கோழி சாப்ஸ் செய்வது எப்படி?

கோழி சாப்ஸ் என்பது கோழிக் கறியிலிருந்து தயாரிக்கக் கூடிய உணவு வகைகள் ஒன்று. அசைவ உணவு சாப்பிடுவர்கள் பெரும்பாலோர் விரும்பி சாப்பிடுவது கோழிக்கறி ஆகும். கோழிக்கறி புரதச் சத்து நிறைந்தது, ஆனால் கொழுப்புச் சத்து குறைந்தது.

கோழிக் கறியிலிருந்து சிக்கன்-65, கோழிக்குழம்பு, கோழி சாப்ஸ் உள்ளிட்ட பல உணவு வகைகள் தயார் செய்யப்படுகின்றன. இனி சுவையான கோழி சாப்ஸ் எப்படி தயார் செய்வது என்பதைப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

கோழிக்கறி – ½ கிலோ கிராம்

சின்ன வெங்காயம் – ½ கிலோ கிராம்

இஞ்சி – சிறிய துண்டு

பூண்டு – 4 பல்

கொத்த மல்லி இலை – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

 

மசால் தயாரிக்க:

கொத்த மல்லி விதை – 5 ஸ்பூன் அல்லது 10 கிராம்

சீரகம் – 2½ ஸ்பூன் அல்லது 5 கிராம்

வத்தல் – 8

மஞ்சள்  பொடி – சிறிதளவு

தாளிக்க:

நல்ல எண்ணெய் – 200 கிராம்

கடுகு – ½ ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

 

செய்முறை:

முதலில் கோழிக் கறியை படத்தில் காட்டியவாறு துண்டுகளாக்கி, அலசிக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை சற்று பெரிய துண்டுகளாக அரிந்து கொள்ளவும். கொத்த மல்லி இலையை சிறிதாக வெட்டிக் கொள்ளவும்.

வெட்டிய கழுவிய கோழித்துண்டுகள்
வெட்டிய கழுவிய கோழித்துண்டுகள்

இஞ்சி, பூண்டு ஆகியவற்றை விழுதாக்கிக் கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கொத்த மல்லி விதை, சீரகம், வத்தல் ஆகியவற்றை வறுத்து அதனுடன் மஞ்சள்  பொடி சேர்த்து மிக்ஸியில் போட்டு மசாலாக்கிக் கொள்ளவும்.

இஞ்சி, பூண்டு மற்றும் அரைத்த மசால்
இஞ்சி, பூண்டு மற்றும் அரைத்த மசால்

 

அடி கனமான பாத்திரத்தில் நல்ல எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பின் அரிந்து வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

பின் அதனோடு இஞ்சி, பூண்டு விழுது சேர்க்கவும். 1 நிமிடம் கழித்து மசால், கோழிக்கறி, உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீரைத் தெளிக்கவும். கோழிக்கறி கலவையானது படத்தில் காட்டியபடி விரவினது போல் இருக்க வேண்டும்.

 

விரவினது போல் உள்ள கோழிக்கறி கலவை
விரவினது போல் உள்ள கோழிக்கறி கலவை

 

அடுப்பை சிம்மில் வைத்து பாத்திரத்தை மூடி வைக்கவும். இடை இடையே மெதுவாக கிளறி விடவும்.

 

கோழிக்கறி வேகும்போது
கோழிக்கறி வேகும்போது

 

எண்ணெய் பிரிந்து வந்ததும் பொடியாக அரிந்து வைத்துள்ள கொத்த மல்லி இலையைத் தூவி இறக்கவும். சுவையான கோழி சாப்ஸ் தயார்.

குறிப்பு:

விருப்பமுள்ளவர்கள் கொத்த மல்லி விதை, வத்தல், சீரகம்,  மஞ்சள்  ஆகியவற்றிற்கு பதிலாக 2¼ ஸ்பூன் மசாலா பொடி சேர்த்து  மசாலா தயார் செய்யலாம்.

நாட்டுக் கோழிக்கறியைக் கொண்டும் மேலே கூறிய வழியில் கோழி சாப்ஸ் தயார் செய்யலாம். நாட்டுக் கோழிக்கறி வேக சற்று கூடுதலாக நேரம் பிடிக்கும்.

கோழிக்கறி சாப்ஸ் பிரியாணி, சாதம் மற்றும் சப்பாத்திக்கு ஏற்றதாக இருக்கும்.

கோழிக்கறி சாப்ஸ் தயார் செய்யும் போது தண்ணீரை சிறிதளவே தெளிக்க வேண்டும். அதுவே கறி வேகுவதற்கு சரியாக இருக்கும்.

ஜான்சிராணி வேலாயுதம்.

Comments are closed.