கோதுமை ரவை பாயசம்

கோதுமை ரவை பாயசம் செய்வது எப்படி?

கோதுமை ரவை பாயசம் அருமையான இனிப்பு வகை சிற்றுண்டி ஆகும். இதனை திருவிழா நாட்களிலும், விருந்தினர் வருகையின் போதும் செய்து அசத்தலாம்.

இது உண்பதற்கு மெதுவாகவும், தித்திப்பாகவும் இருக்கும். இந்த இனிப்பு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமானது.

இனி எளிதான முறையில் சுவையான கோதுமை ரவை பாயசம் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

கோதுமை ரவை – 1 கப்

மண்டை வெல்லம் – 1 &1/2 கப்

தண்ணீர் – 1 &1/2 கப் + 1/2 கப்

தேங்காய் பால் – 1/2 கப்

நெய் – 3 ஸ்பூன்

முந்திரிப் பருப்பு – 8 எண்ணம்

கிஸ்மிஸ் – 10 எண்ணம்

பாதாம் பருப்பு – 5 எண்ணம்

தேங்காய் – 1 கீற்று

ஏலக்காய் – 3 எண்ணம்

செய்முறை

தேங்காய் கீற்றினை சிறுதுண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு ஆகியவற்றை சிறுதுண்டுகளாக்கிக் கொள்ளவும்.

மண்டை வெல்லத்தை நன்கு தூளாக்கி 1 &1/2 கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி உருகியதும் முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு, தேங்காய் துண்டுகள் ஆகியவற்றைப் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

நெய்யில் வறுக்கும்போது
நெய்யில் வறுக்கும்போது

பின் கிஸ்மிஸ் பழத்தை அதே நெய்யில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

மீதமுள்ள நெய்யில் கோதுமை ரவையைச் சேர்த்து வாசம் வரும் வரை வறுத்து ஆற விடவும்.

கோதுமை ரவையை வறுக்கும் போது
கோதுமை ரவையை வறுக்கும் போது

மண்டை வெல்லத்தில் 1/2 கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கரையும் வரை கலக்கிக் கொண்டே இருக்கவும்.

மண்டை வெல்லம் கரைந்ததும் இறக்கி அதனை வடிகட்டிக் கொள்ளவும்.

வெல்லக்கரைசல் தயார் செய்யும் போது
வெல்லக்கரைசல் தயார் செய்யும் போது
வடிகட்டும் போது
வடிகட்டும் போது

குக்கரில் 1& 1/2 கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 2 விசில் வந்ததும் இறக்கி விடவும்.

அதிக நேரம் அடுப்பில் வைத்தால் கோதுமை ரவை மிகவும் கெட்டியாகி விடும். எனவே 2 விசில் வந்ததும் இறக்கி விடவும்.

குக்கரை மூடும் முன்பு
குக்கரை மூடும் முன்பு

குக்கரின் ஆவி அடங்கியதும் திறந்து அதனை அடுப்பில் சிம்மிற்கும் சற்று கூடுதலாக வைக்கவும்.

அதனுடன் வெல்லக் கரைசலைச் சேர்த்துக் கிளறவும்.

வெல்லக்கரைசலைச் சேர்த்ததும்
வெல்லக்கரைசலைச் சேர்த்ததும்

பின்னர் அதில் ஏலக்காயை உடைத்துச் சேர்க்கவும்.

அதனுடன் வறுத்த முந்திரிப் பருப்பு, தேங்காய் துண்டு, பாதாம் பருப்பு, கிஸ்மிஸ் ஆகியவற்றைச் சேர்த்து கிளறி அடுப்பை அணைத்து விடவும்.

பின்னர் அதனுடன் தேங்காய் பாலைச் சேர்த்துக் கிளறவும்.

தேங்காய் பாலைச் சேர்க்கும் போது
தேங்காய் பாலைச் சேர்க்கும் போது

சுவையான கோதுமை ரவை பாயசம் தயார். சூடாகப் பறிமாறவும்.

கோதுமை ரவை பாயசம்
கோதுமை ரவை பாயசம்

குறிப்பு

இப்பாயசம் விரைவாக கெட்டிப் பட்டு விடும். ஆதலால் அடுப்பிலிருந்து இறக்கியதும் வேறு பாத்திரத்திற்கு மாற்றி விடவும்.

விருப்பமுள்ளவர்கள் குங்குமப்பூவினைச் சேர்த்து இப்பாயாசம் தயார் செய்யலாம்.

விருப்பமுள்ளவர்கள் தேங்காய் பாலுக்குப் பதிலாக, காய்ச்சி ஆறிய பாலைச் சேர்த்தும் பாயசம் தயார் செய்யலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்


Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.