கோலம் என்பது நம் இந்திய நாட்டில் பண்டைய காலத்திலிருந்து வரையப்படும் ஒரு கலையாகும்.
கோலமானது பொதுவாக வீடுகளின் முற்றங்களில், கோவில்களில், பூஜை அறைகளில், வரவேற்பு அறைகளில், திருமணம் போன்ற விழா நடைபெறும் இடங்களில் வரையப்படுகிறது.
கோலமானது சாதாரண நாட்களிலும், பண்டிகை காலங்களிலும், திருமணம் போன்ற தனிநபர் விழாக்கள் மற்றும் பொது விழாக்கள் நடைபெறும் நாட்களிலும் போடப்படுகிறது.
கோலங்கள் அரிசி மாவினாலும், கோலப் பொடியினாலும், பூக்களினாலும் வரையப்படுகின்றன.
பொதுவாக காலையில் எழுந்ததும் வாசல் பெருக்கி முற்றம் தெளித்து கோலம் இட்டு வருவது என்பது நம்முடைய பராம்பரியமாகக் கருதப்படுகிறது.
கோலமானது புள்ளிகளை வைத்தோ அல்லது புள்ளிகள் இல்லாமலோ வரையப்படுகின்றது. புள்ளிக் கோலங்கள் தென்னிந்தியாவிலும், புள்ளி இல்லாத ரங்கோலிக் கோலங்கள் வட இந்தியாவிலும் அதிகமாக வரையப்படுகின்றது.
கோலமானது அலங்காரத்திற்காகவும், கொண்டாட்டத்திற்காகவும் மங்களத்தினை குறிப்பதற்காகவும் போடப்படுகிறது. இது அலங்காரக் கலையின் ஓர் அங்கமாகவும் கருதப்படுகிறது.
கோலமானது கிழமைகள், பண்டிகைகள், தெய்வங்கள் ஆகியவற்றிற்கு ஏற்றவாறு வரையப்படுவதும் உண்டு.
கோலங்களின் வகைகள்
வரையப்படும் தன்மையினைப் பொறுத்து கோலமானது கம்பிக் கோலங்கள், புள்ளிக் கோலங்கள் என இரு பிரிவுகளில் வரையப்படுகின்றன.
மாக்கோலம், பூக்கோலம், இழைக்கோலம், ரங்கோலிக் கோலம் என கோலமிடப் பயன்படுத்தப்படும் பொருட்களைக் கொண்டு பிரிக்கப்படுகின்றன.
கம்பிக் கோலங்கள்
கம்பிக் கோலங்கள் என்பவை புள்ளிகள் இல்லாமல் கோடுகளை கம்பிகளாக நீட்டியும், வளைத்தும் அழகான உருவகங்களாக போடப்படுபவை ஆகும்.
புள்ளிக் கோலங்கள்
புள்ளிகள் வைத்து போடப்படுபவை புள்ளிக் கோலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
புள்ளி வைத்துப் போடப்படும் கோலங்களிலும் புள்ளிகளை இணைத்து உருவங்களாக போடப்படுபவை பூக்கள் கோலங்கள் என்றும், புள்ளிகளைச் சுற்றி வளைத்து போடப்படுபவை நெளிவு கோலங்கள், சிக்குக் கோலங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
புள்ளிகள் வைக்கும் முறையிலும் கோலங்களை இரு வகைகளாகப் பிரிக்கலாம். அவை முதல் முறையில் கிடை வரிசையிலும், நெடுகை வரிசையிலும் ஒரே மாதிரியான புள்ளிகளைக் கொண்டவை அதாவது புள்ளிகள் சதுர வடிவில் இருக்கும். (6 புள்ளி 6 வரிசை).
இரண்டாவது முறையில் புள்ளிகளை வைக்கும் முறையைப் பொறுத்து நேர்புள்ளி மற்றும் ஊடுபுள்ளி என இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை நேர்புள்ளி, ஊடுபுள்ளி.
நேர்புள்ளி
இம்முறையில் கிடைவரிசையின் நடுவரிசையில் உள்ள புள்ளிகளிலிருந்து அடுத்த வரிசைப்புள்ளிகள் இருபுறமும் ஒன்று குறைத்து நடுவரிசைப் புள்ளிகளுக்கு நேராக வைக்கப்படும். (7 புள்ளி நேர்புள்ளி 1 வரை).
ஊடுபுள்ளி
இம்முறையில் கிடைவரிசையின் நடுவரிசையில் உள்ள புள்ளிகளிலிருந்து அடுத்த வரிசைப்புள்ளிகள் ஒன்று குறைத்து நடுவரிசைப் புள்ளிகளுக்கு ஊடாக வைக்கப்படும். (9 புள்ளி 5 வரை ஊடுபுள்ளி).
கோலத்தினை வரையும் முறை
கோலமானது சமதளப்பரப்பில் நீர் தெளித்து அரிசி மாவினால் அல்லது கோலப் பொடியால் வரையப்படுகிறது.
கோலமானது கைவிரல்களால் உலர்ந்த பொடியினைக் கொண்டு நிலத்திலிருந்து அரையங்குல உயரத்திலிருந்து வரையப்படுகிறது.
பின் வரையப்பட்ட உருவத்திற்கு அழகு சேர்க்கும் வகையில் வண்ண கோலப் பொடிகளால் வண்ணம் தீட்டப்படுகிறது. சில இடங்களில் உப்பில் வண்ணப் பொடி கலந்து வண்ணம் தீட்டப்படுகிறது.
பூக்களால் அலங்காரம் செய்யப்படும் கோலங்கள் அத்தப்பூக் கோலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
சில இடங்களில் கம்பிக் கோலங்கள் வரையப்பட்டு அதனைச் சுற்றிலும் காவி வண்ணம் வரையப்படுகின்றது. இவ்வாறு வரையப்படுவது இறைவனையும், இறைவியையும் குறிப்பதாகக் கருதப்படுகிறது.
கோலம் வரையவதற்கான விதிமுறைகள்
அதிகாலையில் எழுந்து வீட்டு வாசலை சுத்தம் செய்து தண்ணீர் தெளித்து அரிசிப் பொடியால் கோலமிட வேண்டும்.
கணவனோ வீட்டில் உள்ளவர்களோ வெளியே செல்வதற்கு முன் கோலமிட வேண்டும். குனிந்து நின்று கொண்டுதான் கோலமிட வேண்டும்.
சுபகாரியங்களுக்கு கோலமிடும் போது இரட்டைக் கோடுகள் கொண்டு கோலமிட வேண்டும்.
அமாவாசை, முன்னோர்களுக்கு சிரார்த்தம் ஆகிய நாட்களில் கோலமிடுவதை தவிர்க்க வேண்டும்.
கோலமிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
கோலமிடும் போது குனிந்து நிமிர்வது சிறந்த உடற்பயிற்சி ஆகும். இதனால் இரத்த ஓட்டம் சீராகி உடல் ஆரோக்கியம் பெறும்.
அதிகாலையில் திறந்த வெளியில் கோலமிடும் போது உடலுக்குத் தேவையான பிராண வாயு அதிகளவு கிடைக்கிறது. இதனால் உடலும் உள்ளமும் புத்துணர்ச்சி பெறுகின்றது.
கோலமிடும் போது சிந்தனை ஒருமுகப்படுத்தப்படுகிறது. இது தவத்துக்கு ஈடானது. அதிகளவில் புள்ளி வைத்து போடப்படும் சிக்கல் கோலம் முழு கவனத்தையும் சிதறாமல் வைத்திருக்க உதவுகிறது.
தினமும் கோலமிடுவதால் தெளிந்த சிந்தனை உருவாகிறது. சிக்கலான தருணங்களில் பதட்டம் இல்லாமல் நிதானமாக முடிவெடுக்கும் பக்குவத்தைக் கொடுக்கிறது.
புள்ளிக் கோலங்கள் போடும் போது புள்ளிகளைக் கூர்ந்து நோக்குவதன் மூலம் கண்ணுக்கு பயிற்சி கிடைத்து பார்வைத்திறன் அதிகரிக்கிறது.
ரங்கோலிக் கோலம் போடும்போது ஓவியத் திறன் முழுமையாகக் வெளிக் கொண்டு வரப்படுகிறது.
அரிசி மாவு கோலம் போடுவது எறும்பு உள்ளிட்ட உயிர்களுக்கு உணவாகிறது. எனவே இது தானம் செய்த பலனை அளிக்கிறது.
கோலமானது வரைபவர்களின் கற்பனைத் திறனை அதிகரிக்கச் செய்கிறது.
கோலமிடுவதால் உடல் மற்றும் உள்ளம் ஆகியவற்றிக்கிடையே ஒருங்கிணைப்பு திறனை பெறலாம்.
கோலம் கோடுபவர்களுக்கு பொறுமை, புத்திகூர்மை, ஞாபகசக்தி, செயலில் கவனம் ஆகியவற்றை பரிசாக வழங்குகிறது.
நன்றாக கோலம் வரைபவர்கள் ஆரோக்கியத்துடன் எல்லா வளமும் பெற்று நல்வாழ்க்கை அமையப் பெறுவர் என்பது பெரியவர்கள் கருத்து. ஆகையால் கோலமிட்டு உடல் உள்ளம் புத்துணர்ச்சி அடையப் பெற்று வளமான வாழ்க்கை வாழ்வோம்.
– வ.முனீஸ்வரன்
மறுமொழி இடவும்