கோதுமை வடை செய்வது எப்படி?

கோதுமை வடை சுடசுட உண்பதற்கும், ஆறிய பின்பு உண்பதற்கும் ஏற்ற அருமையான சிற்றுண்டி. கோதுமையில் சப்பாத்தி, பூரி, கஞ்சி, கூழ் போன்றவற்றை செய்வதே வழக்கம்.

கோதுமையில் செய்யப்படும் வடையானது அசத்தலான சுவையுடன் அடிக்கடி உண்ணத் தூண்டும் உணவு வகை என்றால் ஆச்சரியமில்லை.

இனி சுவையான கோதுமைவடை செய்முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

கோதுமை – ¼ படி

சின்ன வெங்காயம் – 100 கிராம்

பச்சை மிளகாய் – 3 எண்ணம் (மீடியம் சைஸ்)

சீரகம் – 2 ஸ்பூன்

கல் உப்பு – தேவையான அளவு

கருவேப்பிலை – 6 கீற்று

கடலை எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

முதலில் கோதுமையை சுமார் 3½ மணி நேரம் ஊற வைக்கவும்.

 

ஊறவைத்த கோதுமை
ஊறவைத்த கோதுமை

 

சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி சுத்தம் செய்து சதுரங்களாக நறுக்கவும்.

ப‌ச்சை மிளகாயை கழுவி சிறுதுண்டுகளாக வெட்டவும்.

கருவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.

ஊறிய கோதுமையை கிரைண்டரில் லேசாக கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

கோதுமை மாவினைத் தோண்டுவதற்கு இரண்டு நிமிடங்களுக்கு முன்பு தேவையான கல் உப்பினைச் சேர்த்து அரைத்துத் தோண்டவும்.

 

கோதுமையை அரைக்கும்போது
கோதுமையை அரைக்கும்போது

 

பின் கொரகொரப்பாக அரைத்த கோதுமை மாவுடன் சதுரங்களாக்கிய சின்ன வெங்காயம், சிறுதுண்டுகளாக்கிய பச்சை மிளகாய், உருவிய கருவேப்பிலை, சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து ஒரு சேரப் பிசையவும்.

 

நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, சீரகம் சேர்க்கும்போது
நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, சீரகம் சேர்க்கும்போது

 

பிசைந்த கோதுமை வடை மாவு
பிசைந்த வடை மாவு

 

பின் வாணலியை அடுப்பில் வைத்து தேவையான அளவு கடலை எண்ணெயை ஊற்றி எண்ணையைக் காய விடவும்.

 

காய வைத்த கடலை எண்ணெய்
காய வைத்த கடலை எண்ணெய்

 

அரைத்து வைத்துள்ள கோதுமை மாவில் சிறிதளவு எடுத்து உருட்டி கையால் தட்டி காய்ந்த எண்ணெயில் போடவும்.

 

வடையாக தட்டப்பட்ட கோதுமைமாவு
வடையாக தட்டப்பட்ட கோதுமைமாவு

 

ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி விட்டு எண்ணெய் குமிழி அடங்கியதும் வடையை எடுத்து விடவும்.

 

கோதுமை வடை வேகும்போது
வடை வேகும்போது

 

சுவையான கோதுமை வடை தயார்.

 

கோதுமை வடை
கோதுமைவடை

 

இவ்வாறாக எல்லா கோதுமை மாவினையும் வடைகளாகச் சுடவும்.

இதனை குழந்தைகளுக்கு தின்பண்டமாக பள்ளிக்கும் கொடுத்து அனுப்பலாம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதனை ரசித்து உண்பர்.

குறிப்பு

கோதுமை மாவினை உருட்டி வடை தயார் செய்யும்போது கையை தண்ணீரில் முக்கி கோதுமை மாவினை பிய்த்து வடை செய்தால் கையில் மாவு ஒட்டாமல் வரும்.

விருப்பமுள்ளவர்கள் இஞ்சியை தோல் நீக்கி துண்டுகளாக்கி கோதுமையுடன் சேர்த்து ஆட்டி வடை தயார் செய்யலாம்.

கோதுமையை நனைய வைத்து வடை தயார் செய்வதற்கு பதிலாக அரைத்த கோதுமை மாவினை பயன்படுத்தி வடை தயார் செய்யலாம்.

– ஜான்சிராணி வேலாயுதம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.