கோழி முட்டைக்கு தலையுமில்லை கோவிலாண்டிக்கு உறவுமில்லை என்ற பழமொழியை பாட்டி ஒருவர் கூறுவதை கோழிக்குஞ்சு கோமளா கேட்டது.
“என்ன இந்த பழமொழி நம்மைப் பற்றி கூறுகிறதே! இந்த பழமொழிக்கான விளக்கம் கிடைத்தால் நன்றாக இருக்கும்” என்று எண்ணியது.
அப்போது பாட்டி அவ்விடத்தை விட்டு நகர்ந்து வீட்டிற்குள் சென்று விட்டார். கோழிக்குஞ்சும் பாட்டியிடமிருந்து பழமொழியின் பொருளினை அறிந்து கொள்ளும் பொருட்டு பாட்டியின் வருகைக்காகக் காத்திருந்தது.
பாட்டி வெளியே வரவில்லை. மிகுந்த ஏமாற்றம் அடைந்த கோழிக்குஞ்சு கோமளா சாயங்கால வேளையில் காட்டிற்கு திரும்பியது.
எல்லோரும் வட்டப்பாறையில் கூடியிருந்தனர். அப்போது காக்கைக் கருங்காலன் “என்னருமைக் குழந்தைகளே! குஞ்சுகளே! உங்களில் யார் இன்றைக்கான பழமொழியைக் கூறப்போகிறீர்கள்?” என்று கேட்டது.
அப்போது கோழிக்குஞ்சு கோமளா “தாத்தா எனக்கு பழமொழி மட்டும் தெரியும். அதற்கான விளக்கம் தெரியாது” என்று தயங்கியவாறே கூறியது.
காக்கை கருங்காலனும் “கவலைப்படாதே கோமளா, நீ பழமொழியை மட்டும் கூறு. நான் அதற்கான விளக்கத்தைக் கூறுகிறேன்.” என்றது.
கோழிக்குஞ்சு கோமளாவும் “தாத்தா நான் இன்றைக்கு கோழி முட்டைக்கு தலையுமில்லை கோவிலாண்டிக்கு உறவுமில்லை என்ற பழமொழியைக் கேட்டேன்.” என்றது.
காக்கை கருங்காலனும் “ மனிதர்களில் சிலர் ஊரில் யாருடைய உறவும் இல்லாது தனித்து வாழ்வார்கள். இத்தகைய மனிதர்கள் வெறுப்பில் இவ்விதமான பழமொழிகளை கூறுவதுண்டு.” என்றது.
அதாவது கோழி முட்டையின் தலை எது? என்று கேட்டால் எதையும் கூற இயலாது. அது போலவே யாருடைய உறவும் தேவையில்லை என ஊரை விட்டு ஒதுங்கி வந்து அடுத்த ஊரில் கோவில்களில் தங்கி அங்குக் கிடைக்கும் உணவை உண்டு வாழும் மக்கள் பலர் உண்டு.
அவர்களிடம் சென்று உங்களது உறவினர்கள் எங்கு உள்ளனர்?. மனைவி குழந்தைகள் இருக்கின்றனரா? என விசாரித்துப் பார்த்தால் நமக்கு எதையும் கூறமாட்டார்கள்.
ஏனெனில், பல்வேறு மனக்குறையின் காரணமாக வீட்டைவிட்டு ஓடி வந்து விலகி வாழும் இவர்களுக்கு உறவு எது? அவர்கள் யாரையும் உறவு என சொல்வதும் இல்லை. எனவே தான் இந்தப் பழமொழி உருவானது.
இன்னொன்றையும் பேச்சு வழக்கில் இவர்கள் சொல்லிக் கொள்வார்கள் “இருந்த இந்த மடம், இல்லாட்டி சந்தை மடம்”.
அதாவது எங்களுக்கு என எதுவும் சொந்தமில்லை; எங்கு வசதி இருக்கிறதோ அங்கே இருப்போம் என கூறுவதாக இப்பழமொழியை கூறி தங்களுக்கு உறவுகள் இல்லை என ஆணித்தரமாக கூறுவர்.
குழந்தைகளே பழமொழியின் பொருள் எல்லோருக்கும் புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன். நாளை மற்றொரு பழமொழி பற்றிப் பார்ப்போம்” என்று கூறி எல்லோரையும் வழியனுப்பியது.
– இராசபாளையம் முருகேசன் கைபேசி: 9865802942