அசைவ உணவில் கோழி குழம்பு முக்கியமானது. மீனுக்கு அடுத்தபடியாக நன்மை தரக் கூடியது கோழியே. பிராய்லர் கோழி இல்லீங்க. நாட்டுக்கோழிதான்.
பிராய்லர் கோழிதான் மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும் என்பது நிறையப் பேருடைய அபிப்ராயம். நாட்டுக் கோழியை சமைப்பதற்கு முன்பு நானும் அப்படித்தான் நினைத்தேன். சுவையோடு மட்டுமல்லாமல் ஆரோக்கியத்திற்கும் ஏற்றது நாட்டுக் கோழியே.
நாட்டுக் கோழி வாங்கும் போது 1½கிலோ கிராம் அல்லது அதற்குக் குறைவான எடையுள்ள கோழியைத் தேர்ந்தெடுத்து வாங்கினால் சக்கை போல் இராது. ஒரு தடவை நாட்டுக் கோழி குழம்பு செய்து பாருங்கள் அதன் ருசியே தனி.
இனி சுவையான கோழிக் குழம்பு செய்வது எப்படி? என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கோழி – 1 கிலோ கிராம்
சின்ன வெங்காயம் – 150 கிராம்
தக்காளி – 2 அல்லது 3
இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன்
நல்லெண்ணெய் – தேவைக்கு ஏற்ப
உப்பு – தேவைக்கு ஏற்ப
கொத்தமல்லி இலை – சிறிதளவு
மசால் அரைப்பதற்கு
சீரகம் – ¾ ஸ்பூன்
சோம்பு – ½ ஸ்பூன்
மிளகு – 10 முதல் 15 (எண்ணிக்கையில்)
மல்லி விதை – 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 10
தேங்காய் துருவியது – 4 டேபிள் ஸ்பூன்
செய்முறை
முதலில் கோழியை கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை நான்காக அரிந்து கொள்ளவும். மல்லி இலையை பொடியாக அரிந்து கொள்ளவும்.
வாணலியில் சிறிதளவு நல்லெண்ணெய் விட்டு சீரகம், சோம்பு, மிளகு, மல்லி விதை, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து மிதமான தீயில் வாசம் வர வறுத்து கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து ஒரு நிமிடத்திற்குள் வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
இந்தக் கலவை ஆறியதும் மைய அரைத்து எடுத்துக் கொள்ளவும். குக்கரில் நல்லெண்ணெய் விட்டு சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். இரண்டு நிமிடம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். வதங்கி நன்கு வாசம் வந்ததும் தக்காளியைப் பிழிந்து விடவும்.
அதனோடு சுத்தம் செய்த கோழித் துண்டுகள் மஞ்சள் தூள் அரை உப்பு சேர்த்துக் கிளறி விடவும். கோழியில் உள்ள நீர் வெளியேறி அதன் பச்சை வாசனை போக பத்து நிமிடம் நன்கு வேக விடவும்.
கோழியின் அளவு சிறுத்து நன்கு மணம் வரும் தருவாயில் அரைத்த மசாலா தேவையான தண்ணீர், மீதமுள்ள உப்பு, பொடியாக அரிந்த கொத்த மல்லி இலை ஆகியவற்றைச் சேர்த்து கிளறி குக்கரை மூடி விடவும்.
ஐந்து முதல் ஆறு விசில் வரும் வரைக் காத்திருந்து அடுப்பை அணைத்து விடவும். குக்கரின் பிரசர் முழுவதும் அடங்கும் வரைக் காத்திருந்து பின் எடுத்துப் பறிமாறவும். சுவையும் மணமும் நிறைந்த கோழிக் குழம்பு தயார்.
குறிப்பு
இதே முறையில் காளான் குழம்பு, ஆட்டுக் கறிக் குழம்பு மற்றும் முட்டை குழம்பு செய்யலாம்.
– பிரதிபா செந்தில்
Comments are closed.