிக்கவும்.

விரித்த மாவினை தோசைக்கல்லில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் ஊற்றி, இருபுறமும் திருப்பிப் போட்டுச் சுட்டு எடுக்கவும்.

வேக வைத்து எடுத்த இரண்டு அல்லது மூன்று பரோட்டாக்களை தட்டில் போட்டு, கைகளால் இருபுறமும் தட்டவும்.

சுவையான கோதுமை பரோட்டா தயார்.

இதனை பரோட்டா சால்னா தொட்டு உண்ண சுவை மிகும்.
குறிப்பு
பாலுக்குப் பதிலாக வாழைப் பழத்தினைச் சேர்த்து, பரோட்டா மாவு பிசையலாம்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!